உச்சநீதிமன்றம் கோரும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது யார்?

“‘நீட்’ தேர்வால் தற்போது நிலவும் சூழலில் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு உண்டு” எனவும், “இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துகிற வகையில், சட்டம்-ஒழுங்கை கெடுக்கிற வகையில், யாரேனும் எந்த வகையிலான முழு அடைப்பிலும் (பந்த்), செயலிலும் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

(சட்ட) ஒழுங்கை பராமரித்து சமூகத்தில் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்யும் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றி சமூக நலனுக்காக போராட தனது அரசுப் பள்ளி ஆசிரியை பதவியை தூக்கி எறிந்த சபரி மாலா சொல்வதை இதில் கேளுங்கள்.

மேலும், இந்த (சட்ட) ஒழுங்கை அமல்படுத்தும் போலீசின் யோக்கியதையை சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த “நீட்”-க்கு எதிரான போராட்டத்தில் பார்த்தோம். அதில் துணை ஆணையர் ஒருவர் சக போலீஸ் அதிகாரி ஒருவரை பாலியல் ரீதியாக தாக்குவது வீடியோவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இதைப் பார்க்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய உறவினர் பெண் போலீஸ் ஒருவர் பேசியது நினைவுக்கு வந்தது.

“நான் சின்ன வயசுல வைஜயந்தி ஐ.பி.எஸ் மாதிரியான படங்களை பார்த்து வாழ்ந்தா இப்படி வாழணும்னு ஆசைப்பட்டு போலீஸ் வேலைக்கு வந்தேன். அந்தப் படத்தில் விஜயசாந்தி செய்வது போல தப்பு பண்றவன எல்லாம் ரோட்டில விட்டு அடிக்கணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், உண்மையில் அத்தகைய குற்றவாளிகளில் பலர் போலீஸ் வேலையில்தான் இருக்கிறார்கள் என்று இப்பதான் தெரியுது” என்றார் அவர்.

போராட்டங்களில் கலந்து கொள்ளும் பாதுகாப்பு உணர்வுடன் எந்தப் பெண்ணாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுத்து விட்டு வந்து விட முடியுமா?

சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பாலியல் ரீதியாக சீண்டும் வக்கிரம் நிரம்பிய சில காவலர்களும் அதிகாரிகளும் துறையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “எங்க வீட்டுக்கு வருவதற்கு ஒரு சக காவலரிடம் பைக்கில் கொண்டு செல்ல உதவி கேட்ட போது, அதையே அவன் சீண்டலுக்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டான்” என்று சொல்லி அழுதார்.

இது கோவை காவல்துறை பெண் துணை ஆணையரின் பிரச்சனை மட்டுமோ, என்னிடம் பேசிய உறவினர் பெண் போலீசின் பிரச்சனையோ மட்டும் இல்லை. காவல் துறையில் பணிபுரியும் பெண்காவலர்கள் பெரும்பான்மையினரின் நிலை இவ்வாறுதான் உள்ளது. போலீஸ் ஸ்டேசனில் இரவு பணிக்கு பாட்டியை துணையாக கூட்டிச் செல்லும் பெண் போலீசைக் கூட எனக்கு தெரியும்.

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா ஒரு கள்ளச்சாராய கும்பலை பிடித்து கைது செய்த தகவலை தனது மேலதிகாரிக்கு தெரிவித்த போது, பிடிபட்ட சாராயம் ஓரிரு அட்டை பெட்டிகள்தான் என்று காட்டி சிறிய வழக்காக பதிவு செய்யுமாறு கூறியிருக்கிறார். மேலதிகாரியின் உத்தரவை ஏற்று அவர் ஒரு சிறு பகுதியைத் தவிர எஞ்சிய மது பாட்டில்களை அழித்து விட்டிருக்கிறார். இதை அறிந்த போலீஸ் அதிகாரி அனைவர் முன்பும் அவரை சகட்டுமேனிக்கு திட்டி கை ஓங்கி அடிக்க வந்திருக்கிறார். இந்தச் செய்தி அப்போது நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளி வந்தது.

சாமி படத்தில் “நான் போலீஸ் இல்ல, பொறுக்கி” என விக்கிரம் வசனம் பேசுவார். உண்மையில் போலீஸ் என்றாலே பொறுக்கி என்பதை இந்தச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

போலீஸ் வேலைக்கு எடுக்கப்படும் நபர்களுக்கு பொது மக்களை மனிதர்களாக மதிக்காமல் ஒடுக்குவதற்கான பயிற்சிகளை அளிக்கிறார்கள். பணிக் காலத்திலும் உயர் அதிகாரிகளால் காவலர்கள் விலங்குகள் போல நடத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களிடம் தூண்டி விடப்பட்டு, ஓங்கி நிற்கும் மிருகத் தன்மைதான் இப்படி சக ஊழியர் என்றும் கூட பார்க்காமல் பாலியல் சீண்டல்களில் ஈடுபட தூண்டுகிறது. சக ஊழியர்களுக்கே இந்த கதி என்றால் காவல் நிலையத்தில் சிக்கிக் கொண்ட சாதாரண பெண்களின் நிலை என்ன என்று சொல்ல வேண்டாம். இருட்டிய பிறகு பெண்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று நீதிமன்ற வழிகாட்டலே உள்ளது.

