சி.டி.எஸ் வேலை நீக்கத்திலும் விவசாயிகளின் துயரிலும் லாபமீட்டுவது யார்?

மிழக விவசாயிகள் டில்லியில் கடந்த ஒரு மாதமாக போராடுகிறார்கள். ஆரம்பத்திலிருந்து அரை நிர்வாணமாக போராடினார்கள். சமீபத்தில் ஒரு நாள் முழு நிர்வாணமானார்கள். முன்னொரு நாள் பாதி மொட்டையடித்துக் கொண்டும் பாதி மீசையை சிரைத்துக் கொண்டும் போராடினார்கள். பிறகு மீதியையும் மழித்துக்கொண்டு போராடினார்கள். ஒரு நாள் பிணமாகக் கிடந்தார்கள். மற்றொரு நாள் தங்களை பிளேடினால் வெட்டிக்கொண்டார்கள். ஒரு நாள் மண்சோறு சாப்பிட்டார்கள். ஆம். விவசாயிகள் தரையில் சாதத்தை வைத்து குழம்பு ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டார்கள்.

மண்சோறு சாப்பிடும் விவசாயிகள்

ஏன்? காவிரியில் தண்ணீர் விடவில்லை, மழையில்லை, விவசாயம் மேலும் மேலும் நட்டகரமாகி விட்டது. எனவே விவசாயத்தைச் சார்ந்த வாழ்வு இல்லை. உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும் மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது; கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது; வறட்சி நிவாரணம் கொடுக்க மறுக்கிறது; வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க மறுக்கிறது.

இவற்றிற்காகத்தான் விவசாயிகள் போராடுகிறார்கள். பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் தவிர மற்ற தமிழக மக்கள் எல்லோரும் இந்தப் போராட்டத்தை அக்கறையுடனும் கவலையுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மற்ற மாநில விவசாயிகளும் குரல் கொடுக்கிறார்கள்.

நமது சொந்தத் துறையான ஐடி யை எடுத்துக் கொண்டால், ஐ.டி ஊழியர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள் : வாடிக்கையாளர்கள் செலவை வெட்டுகிறார்கள், ப்ராஜக்ட்களை ரத்து செய்கிறார்கள், நிறுவனங்கள் லாபத்தை தக்க வைத்து அதிகரிக்க ஆட்டோமேசன் செய்கிறார்கள்; அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வேலை பறிப்பு செய்கிறார்கள்; ராஜினாமா கொடுக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள்; அனைவருக்கும் வேலைப்பளுவை கூட்டுகிறார்கள். எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. குடும்பப் பொறுப்புகள் நெஞ்சை அழுத்துகின்றன.

அலைச்சலான நகர வாழ்க்கை!

மாணவர்களை எடுத்துக் கொள்வோம். கல்லூரியில் இடம் கிடைப்பதைப் பற்றி கவலை, ஏறிக்கொண்டேயிருக்கும் கல்விக் கட்டணங்கள், வேலைக்கான எந்த உத்திரவாதமும் இல்லாமை என்று அவர்களின் நிலைமை மோசமாகிக் கொண்டு போகிறது.

சிறு வணிகர்களை சிறு தொழில்முனைவோர்களை எடுத்துக் கொள்வோம். பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, டிஜிட்டல் பரிமாற்றம் என்று அவர்களின் வாழ்வாதாரமும் கடுமையான நெருக்கடியில் சிக்கி வருகிறது.

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

இவ்வாறாக மக்களில் பெரும்பாலோனோர் மேலும் மேலும் கசக்கிப் பிழியப்படும் போது ஒரு பிரிவினரின் வாழ்க்கை மட்டும் மேலும் மேலும் வளமடைந்து கொண்டிருக்கிறது. மோடி அரசின் கொள்கைகள் இந்தப் பிரிவினரை மேலும் மேலும் பணக்காரர்களாக்கும் வகையில் வகையில் இருக்கின்றன.

இந்தப் பிரிவின் வாழ்நிலையைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பு ஏப்ரல் 12-ம் தேதியிட்ட எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டில் காணக்கிடைக்கிறது.

