நெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்

28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் பிரிட்டன் அதிலிருந்து வெளியேறுவதாக வாக்கெடுப்பில் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நாடு எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் குறித்து “ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்” –  என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை செப்டம்பர் 4, 2018 அன்று வெளியிட்டிருந்தோம்.

என்னதான் பிரச்சனை?

பிரெக்சிட் என்று அழைக்கப்படும் பிரிட்டனின் விலகல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் (ஐக்கிய அரசு – UK) எதற்காக பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்? வரப்போகும் சிக்கல்களின் அடிப்படை என்ன என்று கூடுதல் விபரங்களை அந்தக் கட்டுரை வெளியான அதே தளத்தில் வெளியான Why is the EU in no hurry for a trade deal? என்ற கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ உலகமயம் பெரிய நாடுகளின் கார்ப்பரேட்டுகளை ஒரு நாட்டு எல்லைகளை தாண்டி பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் உற்பத்தி சங்கிலிகளை சார்ந்திருக்க செய்திருக்கின்றன. இதை சாத்தியமாக்குவதற்கும், எளிமையாக்குவதற்குமான வர்த்தக உடன்படிக்கைகள், சுதந்திர வர்த்தக மண்டலங்களை அரசுகள் உருவாக்கியிருக்கின்றன. நாடுகளின் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியாக மேலும் மேலும் நெருக்கமாக பிணைக்கப்படுகின்றன. எனவே, ஒரு பொருளாதார ரீதியில் ஒரு நாட்டின் ஒரு பகுதி பிரிந்து செல்வது என்பது முதலாளிகளுக்கு மிகவும் நஷ்டம் ஏற்படுத்தக் கூடியதாக மாறியிருக்கிறது.

ஆனால், இந்த கார்ப்பரேட் உலகமயம் தோற்றுவிக்கும் நெருக்கடிகளால் உழைக்கும் வர்க்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதை எதிர்த்த போராட்டங்களை இனவாதமாக திசை திருப்பி பிரிவினை அரசியல் செய்வதும் முதலாளித்துவ அரசியலுக்கு தேவையாக இருக்கிறது. டிரம்பின் காப்புவாதம், பிரெக்சிட், “மண்ணின் மைந்தர்கள்” அரசியல் எல்லாம் இந்த வகையில் சேர்கின்றன.

ஒரு பக்கம் பொருளாதார ரீதியாக உலக நாடுகள் மேலும் மேலும் நெருங்கி வர வேண்டும். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை எதிர்கொள்வதற்கு பிரிவினைவாதமும், காப்புவாதமும் தேவைப்படுகிறது. இந்த இரட்டைக் கிடுக்கியில் சிக்கிக் கொண்டு திணறுகிறது, உலக முதலாளித்துவம்.

பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான பொருளாதார உறவுகள் எப்படி இருக்கின்றன? பிரிட்டன் தனியாக பிரிந்து செல்வதாக கூறுவது அவற்றை எப்படி பாதிக்கும்? என்பதற்கான அடிப்படைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. 

கட்டுரையில் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஐக்கிய அரசு என்று பேசப்படும் இடங்கள் அந்தந்த பகுதி கார்ப்பரேட்டுகளை குறிப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். உள் தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரெக்சிட்டுக்கு பிந்தைய வர்த்தக உடன்படிக்கை ஒன்றை பிரிட்டனுடன் ஏற்படுத்திக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏன் அவசரம் காட்ட மறுக்கிறது? [அதே நேரம் பிரிட்டன் அப்படி ஒரு ஒப்பந்தத்துக்காக தவியாக தவிக்கிறது]

  1. பிரிவதற்கு முன்னால் ஒப்பந்தம் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆர்வம் இல்லை

பிரிட்டன் உடனான வர்த்தக பேச்சு வார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் இன்னும் தயாராக இல்லை” என்று தெரிவிக்கிறார் பி.பி.சி.யின் ஆடம் பிளெமிங்.

