தொழிலாளி வர்க்கத்தின் திருநாள் எது?

ம்மைப் போன்ற தொழிலாளர்கள் உண்மையிலேயே உணர்வுபூர்வமாக அகமகிழ்ந்து தீபாவளியை கொண்டாட முடிகிறதா, அல்லது நுகர்வு கலாச்சாரமும் பாரம்பரியமாக வந்த பழக்கமும் கொண்டாடச் சொல்லி நம்மை கட்டாயப்படுத்துகிறதா?

வெரிசானிலும் ஐநாடிக்ஸ்-லும் பவுன்சர்கள் வைத்து வேலை பறிப்பு, விப்ரோவிலும், காக்னிசன்டிலும் பல்வேறு வழிகளில் சதித் திட்டம் மூலம் நீண்ட கால ஊழியர்களை ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தல் என்று ஐ.டி துறை ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்த்தப்படுகின்றனர். இன்னொரு பக்கம் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் சொற்ப சம்பளத்துக்காவது வேலை கிடைக்காத நகரத்தின் தெருக்களில் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வேலை இழந்த, வேலை கிடைக்காதவர்களின் குடும்பங்களில் வெளியில் ஒளிமயமாக இருந்தாலும் உள்ளத்தில் இருள் சூழ்ந்திருக்காதா?

ஒரு மாதத்திற்கு மேலாக, தங்களது நியாயபூர்வமான உரிமைகளை நிறைவேற்ற கோரி போராடி கொண்டிருக்கும் ஓரகடம் யமஹா தொழிலாளர்களின் வீடுகளில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக கொண்டாடப்படும் தீபாவளியானது அந்தத் தொழிலாளர்களின் மனதில் ஒளிமயமாக இருக்குமா?

யாருக்கு உண்மையில் இது ஒளிமயமாக இருக்கிறது? தினம் தினம் உயர்த்தப்படும் பெட்ரோல் விலை, அத்தியாவசிய பொருட்களின் அநியாய விலை உயர்வு, கல்விக்கும் காசு மருத்துவத்துக்கும் காசு, அவ்வளவு ஏன் மனிதனின் அத்தியாவசிய உரிமையான தண்ணீரே கல்லா காட்டும் கார்ப்பரேட் வசமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில், கார்ப்பரேட்டுகளுக்கு வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கிறது.

தீபாவளி ஷாப்பிங்க்காக வாடிக்கையாளர்களை வசப்படுத்தி கல்லா நிரப்பும் முதலாளிகளுக்கு கொண்டாட்டம் இருக்கிறது.

தீபாவளி ஷாப்பிங்க்காக வாடிக்கையாளர்களை வசப்படுத்தி கல்லா நிரப்பும் முதலாளிகளுக்கு கொண்டாட்டம் இருக்கிறது.

’சந்தோசம் நெஞ்சில் எழுந்திட தீபாவளி வந்தது, நன்மைகள் யாவும் நடந்திட தீபாவளி வந்தது ….’ என்ற பாடலுடன் பட்டு வேட்டி மற்றும் பலவண்ண உடைகளுடன் தனது கடைக்கான விளம்பரத்திற்காக குத்தாட்டம் போடுகிறார் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர். அவரின் நடையுடை பாவனைகளை ரசித்தும், அவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டும் தீபாவளியை வரவேற்கிறார்கள் வடிவேல் பாலாஜி, ராமர், மற்றும் இன்னும் பல சின்னத்திரை பிரபலங்கள். இதுபோலவே இன்னும் பிற ஜவுளி நிறுவனங்களும் தமது கடை விளம்பரங்களுக்கு சினிமா பிரபலங்களை குறிப்பாக நடிகைகளையே ஆட வைத்து ஆடை விளம்பரம் செய்து வருகிறார்கள் கடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக.

தி லெஜண்ட் அவர்கள் அந்த விளம்பரத்தின் இறுதிக் காட்சியில் டிவி நட்சத்திரங்கள் அனைவரையும் நிற்க வைத்து விட்டு தான் மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார். அது போல அந்த விளம்பர படப்பிடிப்பின் போதும் ஒப்பனை செய்து கொள்வதற்காக கண்டிப்பாக நாற்காலியில் பல முறை அமர்ந்திருப்பார் என்றே நம்புவோம்.