மும்பையின் ஒங்கார் என்ற அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திலிருந்து ஒரு குடும்பம் 232 கோடி ரூபாய் விலை கொடுத்து மொத்தமாக 50,000 சதுர அடிகளைக் கொண்ட 10 வீடுகளை வாங்கியிருக்கிறது. ஒங்கார் ரியல்டர்ஸ் & டெவலப்பர்ஸ் என்று கம்பெனியின் மூலம் கட்டப்படும் இந்த மூன்று கோபுர அடுக்குமாடி வீடுகள் திட்டத்தில் 3,000 சதுர அடியிலிருந்து 18,000 சதுர அடி கொண்ட 15 முதல் 100 கோடி ரூபாய் வரை விலையாகக் கொண்ட 400 அபார்ட்மென்ட்கள் உள்ளன.

ஒங்கார் 1973 அபார்ட்மென்ட்டின் ஒரு படுக்கையறை

இதில் 70% வீடுகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. அவற்றை வாங்கியவர்கள் யார்? நிதி, வங்கி, நகைக்கடை, கல்வி, தொலைபேசி துறைகளின் முக்கிய புள்ளிகள் தான்.

போராடும் விவசாயிகளிடமிருந்தும், மாதச் சம்பள ஊழியர்களிடமிருந்தும், சிறு வணிகர்களிடமிருந்தும் கறக்கப்படும் பணம் எங்கே போகிறதென்று இப்போது தெரிகிறதா. நிதி முதலைகளுக்கும், நகைக்கடை சேட்டுகளுக்கும், தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கும், தொலைதொடர்புத் துறை திமிங்கலங்களுக்கும் போகிறது.

ஒரே கூட்டுக் குடும்பம் வாங்கிய அந்த 10 சூப்பர் ப்ரீமியம் அபார்ட்மென்டுகளுக்கான விலையான 232 கோடி ரூபாய் என்பது பத்திரப்பதிவு செலவுகள் சேர்க்காதது. அவற்றிற்கு இன்னும் சுமார் ரூ 15 கோடி வேண்டும். இதற்கும் மேலாக அந்த அபார்ட்மென்டுகளை தங்களது விருப்பத்திற்கு ஏற்றாற் போல் சிறப்பு மாற்றங்களுடன் கட்டிக் கொள்வதற்கான செலவு தனி. அந்த பத்து வீடுகளில் ஐந்தை வெற்றுக் கூடுகளாகத்தான் வாங்குகிறார்கள். அதை அவர்களின் விருப்பப்படி முழுமையாக்குவதற்கும் பல கோடிகள் வேண்டும்.

கோடிகளில் விற்கப்படும் வீடுகளை வாங்க முடிகின்ற சில ஆயிரம் பில்லியனர்களை உருவாக்கிப் பராமரித்தல்.

அதாவது, ஒரு குடும்பத்தின் வீட்டிற்கே பல நூறு கோடிகள் செலவளிக்கிறார்கள்.

வருடத்திற்கு ரூ 30 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு இடைநிலை ஐ.டி ஊழியர் 232 கோடி ரூபாய் சம்பாதிக்க 800 வருடங்கள் வேலை செய்யவேண்டும். வருடத்திற்கு ரூ 5 லட்சம் ஈட்டும் ஒரு துவக்கநிலை ஊழியர் 4500 வருடங்கள் வேலை செய்யவேண்டும்.

ஆனால் 10 லட்சம் ஐ.டி ஊழியர்களிடமிருந்து (பள்ளிக் கட்டணம் என்றோ, தொலைபேசி சேவைகளுக்கான கட்டணம் என்றோ, கடனுக்கான வட்டி என்றோ) நபருக்கு 5,000 என்று கறந்து கொண்டால் ஒரு நிதி முதலையின் பண மதிப்பில் 500 கோடிகளை கூட்டமுடியும். மருத்துவம், மின்னணு பொருட்கள், அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள், தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர், ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால் இவற்றின் மூலம் ஈட்டப்படும் செல்வத்தின் மூலம் சில ஆயிரம் பில்லியனர்கள் உருவாக்கிப் பராமரிக்கப்படுகின்றனர். அவர்கள்தான் கோடிகளில் விற்கப்படும் வீடுகளை வாங்குகின்றனர்.

மேலே கூறப்பட்ட ஒங்கார் திட்டத்தில் வீடு வாங்கியிருக்கும் பிரபலங்களில் விராட் கோலி, யவராஜ் சிங், பாரத் போர்ஜ் சேர்மேன் பாபா கல்யானி, கைனடிக் எஞ்ஜினியரிங்கின் துனை சேர்மேன் சுலஜ்ஜா பிரோடியா, கல்வி மற்றும் விளையாட்டு முதலை டி.வை. பாட்டில் போன்றவர்கள் அடங்குவர்.