பிரஸ்ஸல்சின் பிரெக்ஸிட் வட்டங்களில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கு இது மற்றொரு காரணம். ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியம் (EU)-ஐக்கிய அரசு (UK) இடையிலான எதிர்கால உறவுகள் பற்றியும், அதை நிர்வகிப்பது பற்றியும் குறித்த விவரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகே முடிவு செய்யப்படும் என்று கருதுகின்றனர்” என்று கட்யா ஆட்லேர் தெரிவிக்கிறார்.

“அரசாங்கத்துக்கான கழகம்” என்ற சிந்தனை குழாம் சென்ற மாதம் வெளியிட்ட EU27-ன் கண்ணோட்டம் பற்றிய அறிக்கையில் இது தொடர்பான குறிப்புகள் இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் அரசுகளுக்கு ஐக்கிய அரசின் (UK) சந்தையை விட ஐரோப்பிய ஒற்றைச் சந்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும் அதன் ஒற்றைச் சந்தைக்கும் முன்னுரிமை என்று கூறும்போது இதையே குறிப்பிடுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றும் UK-உடன் ஒரு நெருக்கமான எதிர்கால உறவு வேண்டும், அதில் தங்கள் நலன்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்க பல காரணங்கள் உள்ளன. இருந்தாலும் அதற்காக, இதுவரை நிலவி வரும் ஒற்றைச் சந்தை பற்றிய ஒருமித்த கருத்தை அவை கைவிட்டு விடப் போவதில்லை. ஒற்றைச் சந்தையையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் திடமாக பாதுகாப்பது என்ற நோக்கத்தைப் பொறுத்தவரையில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்த கருத்தை கொண்டுள்ளன.

ஒற்றைச் சந்தையின் முழுமை என்னும் பதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடிக்கடி நாம் கேட்டாலும் நம் நாட்டு அரசியல்வாதிகள் அதற்கு போதுமான கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. அதன் உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை பாதுகாத்து பராமரிப்பதற்கு பல தேவைகள் உள்ளன. ஒற்றைச் சந்தை சுங்க ஒன்றியத்துடன் இணைந்து இயங்கும்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கிடையே உலகத்தில் வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு தடையின்றி வர்த்தகம் நடப்பதை அது உறுதி செய்கிறது.

நாடுகளுக்கிடையே வர்த்தக காப்புவாதமும், முதலாளித்துவ சுதந்திர வர்த்தகமும்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மிகவும் சிக்கலானது. “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வது நமக்கு அதிக சுதந்திரத்தை தரும்” என்றும் “வெளியே பல்வேறு நாடுகள் தங்களிடையே சுதந்திர வர்த்தகம் செய்துகொள்வதாகவும்” பலரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், சர்வதேச வர்த்தகத்தில் பொதுவான நிலைமை மோசமானது, மிருகத்தனமானது. வரலாற்று ரீதியாக, நாடுகள் எப்போதுமே வர்த்தகத்தை தமக்கு சாதகமாக கட்டுப்படுத்தி வந்துள்ளன. உள்நாட்டுச் சந்தைகளை பாதுகாத்து, பிற நாட்டு பொருட்களின் மீது இறக்குமதி வரிகளையும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் சுமத்தி வந்தனர். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாகவும் உலக வர்த்தக் கழகத்தின் மூலமாகவும் இந்தத் தடைகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன.

