“ப்ளூவேல்” என்ற விளையாட்டு ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. இதை இணையத்தில் இணைந்து மட்டுமே பயன்படுத்த முடியும்.

கையை கிழித்துக் கொள்ளும்படியும், உயர்ந்த கட்டிடத்தின் மாடி ஓரத்தில் நின்று படம் எடுத்து அனுப்பும்படியும் இவ்வாறான கட்டளைகள் இருக்கும்.
இந்த விளையாட்டில் சேர்வதற்கு ஒரு லிங்க் கொடுக்கப்படும். அதைத் தொடர்ந்து செல்லும்போது நீங்களும் அந்த விளையாட்டில் இணைந்து விடுவீர்கள். பிறகு உங்களை இயக்குபவரால் ஒவ்வொரு நாளும் ஒருவித கட்டளை கொடுக்கப்படும். அதை செய்து முடித்ததும் படமெடுத்து அதை அவருக்கு அனுப்ப வேண்டும். உதாரணமாக கையை கிழித்துக் கொள்ளும்படியும், உயர்ந்த கட்டிடத்தின் மாடி ஓரத்தில் நின்று படம் எடுத்து அனுப்பும்படியும் இவ்வாறான கட்டளைகள் இருக்கும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும்படி கட்டளையிடப்படும்.
இதுபோன்று விளையாடி ரஷ்யாவில் 130 பேருக்கு மேல் இறந்துள்ளனர்; உலகம் முழுக்க உள்ள நாடுகளில் பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்; கேரளாவிலும் மும்பையிலும் இளைஞர்கள் இந்த விளையாட்டை தீவிரமாக விளையாடி தற்கொலை செய்துள்ளனர்; என செய்திகள் வெளிவந்ததை அறிவோம்.
“ப்ளூவேல்” விளையாட்டின் மூலம் ஆயிரக்கணக்கில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாய் மாறியுள்ளார்கள் என்பது மிகப்பெரிய கவலையளிக்கும் விஷயம். இதுபோல நிறைய விஷயங்கள் வெவ்வேறு வகையில் சமூகத்தை பாதிக்கும் வகையில் வந்துகொண்டே இருக்கின்றன. நாம் என்ன செய்யப் போகிறோம்?
“ப்ளூவேல்” விளையாட்டு தனித்த ஒன்று இல்லை, புதிதாக தோன்றி விட்டதும் இல்லை. அது சிக்க வைக்கும் போதையின் அளவு முன்பு இல்லாத வகையில் அதிகரித்திருந்தாலும் இது போன்று பலவிதமான போதைகளில் பல்வேறு கட்டங்களில் பலர் சிக்கிக் கொள்வது நடக்கத்தான் செய்கிறது.
கணினியில் “சூப்பர் மரியோ” அல்லது falling blocks அல்லது சாலிட்டேர் சீட்டு விளையாட்டு போன்ற விளையாட்டுகளை விளையாடிய அனுபவம் பலருக்கு இருக்கும். படிப்பு, வேலை, சொந்த வாழ்க்கை பிரச்சனை போன்றவற்றை மறந்து, விளையாடுபவரின் மனதை திருப்புவதற்கு, அதுவும் வேறு யாரையும் நாடாமல் தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொண்டு தனியாக அதை செய்து கொள்ளும் வகையி்ல இந்த விளையாட்டுக்கள் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
அத்தகைய எளிய விளையாட்டுகளில் கூட அடுத்தடுத்த படிநிலைகள் உள்ளன. தான் இத்தனை படிநிலையை கடந்துவிட்டேன் என்ற சுயதிருப்தி முக்கியமானது. அதன் மூலம் பள்ளியிலோ, கல்லூரியிலோ, பணியிடத்திலோ எதிர்கொள்ளும் சோர்வுகளை/அன்னியப்படுத்தல்களை களைந்து தற்காலிகமாக உற்சாகமடைகிறார்கள்.
ஒரு பக்கம் பெற்றோர் அலுவலத்தில் அதிகநேரம் வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதை தவிர்த்துவிட முடியாத அளவுக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எதை எடுத்துக்கொண்டாலும் பணம். கல்விக்கு பணம், மருத்துவத்துக்கு பணம், குடிக்க தண்ணீர் வேண்டும் என்றாலும் பணம்; இதற்கு மேல் பலர் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளார்கள். எனவே அலுவலக வாழ்க்கை தரும் நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு வாழும் சூழ்நிலையில் உள்ளனர்.

