“நீட்”-ஐ எதிர்த்து OMR-ல் ஒலித்த ஐ.டி ஊழியர்களின் குரல்கள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு “நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய”க் கோரி நடத்திய தெருமுனைக் கூட்டம் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் 15-09-2017 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

NEET Killed Anitha
Scrap NEET

Abolish High College Fees
Down with Private Education Mafia

Ensure Social Justice
Protect Rights of States

Education is Fundamental Right
Stop commmercialisation of Education

ஸ்டெதஸ்கோப் ஏற வேண்டிய கழுத்தில் தூக்குக் கயிறு
அனிதாவை கொன்ற “நீட்”

மருத்துவத் துறையில் கார்ப்பரேட் மயம், காவிமயத்தை ஒழிப்போம்

அனிதாவை காவு வாங்கிய “நீட்”
கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்போம்

பணக்காரனுக்கு மட்டுமே கல்வியா?
சமூகநீதியை உறுதி செய்வோம்

கட்டை விரலை கேட்பது மனுதருமம்
உயிரையே கேட்குது கார்ப்பரேட் தருமம்

அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும்

நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம்!
மாநில உரிமைகளை பாதுகாப்போம்

கல்வி அடிப்படை உரிமை
அதைத் தர வேண்டியது அரசின் கடமை

3% கல்வி வரி வசூல்
பணமெல்லாம் என்ன ஆச்சு?

என்ற முழக்கங்களுடன் ஃபிளெக்ஸ் தட்டிகள் தயாரித்து சுற்றி கட்டப்பட்டிருந்தன.

பழைய மகாபலிபுரம் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோழிங்கநல்லூர் சிக்னலை கடந்து சென்றன. பல பத்தாயிரக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கும் இன்னும் பலர் வீட்டிலிருந்து அலுவலகத்துக்குமான ஓடிக் கொண்டிருந்தனர். இந்த மக்கள் பெருவெள்ளத்தின் ஒரு ஓரமாக சமூக அக்கறை கொண்ட, கிராமப் புற பின்னணி கொண்ட அல்லது உழைக்கும் மக்களின் நலன் நாடும் ஐ.டி ஊழியர்கள் சுமார் 30 பேர் இந்த தெருமுனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஐ.டி சங்க நிர்வாகிகள் சிலர் குழந்தைகள் உட்பட தமது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தது “நீட்” பிரச்சனையின் பரந்து விரிந்த சமூக தாக்கத்தை வெளிப்படுத்தியது.

 • பு.ஜ.தொ.மு, 2015-ம் ஆண்டு டி.சி.எஸ் 25,000 ஐ.டி ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு அமல்படுத்தியபோது, ஐ.டி ஊழியர்களுக்கு ஆதரவாக கும்மிடிப்பூண்டியிலிருந்தும், ஆவடியிலிருந்தும் ஆலைத் தொழிலாளர்கள் வந்து இதே சோழிங்க நல்லூர் சிக்னலில் பிரசுரம் வினியோகம் செய்தார்கள்.
 • கடந்த மே மாதம் சி.டி.எஸ், விப்ரோ நிறுவனங்களில் கட்டாய ராஜினாமா செய்வித்து நடத்தப்படும் ஆட்குறைப்பை எதிர்த்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் சங்க தொழிலாளர்கள் வந்து ஆதரவு தெரிவித்தார்கள்.
 • இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் “நீட்” வடிவிலான தனியார் மய தாக்குதலை எதிர்க்க முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கூடியிருந்தார்கள். விதைக்கப்பட்டிருக்கும் இந்த விதைகள் பயிர்களாக செழித்து வளர்ந்து இந்த ஓ.எம்.ஆர் முழுவதும் ஐ.டி ஊழியர்கள் அனைவரும் ஒட்டு மொத்த சமூகத்தின் நலனுக்காகவும்  தமக்காகவும், தமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், கார்ப்பரேட், பார்ப்பனீய ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
 • நிறைய மண்ணை அலசி அலசி ஒதுக்கி கிடைக்கும் தேடலில் தான் அபூர்வ அதிசய வைரங்கள் கிடைக்கும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்னும் கருத்துக்கு ஏற்ப வைரங்கள் கண்டுபிடித்து பட்டை தீட்டிய தருணம் இந்த தெருமுனைக் கூட்டம்.