இந்த நிகழ்முறை ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறு எந்த ஒரு ஒப்பந்த பகுதியையும் விட அதிக முன்னேற்றம் கண்டது. ஐரோப்பிய சுங்க ஒன்றியம், சரக்குகள் மற்றும் சில சேவைகளின் மீது சுங்கவரிகளை நீக்கியது. ஐரோப்பிய ஒற்றைச் சந்தை இணக்க விதிகளை செயல்படுத்துகிறது. இந்த இரண்டு அமைப்புகளின் சேர்க்கை எல்லை கட்டுப்பாடுகளுக்கான தேவையை நீக்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளே ஒரே மாதிரியான வரிகள், ஒரே மாதிரியான தரநிர்ணயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், ஒரு முழுமையாக தயார் செய்யப்பட்ட பொருளோ அல்லது மற்றொரு உற்பத்திக்கான உதிரி பாகமோ ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் வந்தவுடன் அது எந்தத் தடையுமின்றி உறுப்பு நாடுகளுக்கிடையே நகர முடியும். உதாரணமாக, மான்செஸ்டரில் ஒரு டிரக்கில் பொருட்களை ஏற்றி நாடுகளின் எல்லைகளை கடந்து மூனிச்சிற்குள் ஓட்டி வந்து இறக்கி விட்டு, மேலும் பொருட்களை ஏற்றிக்கொண்டு எந்தத் தடையும் இல்லாமல் திரும்ப வந்துவிட முடியும். சர்வதேச வர்த்தகத்தில் வழக்கமான தடைகள் இல்லாத ஒரு நடைமுறையை உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகிறது. இது வழக்கமான சர்வதேச வர்த்தக நிலைமைக்கு ஒரு விதிவிலக்கான அமைப்பாகும்.

ஒரு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிட்டால் ஒன்றியத்தில் இருப்பதால் கிடைக்கும் சலுகைகளை இழந்துவிடும் என்றுதான் பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரிட்டனின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, பிரெக்சிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் மீது தடைகளைத் விதிக்கும் என்ற பரவலாக பேசப்படுவது தவறான சிந்தனை.

பிரிட்டன் வெளியேறிய பிறகு என்ன நடக்கும்?

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால், சர்வதேச வர்த்தகத்தில் இயல்பாக நடைமுறையில் இருக்கும் தடைகளை, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடனான வர்த்தகத்திலும் அது எதிர்கொள்ள ஆரம்பிக்கும். ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கு வெளியே தன்னை நகர்த்துவதன் மூலம், வரிகளும் ஒழுங்குமுறைகளும் தடைகளாக இல்லாத ஒரு அமைப்பின் பயனை பிரிட்டன் இழக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்கு வெளியில் பிரிட்டன் போய் விட்டால், பிற நாடுகளின் ஏற்றுமதிகளைப் போலவே பிரிட்டன் பொருட்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

ஆனால் நமது எல்லையை கடந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செல்லும் பொருட்களை சோதனை செய்ய வேண்டாம் என்று நாம் முடிவு செய்தோமே? ஐரோப்பிய ஒன்றியம் வகுத்த அதே விதிமுறைகளைத் தானே நாமும் பின்பற்றுகிறோம். எனவே, மார்ச் 29-ல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு என்ன மாறி விடும்? இது அயர்லாந்து தொடர்பான பிரச்சனையையும் தீர்த்து விடும் அல்லவா?

துரதிருஷ்டவசமாக அது அவ்வளவு எளிதல்ல. உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளின்படி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வர்த்தக விதிமுறைகளைத்தான் ஒரு நாடு கடைப்பிடிக்க முடியும். உறுப்பு நாடுகளுக்கிடையே பாரபட்சம் காட்ட முடியாது. பிராந்திய ஒப்பந்தங்களின் கீழோ, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் கீழோ மட்டும்தான் ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சலுகை அளிக்கும் விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்.

உலக வர்த்தகக் கழக விதிமுறைகள் எப்படி செயல்படுகின்றன?

இதை “அரசாங்கத்துக்கான கழகம்” இவ்வாறு விளக்குகிறது:

விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டாம் என்று ஒரு தலைபட்சமாக பிரிட்டன் முடிவு செய்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அது தனது எல்லைகளை முழுமையாக திறந்துவிட முடியாது.
முதலாவதாக, உலக வர்த்தகக் கழகத்தின் (WTO) விதிமுறைகளின் படி, ஐரோப்பிய ஒன்றிய பொருள் ஒன்றின் மீது இறக்குமதி தீர்வையை ரத்து செய்தால் அதே பொருள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் போதும் அதன் மீது வரி விதிக்க முடியாது. அப்படி வரி விதித்தால், ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் மீதும் இறக்குமதித் தீர்வை விதிக்க வேண்டும்.