பலவித காரணங்களுக்காக தனித்து விடப்பட்ட குழந்தைகள், தமக்குத் தாமே மகிழ்வித்துக் கொள்ளும் வீடியோ/மொபைல் விளையாட்டுக்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
அலுவலகத்திலிருந்து வந்ததும் கணினி அல்லது நவீன கைபேசி முன்பு அமர்ந்து தீவிரமாக வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் பிள்ளைகள் பேச வரும்போது அவர்களுக்கு சிறிய கணினி அல்லது தொடுதிரை வசதியுள்ள கைபேசியை ஒப்படைத்துவிட்டு வேலையை தொடர்வார்கள். அந்தக் குழந்தையும் தனக்கு கிடைத்த கைபேசியை வசதிக்கு ஏற்றாற்போல பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு இத்தகைய அடிமைத்தனத்துக்கான துவக்கப் புள்ளி வைக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் மேலே சொன்னபடி சம்பாதித்த காசைக் கொட்டி, பள்ளிகள் எனப்படும் நவீன பட்டதாரி உற்பத்தி தொழிற்சாலைகளில் குழந்தைகளை சேர்த்து “படி! படி!” என்று வருடம் முழுக்க இயந்திரத்தை போல துரத்துகிறார்கள். அதுமட்டுமல்ல குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளும் சுருங்கிப் போயிருக்கின்றன. இப்படியான பலவித காரணங்களுக்காக தனித்து விடப்பட்ட குழந்தைகள், தமக்குத் தாமே மகிழ்வித்துக் கொள்ளும் வீடியோ/மொபைல் விளையாட்டுக்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
அவர்களது பள்ளி நண்பர்களுடனான நட்பும், உரையாடலும் இத்தகைய விளையாட்டுக்களை மையமாகக் கொண்டதாக மாறி விடுகின்றன. அந்த கால கட்டத்தில் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் தான் இன்ன நிலையை எட்டி விட்டேன் என்று சந்தோசமாக நண்பர்களிடம் சொல்வதன் மூலம் அங்கீகாரமும் பெருமிதமும் தேட முயற்சிக்கிறார்கள்.

மிகவும் அப்பாவியாக தோன்றும் சீட்டுக் கட்டு விளையாட்டாக இருக்கலாம் அல்லது எதிரிகளை சுட்டுக் குவிக்கும் வன்முறை விளையாட்டுகளாக இருக்கலாம், விடலை பருவத்தில் பாலியல் படங்களாக திரும்பலாம்.
அதைக் கேட்கும் எதிர்தரப்பினர் அவர்களை போலவே அந்த படிநிலையை கடந்துபோக பல மணி நேரத்தை செலவு செய்கிறார்கள். மேலும் இத்தகைய சாதனை என்று அவர்கள் நினைப்பதை முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து சுயதிருப்தி அடைகிறார்கள்.
இவ்வாறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ஒவ்வொருவரும் பல்வேறு வகையான தனித்து விடப்பட்ட பொழுதுபோக்குகளில் தீவிர பற்றாளர்களாக மாறுகிறார்கள். அது மிகவும் அப்பாவியாக தோன்றும் சீட்டுக் கட்டு விளையாட்டாக இருக்கலாம் அல்லது எதிரிகளை சுட்டுக் குவிக்கும் வன்முறை விளையாட்டுகளாக இருக்கலாம், விடலை பருவத்தில் பாலியல் படங்களாக திரும்பலாம். எதுவாக இருந்தாலும் சக மனிதர்களுடனான உறவை துண்டித்துக் கொண்டு தன்னந்தனியே தனக்கான மனநிறைவை தேடிக் கொள்ள முடியும் என்ற செயற்கையான நாட்டமே இத்தகைய பொழுதுபோக்குகளின் அடிப்படை. தன்னுடைய/சமூகத்துடைய பல பிரச்சினைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு தனிமையில் இது போன்ற விளையாட்டுகளில் சாதிப்பதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு கடந்து போகிறார்கள்.