சங்க துணைத் தலைவர் வாசுகி சீனிவாசன்

ஐ.டி ஊழியர்கள் பிரிவின் செயலாளர் சுகேந்திரன் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

“நமது சமூகச் சூழலில் ஒரு பெண் படிப்பதே கஷ்டமான விஷயம். அதில் படித்து 1176 மதிப்பெண் எடுப்பது உண்மையிலேயே ஒரு சாதனை. அந்தப் பெண்ணுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள். இந்த அநியாயத்தை நாம் சும்மா விட்டு விடக் கூடாது, எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டும். கல்வி, மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக அரசால் கொடுக்கப்பட வேண்டும்.” என்று சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி சீனிவாசன் பேசினார்.

இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருவது, அதற்கான மருத்துவக் கட்டமைப்பு இல்லாமல் புறக்கணிக்கப்படுவது பற்றியும், நீதித்துறை பிரச்சனைகள் பற்றியும் சங்கத்தின் துணைத் தலைவர் காசிராஜன் உரையாற்றினார்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சரவணன் பேசும் போது

“அனிதா என்ற பெண் நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் நம் பக்கத்து வீட்டு பெண். அனிதாவின் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக எவ்வளவு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பார். இரவு பகலாக உழைத்து எதிர்பார்த்த ரேட்டிங் கிடைக்கவில்லை என்றால் நமக்கு எப்படி மனம் கொதிக்கிறது.

அனிதா உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை போய் போராடியிருக்கிறார். தன் போராட்டத்தின் தோல்வியின் அடுத்த கட்டமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். அனிதா போராடும் போது நான் பிக் பாஸ்தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.

கல்வவியை 3 வகையாக பார்க்கலாம்.

 • விடுதலைக்கான கல்வி – படிப்பு பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து ஒருவர் கல்வி பெற்று முன்னேற முயற்சிப்பது. அனிதா முயற்சி செய்தது அத்தகைய கல்வி.
 • சங்க செயற்குழு உறுப்பினர் சரவணன்

  இரண்டாவதாக, பெற்றோர் வழிகாட்டலில் கொடுக்கப்படும் கல்வி. இது வாழ்வியலுக்கான கல்வி. படித்து என்ன செய்வது என்பதற்கான கல்வி.

 • மூன்றாவதாக மேல்மட்ட மக்களின் ஆடம்பர கல்வி, ஆசைக்கான படிப்பு.

இதில் விடுதலைக்கான கல்வியில்  கடுமையான உழைப்பு  இருக்கிறது. அதற்காகத்தான் சமூநீதிக்கான இட ஒதுக்கீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கல்வி என்பது ஒரு தவம். கவனம் சிதறாமல் குறிக்கோளுக்காக பல தியாகங்கள் செய்து அனிதா போன்ற மாணவர்கள் படித்திருக்கின்றனர். அதை “நீட்” என்ற தேர்வு மூலம் குப்பையில் போடுவது எந்த வகையிலும் சரியில்லை.

மேலும், இந்தியா முழுவதும் ஒரே நாடு கிடையாது. ஒருங்கிணைக்கப்பட்ட பல மாநிலங்கள், பல கலாச்சாரங்கள். இங்கு உள்ள மக்கள் கொடிகாத்த குமரனையும், வ.உ சிதம்பரனாரையும் படித்தோம். இப்போது பாடத் திட்டத்தில் அது சேர்க்கப்படுமா? நம் சொந்த வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், வெளியில் இருக்கும் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் தெரிந்து கொண்டு என்ன செய்வது?

கல்வி, மருத்துவம் அடிப்படை தேவைகள். இதை அரசு அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டும். எனவே, “நீட்” தேர்வு மூலம் மருத்துவராவதன் தகுதியை நிர்ணயிப்பது என்பது பொருளற்ற ஒன்று. இந்தப் போராட்டத்தை விட்டு விடாமல் தொடர வேண்டும்.

இதை நாம் தடுக்க வேண்டும், தொடர்ந்து போராட வேண்டும்.” என்று பேசினார்.

சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுரேஷ் சக்தி முருகன் சிறப்புரை ஆற்றினார்

சங்கத்தின் சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன்

சங்கத்தின் சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன்

“நீட்” தேர்வை திணித்து அனிதாவின் மரணத்துக்கு பொறுப்பாக இருந்தவர்கள் மத்திய அரசு, உச்சநீதிமன்றம், மாநில அரசு என்று வலுவாக ஆணித்தரமாக பேசினார். அதைத் தொடர்ந்து “நீட்” தேர்வு முறையின் யோக்கியதை, அதனால் பெருகப் போகும் வணிகமுறையிலான கோச்சிங் நிலையங்கள், அதில் பணம் கட்டி படிப்பவர்களால் மட்டும்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதை விளக்கினார்.

“நீட்” தேர்வு நடத்துவதில் முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டார்.

அனிதாவுக்கு சீட் கிடைக்கவில்லை, அனிதா தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்பதைத் தாண்டி இது பெரும்பான்மை மக்களின் மருத்துவ, சுகாதாரம் பற்றியான பிரச்சனை என்று விளக்கினார்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுக்கு ரூ 8,000தான். ஆனால், தனியார் கல்லூரிகளில் பல 10 லட்சங்கள் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த “நீட்” கொண்டு வருகிறோம் என்பது அயோக்கியத்தனம். இப்போது அவர்கள் செய்யவிருப்பது மாநில பாடத் திட்டத்தில், அரசுப் பள்ளியில், கிராமங்களில் இருந்து படித்து விட்டு வரும் மாணவர்களை ஒதுக்கி விட்டு நகர்ப்புற, பணக்கார மாணவர்களை மட்டும் மருத்துவப் படிப்பில் சேர்க்கும் உத்தி.

இதனால், நாமக்கல் பிராய்லர் கோழி பள்ளிகள் ஒழிந்து விடும் என்கிறார்கள். ஆனால் ஏற்கனவே 11, 12 வகுப்புகளோடு கூடவே “நீட்” பயிற்சிக்கு என்று தனியாக வசூலித்து பயிற்சி ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சேரும் மாணவர்களுக்கு படிப்பை முடித்ததும் 3 ஆண்டுகளுக்கு அரசு ஒதுக்கும் பகுதிக்குச் சென்று பணிபுரிய வேண்டும் என்ற கடப்பாடு வாங்கப்படுகிறது. அதனால்தான், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் வலுவாக செயல்படுகின்றன. பல லட்சம் செலவழித்து “நீட்” மூலம் கல்லூரியில் படிக்க வருபவன் எங்கு போவான்? அப்பல்லோ, குளோபல் போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குத்தான் வேலைக்குப் போவான்.

இங்கு ஆட்டோ ஓட்டுனர்கள், வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் போன்ற பெரும்பான்மை உழைக்கும் மக்களோடு நின்று நாம் இந்த விஷயத்தைப் பார்க்க வேண்டும். இது ஏதோ அனிதாவின் பிரச்சனை, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் பிரச்சனை இல்லை, இது நம் ஒவ்வொருவரின் உடல்நலம் சார்ந்த, மருத்துவம் பெறுவதன் உரிமை சார்ந்த பிரச்சனை.
குடிநீர், கல்வி, மருத்துவம் போன்றவை மக்களின் அடிப்படை உரிமைகள். அதை அரசே வழங்க வேண்டும் என்பதுதான் நியாயம். கடந்த 20 ஆண்டுகளால தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் அடிப்படையில் கல்வியையும், மருத்துவத்தையும் தனியார் லாப வேட்டைக்கு திறந்து விட்டிருக்கின்றார்கள். அதன் அடுத்த கட்டம்தான் இந்த “நீட்” தேர்வு.

நாம் உடனடியாக வைக்க வேண்டிய கோரிக்கைகள்

 • “நீட்” தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும்
 • கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
 • கல்வியும் மருத்துவமும் அடிப்படை உரிமைகள், அதை அரசே அனைவருக்கும் சமமாக, இலவசமாக, தரமாக வழங்க வேண்டும்.
சங்கத்தின் பொருளாளர் ராஜதுரை

சங்கத்தின் பொருளாளர் ராஜதுரை

இதற்காக நாம் போராட வேண்டும், மக்கள் மத்தியில் இந்த விஷயங்களைக் கொண்டு செல்ல வேண்டு்ம என்று பேசினார்.