இரண்டாவதாக, உலக வர்த்தக கழகத்தின் பல்வேறு உடன்படிக்கை அமைப்புகளின் உறுப்பினராக இருக்கும் வகையிலும், TBT (வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப தடைகள்) மற்றும் SPS (சுகாதார மற்றும் தாவர சுகாதார நெறிமுறைகள்) உடன்படிக்கைகளில் கையெழுத்திட்ட வகையிலும், பிரிட்டன் உறுப்பு நாடுகளுக்கிடையே பாகுபாடு காட்டாத ஒழுங்குமுறை விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் ஒரு நாட்டிற்கு (ஐரோப்பிய ஒன்றியத்துக்கு) சுங்க வரியை கைவிடுகிறீர்கள் என்றால், எல்லா நாடுகளுக்கும் அதை கைவிட வேண்டும். இது பிற ஒழுங்குமுறை விதிகளுக்கும் பொருந்தும்.

பிரெக்சிட்டும் உலக வர்த்தகக் கழகமும்

அயர்லாந்து எல்லையில் பிரிட்டன் கட்டுப்பாடுகளை விதிப்பதை கைவிட்டு விட்டால் விரைவில் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதிப்பதையும் நிறுத்த வேண்டியிருக்கும் இல்லாவிடில் ஏதாவது ஒரு நாடு இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சட்டரீதியான வழக்கு ஒன்றை எழுப்பும்.

FT (Financial Times)-இன் ஆலன் பீட்டி இதை இவ்வாறு விளக்குகிறார்:

இங்கிலாந்து இந்த வகையிலான பாகுபாடு காண்பித்தால், உலக வர்த்தக கழகத்தில் பெரும் எண்ணிக்கையிலான வழக்குகளுக்கு அது வழிவகுக்கும்.

உலக வர்த்தகக் கழகத்தில் இது வரை ஐரோப்பிய ஒன்றியத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு வந்த பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து விலகி தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ளப் போகிறது. இந்த அமைப்பில் தனது அந்தஸ்தை அது நிலைநாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். உணவுப் பொருட்கள் இறக்குமதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே இப்போது இருக்கும் ஒதுக்கீடுகளைப் பிரித்துக் கொள்வதில் மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவு பிரிட்டனுக்கு தேவைப்படும். தன் நாட்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு டெண்டர்களில் பங்கு பெற உரிமையை வழங்கும் உலக வர்த்தகக் கழகத்தின் அரசு கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் பிரிட்டன் தனது நலன்களை புதிதாக உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நேரத்தில் உலக வர்த்தகக் கழகத்தின் அடிப்படை சட்டத்தில் மிகப்பெரிய மீறலை உருவாக்குவது, மற்ற நாடுகளை தனக்கு ஆதரவாக முடிவெடுக்க வைப்பதற்கு நிச்சயம் உதவி செய்யாது.

இதற்கு என்ன தீர்வு?

பிரிட்டன் பிற நாட்டு இறக்குமதிகளுக்கு விதிக்கும் அதே கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகளுக்கு விதிக்க வேண்டும் என்று சொன்னால் எதிர் திசையியிலும் இது பொருந்தும். ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனின் ஏற்றுமதிகளை மற்ற நாடுகளின் ஏற்றுமதிகளைப் போலவே சுங்க சோதனைகளுக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தியாக வேண்டும். இதன் பொருள் ஐரோப்பிய ஒன்றியமானது பிரிட்டிஷ் பொருட்களின் மீது புதிதாக கட்டணங்களையும் சோதனைகளையும் விதிக்கும் என்று இல்லை. சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் நாம் வெளியேறியதன் தர்க்கரீதியான விளைவாக அவை இருக்கும்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இந்தத் தடைகளை மாயமாக மறைந்து போகச் செய்யப் போவதில்லை. ஒழுங்குமுறைகளும் பொருட்களின் ஆரம்ப இடம் பற்றிய விதிகளும் அமல்படுத்தப்பட்டே தீர வேண்டும். சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் வெளியேறிய பின்னர், எல்லை சோதனைகள் எல்லா நாடுகளுக்கும் ஒரே போல அமல்படுத்தப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டும் தனியாக விலக்கு அளிக்க முடியாது.