ஆனால் நமது லெஜண்ட் கடையிலும் சரி, அதை ஒத்த பிற பேரங்காடிகளில் வேலை செய்யும் தொழிலாளி வர்க்கம் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது என்பது நம் அனைவருக்கும் மக்களுக்கு தெரிந்த விஷயம் தான். நாள் முழுவதும் நின்றே வேலை செய்யும் இவர்களிடம் சென்று, ’சந்தோசம் நெஞ்சில் எழுந்திட தீபாவளி வந்ததா?’ என்று கேட்டால் எப்படி இருக்கும்? ஏதோ, சேமித்த சொற்ப காசில் ஊரோடு சேர்ந்து அவர்களும் தீபாவளி கொண்டாடி கொள்வார்கள். ஆனால், தீபாவளி என்பது அவர்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி நிறைந்த திருநாளாக இருக்க முடியுமா?

ஐ.டி துறை தொழிலாளர்களான நமது Role ஆனது Rolling Chair உடன் ‘பிணைந்தே’ இருப்பதை கண்டு அறச் சீற்றம் அடையும் மாண்புமிகு மனித வளம், ‘ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை Break எடுத்து கொள்ளவும்’ என்றவாறு அவ்வப்போது ஆரோக்கிய அறிவுரைகளை (Health Tips) மின்னஞ்சலில் அனுப்பி தங்களது மனிதாபிமான பண்பை விளம்பரம் செய்து கொள்கிறார்கள். மனித வள அதிகாரிகளின் மனிதாபிமானம் பற்றி, அவர்களால் Layoff செய்யப்பட்டு நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் தொழிலாளர்களிடம் கேட்டால், மிகவும் ‘சிறப்பாகவே’ கூறுவார்கள் என்று நினைக்கிறேன்.

சம்பிரதாயத்திற்காகவாவது கார்ப்பரேட் நிறுவனங்களில் இவ்வாறான ஆரோக்கிய அறிவுரைகள் வழங்கப்படுகிறது, ஆனால் தி லெஜண்ட்  போன்ற பேரங்காடி கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச அடிப்படை உரிமையான அமர்வது என்பதே தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறையில் உள்ளது. இவர்களுக்கு இருக்கையில் அமர்வதற்க்கே அனுமதி இல்லை எனும்போது ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை கொண்டாடுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

பணியின் போது அமர்வதற்கான உரிமையை தொழிற்சங்கத்தின் மூலம் போராடி வென்றுள்ளார்கள் கேரளா மாநில தொழிலாளர்கள்.

சரவணா ஸ்டோர்ஸ் முதலாளிக்கும், கார்ப்பரேட் பண முதலைகளுக்கும் தீபாவளி புதிய ஆண்டின் தொடக்கமாக, புதிய லாபத்தின் குவிப்பாக இருக்கலாம். ஆனால், தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு நாளை குறிப்பிட்டு, அந்த நாளை கொண்டாடுவதில் ஒரு பொருள் இருக்குமேயானால், அது நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த நாளாக இருக்கலாம். அல்லது தொழிலாளி வர்க்கமாக உரிமைகளை வென்றெடுத்த நாளாக இருக்கலாம். அதுதான் உண்மையில் உள்ளத்தில் ஒளி வீசும், மகிழ்ச்சி பொங்கும் கொண்டாட்டம்.

எட்டு மணி நேர வேலை என்ற உரிமையை நடைமுறைப் படுத்த வேண்டி சிகாகோ வில் போராடும்போது கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தின் நினைவு நாளை மே 1 அன்று தொழிலாளர் தினமாக நாம் கொண்டாடுகிறோம்.

அதேபோல, தோழர் லெனின் தலைமையில் ரஷ்யாவில் 1917 நவம்பர் 7 அன்று தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய புரட்சி நாளை நாம் கொண்டாடுகிறோம்.

தொழிலாளி வர்க்கத்தின் திருநாள் முதலாளியின் கல்லா நிரப்பும் கொண்டாட்டங்களில் உள்ளதா அல்லது அதன் விடுதலையை நோக்கிய பயணத்தின் சாதனைகளில் உள்ளதா என்பது நம் முன் இருக்கும் கேள்வி..

ராஜதுரை, பொருளாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/when-working-class-celebrates/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
புதிய தொழிலாளி – பிப்ரவரி 2017 பி.டி.எஃப்

வென்னீரு எதற்கு? பன்னீரு எதற்கு? மெரினாவே வேண்டும் நமக்கு! , சுரங்கத்தில் வேலை வேண்டுமா? வீட்டை காலி பண்ணு!, காடு வா வா என்கிறது, கவர்மெண்டு போ...

முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று!

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஏழை-எளிய மக்கள் தங்கள் சொந்த அரசை நிறுவிக் கொண்டதுதான், ரசியப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட்...

Close