மோடி அரசு, நீதிமன்றங்கள், ஊடகங்கள் நடத்தும் தேசியவெறி ஆட்டம்

இது யாருடைய இந்தியா? அதிகாரத்தின் ஆமாம்சாமிகளுக்கு மட்டும் சொந்தானது.

ருண் ஜெட்லி உள்ளிட்டு அதிகாரத்தில் உள்ளவர்கள் நமது தன்னாட்சிமை* பாதுகாக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள் என்றால் கசப்பானவற்றை பேசக்கூடிய சுதந்திரம் கேட்பவர்களை ‘குழிபறிக்கும் கூட்டணி’ என்று அழைக்கிறார்கள் என்றால் நமது மக்களாட்சியில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கவேண்டும். மத்திய அமைச்சரிடமிருந்து வந்திருக்கும் இந்த கருத்து நாடு முழுக்க இருக்கும் மாணவர்களுக்கு விடப்பட்ட மிரட்டலே.

“இது யாருடைய இந்தியா?” என்று கேட்கிறார் டி.எம் கிருஷ்ணா

டெல்லியின் ரம்ஜாஸ் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.க்கும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கும் இடையே நடந்த பிரச்சனை குறித்து நிதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். மாணவர்கள் “தேச-விரோத” முழக்கங்களை இட்டதாக ஏ.பி.வி.பி. அமைப்பினர் குற்றம் சாட்டியதன் மூலம் பேச்சு சுதந்திரம் பற்றிய விவாதம் பற்ற வைக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி.யின் இத்தகைய நடத்தை முதல்முறையாக நடப்பது இல்லை.

பெரும்பாலான சமயங்களில், பேச்சு சுதந்திரம் குறித்த வாதம் வரும்போது, கருத்துகளை தனிமனிதனுக்கு கிட்டச் செய்கின்ற, அவற்றை வெளிப்படுத்துவதற்கு வசதியேற்படுத்துகின்ற, உரக்கப்பேசுவதற்கு நம்பிக்கையையும் தளத்தையும் கொடுக்கின்ற, காதுகொடுத்து கேட்கப்படும் வாய்ப்பைக் கொடுக்கின்ற சூழ்நிலையை நாம் கவனத்தில் கொள்வதில்லை. எந்த அளவுக்கு சுதந்திரம் இருந்தாலும் எலலாக் கருத்துக்களும் சமமானவையல்ல என்பதால் கல்லூரிகள் மாற்றுக்குரல் எழுப்புவதை ஊக்குவிக்க வேண்டும். அப்படியாக சமூதத்தில் நிலவும் உள்ளார்ந்த சமமின்மையை தம்மால் இயன்ற அளவு சமன்படுத்த முயற்சி செய்யவேண்டும். இதற்கு உதவும் வகையில், மத்திய நிதிஅமைச்சர் போன்ற தகுதியைக் கொண்ட ஒரு மனிதர் பேசும் போது அவர் தனது கருத்துக்களின் பின்விளைவுகளை கவனத்தில் கொண்டு பேச வேண்டும். இந்த நாட்டை துண்டாட இடைவிடாத முயற்சிகள் நடக்கின்றன என்று நம்மை நம்பவைக்க முயற்சி செய்யும் அமைச்சர்களால் நாம் தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கப் படுகிறோம். இந்த அரசு சதாகாலமும் போர்நிலையிலேயே இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அதன் இலக்குகள் தனது சொந்த மக்களே. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிற, செயலூக்கத்துடன் தனியார்மயமாக்கத்தை அமல்படுத்தி அதன்மூலம் சில நிறுவனங்களின் அரசின் கட்டுப்பாட்டை விருப்பத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்ற இந்த அரசு இத்தகைய உத்தியை பயன்படுத்துவது விசித்திரமானதே. இந்த பய பீதி உணர்வுதான் பாரதிய ஜனதா கட்சியை ஒரு சக்தியாக்கியிருக்கிறது என்பதையும் அநீதியிழைக்கப்பட்டவர்களென்ற உணர்வை தீவிரமான அளவிற்கு வளர்த்து தக்கவைப்பதன் மூலமே அவர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

எல்லோருக்குமாக ஒன்று

ரம்ஜாஸ் கல்லூரி பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த அருண் ஜெட்லி இந்தியாவில் மட்டுமே தேசியம் என்பது தகாத வார்த்தையாக இருக்கிறது என்றார். நிதி அமைச்சரே, தேசியம் என்ற வார்த்தை அதை யார் எப்படி ஏன் பயன்படுத்துகிறார்கள் என்ற அடிப்படையில் நல்ல வார்த்தையாகவோ தாகாத வார்த்தையாகவோ இருக்கும். உங்கள் கட்சி நேரிடையாகவோ அல்லது உங்களது மூன்றாம் கை அமைப்புகளின் மூலமாகவோ, பயன்படுத்தும் விதத்தில் அது முற்றிலும் தாகாத வார்த்தை தான் என்று நான் சொல்கிறேன்.