இறுதியாக சங்கத்தின் பொருளாளார் ராஜதுரை நன்றியுரை ஆற்றினார். சகோதரி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் போராடி கொண்டிருக்கின்றனர். நாமும் விதைகள் போல இங்கு கூடி பேசிக் கொண்டிருக்கிறோம். இதை செடியாக, மரமாக வளர்த்து பெரிய மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சுமார் 2 மணி நேரமாக நடந்த தெருமுனைக் கூட்டம் சுமார் 8.30 மணியளவில் நிறைவடைந்தது.

இன்றைக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டு கொட்டப்படும் பணத்தைக் கொண்டு ஓ.எம்.ஆர் முழுவதும் நவநாகரீக உணவகங்களும்,  விலை உயர்ந்த ஆடை விற்பனை கடைகளும், உடற்பயிற்சி நிலையங்களும் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒரு மாலையில் நேரம் செலவழிக்க அவற்றுக்கு அருகிலேயே வானை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் அலுவலகங்களுக்குள் அடிமைகளாக, நமது மூளையையும் உடலையும் குறுக்கிக் கொண்டு உழைக்கிறோம்.

தமது பணி சார் நலன்களையும், பணி பாதுகாப்பையும், பணியிடத்தில் உரிமைகளையும் பாதுகாக்க போராடும் ஐ.டி ஊழியர்கள், தமது gratuity தொகை ஏன் குறைவாக இருக்கிறது என்று நிர்வாகத்தின் நயவஞ்சகத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கும் ஊழியர்கள், அவ்வளவு கஷ்டப்பட்டு ரேட்டிங் வாங்கி ஆன் சைட் போய் சம்பாதிக்கும் பணத்தை யாரிடம் கொடுக்கிறோம் அதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

குழந்தையை படிக்க வைக்க பல லட்சம் செலவழிக்க வேண்டும். உடல் நிலை சரியில்லாமல் ஆனால் பல லட்சம் செலவழித்து மருத்துவம் பார்க்க வேண்டும். இந்த எலி ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்க அலுவலகத்தில் மேலும் மேலும் அழுத்தம், ரேட்டிங் தேடி மேலும் மேலும் ஓட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமா?

நமது அடிப்படை தேவைகளுக்கு, நமது குழந்தைகளின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்கு உத்தரவாதத்தை பெறுவதற்குத்தானே வருமானத்தை நாடுகிறோம். அனைவருக்கும் தரமான, இலவச கல்வி, அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம், குடிநீர், பொது கட்டமைப்பு என்பதுதானே நியாயமானதாக, அறிவுடைமையாக இருக்க முடியும்.

பெரும்பான்மை மக்களுக்கு ‘வளர்ச்சி’யில் என்ன பங்கு என்று பரிசீலிக்க வேண்டும். எல்லோருக்கும் மருத்துவம், கல்வி, நல்ல வருமானம் இருந்தால் உள்நாட்டு சந்தை வளரும். தொழிலும், உற்பத்தியும், கண்டுபிடிப்புகளும் செழிக்கும்.

நாம், நமது நாடு, நமது மக்கள் என்ற பற்றோடு, அனைவரையும் அணைத்து செல்லும் வளர்ச்சிதான் அறிவுடைமை. புல்லட் டிரெய்ன் விட்டு அதில் பயணிக்க , சென்னை மெட்ரோ டிரெய்ன் போல ரூ 40 அல்லது ரூ 100 கட்டணம் வசூலித்தால் அது யாருக்காக?

நீட் என்பது மருத்துவக் கல்வியில் புல்லட் டிரெயின் விடுவது போன்றது. பணம் இருப்பவனுக்கு கல்வி, இல்லாதவனுக்கு கல்வி இல்லை என்ற நவீன சமூக அநீதியின் வெளிப்பாடுதான் “நீட்” இது சாதி அடிப்படையிலான சமூக நீதிக்கு மட்டுமின்றி பொதுவான சமூக நீதிக்கும் எதிரானது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/voices-of-it-employees-against-neet/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
செவிலியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

போராடுபவர்களுக்கு பதில் சொல்ல வக்கற்ற "எடப்பாடி" அரசு போலீசை வைத்து மிரட்டுகிறது! நம் உயிரைக் காக்க இரவு பகலாக உழைக்கும் செவிலியர்களின் உரிமைகளை மீட்க அனைவரும் வீதியில்...

ஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – பாகம் II

இது உங்களுக்கு ஓரளவு தெளிவை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு எந்த வழியிலாவது, பணி நீக்கம் செய்வது தெரிந்தால், தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை...

Close