இந்த போலீசுக்குத்தான் போராட்டங்களால் சமூக ஒழுங்கு பாதிக்காமல் பாதுகாப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.  அன்றாடம் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி செய்யும் போக்குவரத்து கான்ஸ்டபிள் தொடங்கி, பான்மசாலா கடையில் கமிசன் வாங்கும் உயர் அதிகாரி வரை மிகப் பெரும் அமைப்பாக்கப்பட்ட குற்றக் கும்பல்தான் ஒழுங்கை பாதுகாக்கிறதாம்.

மெரினா போராட்டம்

ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டத்துக்காக மெரீனாவில் கூடிய லட்சக் கணக்கான இளைஞர்கள் தம்மைத் தாமே ஒழுங்கு படுத்திக் கொண்டு உணவு வினியோகம், துப்புரவு பணி, பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றை செய்தார்கள்

மாறாக ஜல்லிக்கட்டு எதிர்ப்புப் போராட்டத்துக்காக மெரீனாவில் கூடிய லட்சக் கணக்கான இளைஞர்கள் தம்மைத் தாமே ஒழுங்கு படுத்திக் கொண்டு உணவு வினியோகம், துப்புரவு பணி, பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றை செய்தார்கள். பாதுகாப்பு உணர்வுடன் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் எந்த அச்சமும் இன்றி போராட்டக் களத்துக்குள் சென்று வந்தார்கள், அங்கேயே தங்கி போராடினார்கள். இப்போது “நீட்”-க்கு எதிரான போராட்டத்திலும் சமூக பொறுப்புடன் ஆண்களும், பெண்களுமாக இணைந்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • இந்த போராட்டங்களில் கலந்து கொள்ளும் பாதுகாப்பு உணர்வுடன் எந்தப் பெண்ணாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுத்து விட்டு வந்து விட முடியுமா?
  • போராடும் பொதுமக்கள் மீது நாய் போல பாய்ந்து பிறாண்டும் போலீசை பார்த்து மக்களின் போராடும் உரிமையை மதிக்குமாறு உச்சநீதிமன்றம் என்றாவது உத்தரவிட்டிருக்கிறதா?
  • உடன் பணிபுரியும் பெண் போலீஸ் மீது பாலியல் தாக்குதல் நடத்திய இந்த கோவை போலீஸ் அதிகாரி மீது தானே முன் வந்து நடவடிக்கை எடுக்குமா?
  • அல்லது ஜி.எஸ் மணி போன்ற வழக்கறிஞர்கள் யாராவது அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகுவார்களா?
  • ரொம்ப அம்பலப்பட்டால் துறை ரீதியாக விசாரணை, இன்னும் போராட்டம் வலுத்தால் வேறு இடத்துக்கு மாற்றல் என்று சம்பவத்தை மக்கள் மறக்கும் வரை இழுத்தடிப்பார்கள். ஒரு சில மாதங்களுக்கு இத்தகைய குற்றவாளிகளுக்கு பதவி உயர்வும் கொடுப்பார்கள்.

உண்மையில் போலீசை மக்கள் மீது ஏவிவிடும் படையாக உருவாக்கி பாதுகாப்பதுதான் இவர்களது நோக்கம், இது போன்று குற்றமிழைக்கும் போலீசை அவர்கள் தண்டிப்பது பற்றி பேசவே வேண்டியதில்லை.

இதே வீடியோவை ஒரு கிராமத்து விவசாயியிடமோ தொழிலாளியிடமோ காட்டினால், இந்தப் பொறுக்கியை அந்தப் பெண்ணை விட்டே செருப்பால் அடிக்க வைக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லுவார். அந்த நியாய உணர்வும் நீதியும் நமது நீதிமன்றங்களிடம் இருக்க முடியாதுதான்.

ஆனால் இன்று அதிகாரம் இருப்பது சட்ட ஒழுங்கை பாதுகாக்க உத்தரவிடும் நீதிமன்றத்திடமும், அதை அமல்படுத்தும் இத்தகைய பொறுக்கி போலீசிடமும்தான். விவசாயிகளும் தொழிலாளர்களும் அதிகாரத்தில் அமருவதுதான் இன்றைய சீரழிவுகளுக்கு தேவையான தீர்வு.

– மகேந்திரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/who-guards-social-order/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பத்திரிகை செய்தி : விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகளை ஆதரித்து மெப்ஸ் (MEPZ) வளாகத்தில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்களும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

எமதருமை ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்களே! இன்னும் என்ன தயக்கம்?

பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர் பிரிவின் உரிமைப்போராட்டம் விப்ரோவுக்கு மட்டுமல்ல, அனைத்து ஐ.டி நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடியதே! பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர் பிரிவில் உறுப்பினராக சேருங்கள்!. நமது...

Close