தன்னாட்சிமை கேள்விக்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமா? ஒரு முதிர்ந்த மக்களாட்சி இந்த கேள்வியை தனது ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதன் பொருள் என்னவென்பதில் மக்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவைகள் அரூபமாக இல்லாமல், ஆட்சி செய்வதிலும், சமூக அடையாளத்திலும் வாழ்க்கையின் அரசியல் மற்றும் கலாச்சார புலங்களிலும் தாக்கம் செலுத்துகின்றன.

suppressing voice of dissent

“குரல்களை அடக்கிவிட விரும்புபவர்களின் தரப்பில் நிற்பது வசதியானது என்று இந்த அரசு நினைக்கிறது”

தன்னாட்சிமை என்பது வெறும் நிலப்பரப்பை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது நாட்டின் குடிமக்களால் உணரப்பட வேண்டியது. உன்மை என்னவென்றால், இந்நாட்டைச்சார்ந்தவர்கள் என்ற உணர்வையும் ஒரு ஒற்றுமையான அடையாளத்தையும் நாம் பலரிடம் உருவாக்கவிலலை. ஆகையால் இந்திய அரசை தமது அரசாக ஏற்றுக் கொள்ளாத பல சிறந்த சமூகங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. அவர்கள் தம்மை இந்தியர் என்று கூட நினைக்காமல் இருக்கலாம். இது அவர்களை இந்திய விரோதிகளாக ஆக்குகிறதா? நாம் அவர்களை நமக்கு எதிரிகளாக நிறுத்தாத பட்சத்தில் இல்லை. நான் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளைப் பற்றி பேசவில்லை. நமது அரசியல் வரைபடத்தினால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு உள்ளே வாழும் தாங்கள் பிறந்த மண்ணை நேசிக்கும் மக்களைப் பற்றித்தான் பேசுகிறேன். வெளிப்படையாக தெரியும் இந்த உணர்வுக்கு முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோமா?

இது காஷ்மீரைப் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. வடகிழக்கு இந்தியாவின் காடுகளின் உள்ளே வசிக்கும் ஆதிவாசிகளின் பற்றிய பிரச்சனை கூட. அவர்களுக்கு இந்தியராக இருப்பது என்றால் என்ன என்று தெரியவில்லை. நாம் கோரும் இந்தியத்தன்மையை அவர்கள் உணருவதற்கு இந்திய அரசு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஏதேனும் செய்திருந்தால் அது அவர்களை சுரண்டியதும் விலக்கிவைத்ததும் தான். அரச வன்முறைக்கும் அதை எதிர்த்து போராடுபவர்களும் இடையே வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் தன்னாட்சிமையைப் பற்றி கேள்வி கேட்காமல் இருப்பார்களா?

அவர்களின் குரல்களை தூய மனதுடன் செவிகொடுத்து அவர்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்த அனுமதிக்காமல், அது போன்ற குரல்களை அடக்கிவிட விரும்புபவர்களின் தரப்பில் நிற்பது வசதியானது என்று இந்த அரசு நினைக்கிறது. எனக்கு இது விநோதமாக இருக்கிறது. ஏனென்றால் சில காலத்திற்கு முன்னர் கூட பலம் வாய்ந்த தலைவர்கள் வெளிப்படையாக தனித் தமிழ்நாடு கேட்ட மாநிலத்தைச் சார்ந்தவன் நான். அந்த தலைவர்கள் தேசத்துரோகத்திற்காக தண்டிக்கப்படவில்லை. நாங்கள் இன்னும் இந்நாட்டின் பகுதியாகத் தான் இருக்கிறோம்.

மற்ற தூண்கள்.

ஆனால் இந்த தேசியவாத பிரச்சாரத்தில் பா.ஜ.க தனியாக இல்லை. நீதித்துறை மிகுந்த உற்சாகத்துடன் பக்க வாத்தியம் வாசிக்கிறது. திரையரங்குகளில் தேசியகீதம் போடவும் பார்வையாளர்களை அதற்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்கவும் கட்டளையிட்டிருக்கும் உச்சநீதி மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு பழமைவாதமும் எதேச்சதிகாரமும் நிறைந்தது ஆகும்.

உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது ஒரு கலைப் படைப்பு. நாட்டின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் நீதிமன்றம் தனது சொந்த அலுவல்களுக்கு முன்னர் தேசியகீதம் பாடத்தேவையில்லை என்று கூறுகிறது. என்னைப் பொருத்தவரையில் இரண்டு இடங்களிலுமே அது தேவையற்றது. நான் சொல்லவருவது இதுதான். உனக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா?

அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் நீதிநெறிகளுக்கு இதயமாக இருக்கும் மற்றவர்கள்பாலான கருணையுணர்விற்காக இந்த நாடு கொண்டாடப் படவேண்டும். இந்த உணர்வு மதிக்கப்படவும் வாழ்வின் எல்லா புலங்களிலும் அமல்படுத்தப்படவும் வேண்டும். இதை நாம் அரிதாகவே செய்திருக்கிறோம். ஆனால் நாட்டுப்பற்றைப் பற்றிய தனது சொந்தக் கருத்தை மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக வைத்ததன் மூலம் இந்த அரசு வெகு தொலைவு போய்விட்டது. நமது நீதிமன்றங்களில் தலைமை தாங்குபவர்களுக்கும் இதே வியாதி வந்துவிட்டது.