இயற்கையாய், சமூக மனிதர்களாய் ஓடி விளையாடிய குழந்தைகள், சமூக ரீதியில் புழங்க வேண்டிய இளைஞர்கள் இப்போது ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு செயற்கையாய் தமது நேரத்தை போக்குகிறார்கள். பெரும்பாலும் சமூகத்துடனான தனது உறவாடலை தவிர்த்துவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்து ஆசைப்பட்ட விளையாட்டையெல்லாம் விளையாடி களைத்துப்போகிறார்கள்.
ஒரு குடிகாரன் குடித்து குடித்து பழகிப்போய் பைத்தியம் போல ஆவது போலவே இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடும் நபர்களை பார்க்கலாம். அதையே தனக்கு கிடைத்த துணையாக கருதிகொண்டு நடைமுறையில் மக்களோடு உறவாடுவதை தவிர்த்து தனிமையில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்

பணியிடத்திலும், கல்வி கற்பதிலும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொண்டு தனித்து செயல்படும்படி வலியுறுத்தும் முதலாளித்துவம்தான் அது.
இதுபோன்ற பல விளையாட்டுகளின் வரிசையில் இந்த “ப்ளூவேல்” விளையாட்டு வருகிறது. சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளும் கட்டாயம், விளையாட்டின் படிநிலைகளை தாண்டி போகும் துடிப்பு, அது கொடுக்கும் போதை என்று தற்கொலை வரை கொண்டு செல்கிறது.
இதில் சிக்கிக் கொள்ளாமல் குழந்தைகளை விடுவிக்க என்ன செய்வது?
- பாரம்பரிய விளையட்டுகளை விளையாட சொல்லிக்கொடுத்து பழகுங்கள்
- குறிப்பிட்ட நேரம் மட்டும் கைபேசி பயன்படுத்தும்படி அறிவுறுத்துங்கள்.
- குழந்தைகளுக்கு கைபேசி கணினி கொடுத்து பழக்குவதை தவிர்க்க வேண்டும்.
- அடிக்கடி அவர்களோடு சேர்ந்து விளையாடுங்கள்.
- குழந்தைகளோடு பேச பெற்றோர்கள் அதிக நேரம் ஒதுக்க வேண்டும் அவர்களை நண்பர்கள் போல அணுகவேண்டும் அப்போதுதான் அவர்கள் பிரச்சனையை கண்டறிந்து தீர்வு சொல்ல முடியும்
இவையெல்லாம் தற்காலிக தீர்வுதானே தவிர நிரந்தர தீர்வு கிடையாது.
மேலே சொன்னபடி குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாமல் பெற்றோரை சிக்க வைத்திருப்பது எது? குழந்தைகளின் கல்வியையும் விளையாட்டுக்களையும் எந்திரத்தனமாக மாற்றியிருப்பது எது? சக மனிதர்களை பற்றி கவலைப்படாமல் தன்னை மட்டும் கவனித்துக் கொள்ளும்படி வலியுறுத்தும் சித்தாந்தம் எது?
பணியிடத்திலும், கல்வி கற்பதிலும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொண்டு தனித்து செயல்படும்படி வலியுறுத்தும் முதலாளித்துவம்தான் அது.
முதலாளித்துவம் புதிய தொழில்நுட்ப முன்னேறங்களை எல்லாம் கைப்பற்றி இது போன்று தானே உருவாக்கிய தனிமையை, அன்னியப்படுத்தலை பயன்படுத்தி மனித வாழ்வுகளை சூறையாடுகிறது.
குழந்தைகளும், இளைஞர்களும், வயதானவர்களும் முதலாளித்துவ அன்னியப்படுதலிலிருந்து விடுபட்டு இயற்கையாகவும், சமூகரீதியாகவும் சக மனிதர்களோடு பழகுவதும் விளையாடுவதும், தொழில்நுட்பங்களை கற்று பயன்படுத்துவதும் உண்மையான தீர்வாக இருக்கும். இதற்குத் தடையாக இருப்பது கார்ப்பரேட் லாப நோக்கத்தினால் இயக்கப்படும் உலகளாவிய முதலாளித்துவ கட்டமைப்புதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடப்பாரையை தின்று விட்டு சுக்கு கஷாயம் குடித்து செரிக்க முயற்சிக்கும் நிலையில்தான் இன்றைய உலகத்தை முதலாளித்துவம் வைத்திருக்கிறது.
– சுகேந்திரன்