அரசு வேளான் இடு பொருட்களுக்கான மானியத்தை வெட்டுகிறது. விளை பொருட்களின் விலைகளை குறைக்கிறது. கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

5000 கோடிகளில் வீடு கட்டிக்கொண்ட முகேஷ் அம்பானியின் நாட்டில் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை.

அரசு வேளாண் இடு பொருட்களுக்கான மானியத்தை வெட்டுகிறது; விளை பொருட்களின் விலைகளை குறைக்கிறது; விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. ஆனால் பெரிய கம்பனிகளுக்கு நிலங்களையும், நீரையும், மின்சாரத்தையும் மானிய விலையில் வாரி வழங்குகிறது; அவர்களின் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் (கல்வி, மருத்துவம், எரிபொருள், நீர், மின்சாரம், தொலைத்தொடர்பு) தங்கள் விருப்பப்படி விலை நிர்ணயிக்க அனுமதிக்கிறது; அவர்களது பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வசூலிக்காமல் விட்டு வராக்கடனாக்கி தள்ளுபடி செய்கிறது.

அவர்கள் நம்மை மேலும் கூடுதல் நேரம் வேலை செய்யச் சொல்கிறார்கள். நம்மில் பலரின் வேலைகளைப் பறிக்க திட்டமிடுகிறார்கள், நம்மைக் கடனில் தள்ளி வட்டியை உறிஞ்சுகிறார்கள், கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் மேலும் மேலும் செலவு செய்ய வைக்கிறார்கள்.

சி.இ.ஓ.க்கள், சி.டி.ஓக்கள், சி.எஃப்.ஓக்கள் இந்த பண முதலைகளின் லாபத்தை அதிகப் படுத்துவதற்காக வேலைசெய்கிறார்கள்.

இவை எல்லாமே அவர்களின் நிதி முதலீட்டிற்கு மேலும் மேலும் அதிக லாபத்தைப் பெறவும், மேலும் மேலும் ஆடம்பர வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் தான்.

இந்திய, பன்னாட்டு கம்பனிகளின் சி.இ.ஓ.க்கள், சி.டி.ஓக்கள், சி.எஃப்.ஓக்கள், நிர்வாகிகள், எச்.ஆர்.கள் இந்த லாபத்தை அதிகப்படுத்துவதற்காக வேலைசெய்கிறார்கள். தொழிலாளர் நலம், வாடிக்கையாளர் சேவை, சமூக பொறுப்பு போன்ற எல்லாமே தங்களின் முடிவில்லா லாபவெறிக்கு கீழ்ப்பட்டதாகவே வைத்துக்கொள்கிறார்கள்.

இவ்வாறாக உயரத்தில் இருக்கும் 1 சத மக்களால் செல்வம் தொடர்ந்து உறிஞ்சி எடுக்கப் படுகிறது. இந்த 1 சதத்திற்கு சேவை செய்பவர்களுக்கும் சொகுசான வாழ்க்கை கிடைக்கிறது. அடியில் இருக்கும் 80 சத மக்கள் மேலும் மேலும் அதிகமாக கசக்கிப் பிழியப் படுகிறார்கள். இந்த பணக்காரர்களின் வெறிகளுக்கு தீனி போடப்படுவதற்காக இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன; சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது.

ஐடி ஊழியர்களான நாம், நமது சொந்த நலன்களையும், நமது விவசாயிகளின், சிறு வணிகர்களின், மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் நமது மண்ணையும், நீரையும், காற்றையும், இயற்கை வளங்களையும், சூறையாடப்படுவதிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

நமது உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/who-profits-from-cts-layoffs-and-farmers-distress-in-tamil/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“ஜனநாயக அரசியல் இல்லாமல் சட்ட உரிமைகள் சாத்தியமா?” – ஐ.டி சங்கக் கூட்டம்

ஜனநாயக உரிமையான தொழிற்சங்க உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கே நாம் அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவாலுக்கும் ஆதரவு தெரிவித்து அவர்களது போராட்டங்களில் இணைந்து கொள்ள...

தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்

அரசாங்கம் பிரதிநிதித்துவ சபையில் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை; நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற குழுவின் தலைவர் ஆளுநரால் அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறார். அவர் தனது விருப்பப்படி அமைச்சர்களை...

Close