நான்காம் தூணான ஊடகத்தைச் சேரந்தவர்களும் பின்தங்கி விடவில்லை. அவர்கள் மறக்காமல் தாங்கள் பாரபட்சமற்றவர்கள் என்று சொல்லிக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படி சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நான் என்றும் நினைத்ததில்லை. பேசப்படாத விதியான வலதுசாரி அல்லது மையவலதுசாரியாக இருப்பதுதான் தேசப்பற்றுள்ளமையாகவும் மற்ற எல்லா நிலைகளும் தேசத்தை அவமதிக்கும் நிலைப்பாடு என்பதுவும் தான் ஊடகங்களால் உறுதியாக நிறுவப்பட்டு வருகிறது.

சமீபத்தில், ஒரு முன்னணி ஊடகவியலாளர் தான் எப்போதும் தேசியகீதத்திற்கு எழுந்து நிற்பதாகவும் என்றும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேசுவதாகவும் அப்படியென்றால் தான் ஒரு சங்கியா எனவும் கேட்டார். புத்திசாலித்தனமான கேள்விதான். ஏனென்றால் இதுபோன்ற அறிவிப்புகள்தான் அவரை சங்க பரிவாரத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஏற்புடையவராக்குகிறது. இது போன்ற அறிவிப்புகள் மூலம் சங்க பரிவாரத்தின் எதிரணியில் உள்ள பச்சை வண்ண உடையணிந்தவர்கள் தன்னை வெறுப்பதையும் அதன் மூலம் தனது சந்தை திடப்படுவதையும் அவர் உறுதிசெய்து கொள்கிறார்.

இது போன்ற முனைவாக்கத்தை அவரும் அவரைப் போன்றவர்களின் கூட்டமும் விரும்புகிறது. தொலைக்காட்சி சேனல்கள் இரண்டு தரப்பின் அதிதீவிர கருத்துக்களை நமது வீட்டிற்குள் கொண்டுவந்து நாம் அவற்றை குத்துச்சண்டையைப் போல பார்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஊடகங்களின் ஒரு பகுதி அரசியல்வாதிகளிடமிருந்து சிறிதும் வேறுபடவில்லை. அவர்கள் மத, இன, பால், சாதி போன்ற வேற்றுமைகளை பயன்படுத்தி நம்மை தேசியவெறியால் தாக்குகிறார்கள். ஒருவரை தூண்டிவிட்டால் மற்றவர்கள் தாமாக அதை கடைப்பிடிக்க ஆரம்பிப்பார்கள் என்பதுதான் அவர்களின் செயலுத்தி.

சமூக ஊடகங்களினால் தீவிரமாக்கப்பட்ட இந்த களேபரத்தினிடையே தான் நாம் நமது வாழ்நிலைமையை புரிந்து கொள்ள முயல்கிறோம். தற்கால சூழ்நிலைமை மிகவும் மோசமானது என்று கருதுபவர்கள் ஒரு முனையிலும், இந்தச் சூழ்நிலைமையை கொண்டாடிக் களிப்பவர்கள் மறு முனையிலும் இருக்கிறார்கள். இந்தச் சிக்கலான காலத்தை தாங்கிக்கொள்ளும் அளவிற்கு நாம் பலமானவர்கள் தான். ஆனால் விரைவில் நாம் எல்லோரும் கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இழந்துவிடலாம் என்ற பயம்தான் என்னை கலக்கமடையச் செய்கிறது

நன்றி : Scroll.in

மொழிபெயர்த்தவர் : நேசன்

* குறிப்பு = இறையாண்மை என்ற வார்த்தைக்கு பதிலாக sovereignty க்கு முற்றும் பொருந்திய தன்னாட்சிமை என்ற புதிய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/whose-india-is-it-anyway-tm-krishna-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
குடிக்க தண்ணீரில்லை, கோபுரம் கட்ட நிதி திரட்டும் கிராம பஞ்சாயத்து

"எந்த சாமியும் கோபுரம் கட்டி கும்புடுங்கள் என்று சொல்லவில்லை நீங்களா கவுரவும்னு தேவையே இல்லாமல் கஷ்டபட்ட பணத்தை செலவு செய்கிறீர்கள். கடவுள்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு...

புதிய தொழிலாளி – பிப்ரவரி – மார்ச் 2019 பி.டி.எஃப் டவுன்லோட்

அடுப்படிக்கு வாங்க, ஆம்பளைங்களே - துரை சண்முகம் மேட்டுக்குடிகளின் கலை ரசனையின் விலை தொழிலாளியின் வறுமை - சமர்வீரன் கண்ணீரில் தவிக்கும் கடலாடிகளின் வாழ்க்கை - ராஜதுரை...

Close