அதனால்தான் ஒற்றைச்சந்தையில் எந்த அளவுக்கு பங்கேற்பது என்று தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பிரிட்டனின்’ அணுகுமுறையை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் தயக்கம் காட்டுகிறது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தனித்து மற்ற நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய ஆரம்பித்தவுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிலைகளை எட்டாத பொருட்கள் பிரிட்டனுக்குள் வர ஆரம்பிக்கும். அந்தப் பொருட்கள் பிரிட்டனின் எல்லையை கடந்து ஐரோப்பாவுக்குள் செல்வதை தடுப்பதற்கு எல்லை சோதனைகளை அமல்படுத்த வேண்டும்.

ஒரு நாடு சுங்க ஒன்றியத்திற்குள்ளும், ஒற்றைச் சந்தையிலும் பாதி உள்ளே பாதி வெளியே இருக்க முடியாது. ஏனெனில், அத்தகைய ஒரு ஏற்பாடு ஒட்டு மொத்த அமைப்பு முறையையும் குலைத்து விடும். அதாவது ஒரு சுங்க ஒன்றியம் அல்லது ஒற்றைச் சந்தைக்குள் அனுமதிக்கப்படும் எல்லா பொருட்களும் அதற்குள் எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி நகர முடிய வேண்டும். இதன் மறுதலை என்னவென்றால் அதற்கு வெளியிலிருந்து வரும் எல்லா பொருட்களும் சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

சுதந்திர சந்தை முதலாளிகளுக்கு தேவை

பொருட்களை இவ்வாறு தடைகளின்றி இடம் விட்டு இடம் அனுப்புவது கார்ப்பரேட்டுகள் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான உற்பத்தி/மதிப்பு சங்கிலிகளை உருவாக்கி பயன்படுத்துவதை சாத்தியமாக்குகிறது. கீழே உள்ள எரிபொருள் உட்செலுத்துவான் (fuel injector) ஒன்றின் நகர்வுகளை காண்பிக்கும் ஃபைனான்சியல் டைம்ஸ் வரைபடம், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பொருள் எப்படி வேறெங்கோ தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தி பொருளின் பகுதியாக சேர்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

பிரிட்டன் தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான துணை பாகங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்கிறது. மற்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான துணை பொருட்களை தான் அவற்றுக்கு அனுப்புகிறது. மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளபடி, கடந்த வருடம் பிரிட்டனின் ஏற்றுமதியின் மொத்த மதிப்பில் 30 சதவீதத்துக்கும் மேல், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற இடங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான துணை பொருட்கள் ஆகும்:

ஐக்கிய அரசு (UK) ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றிய மதிப்புச் சங்கிலி இடைநிலைப் பாகங்களின் மதிப்பு 1995-இல் மொத்த ஏற்றுமதியில் 5-இல் ஒரு பங்காக இருந்தது 2014-இல் 3-ல் ஒரு பங்கு என்று அதிகரித்துள்ளது. ஐரோப்பா வழியாக ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பிரிட்டன் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வது இல்லை; கண்டத்திற்கு அப்பால் ஏற்றுமதி செய்யப்படும் இறுதி பொருட்களுக்கான விநியோகஸ்தராக பிரிட்டன் இருக்கிறது.

முதலாளிகளின் கத்தி எந்தப் பக்கம் சாயும்?

பிரிட்டன் ஒற்றைச் சந்தையிலிருந்தும் சுங்க ஒன்றியத்திலிருந்தும் விட்டு விலகினால் இந்த வர்த்தகம் முழுமையும் எல்லை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும், கால தாமதத்தை பொறுதுதக் கொள்ள முடியாத கார்ப்பரேட் உற்பத்தி செயல்முறைகளுக்கு இடையூறாக மாறும். சில சந்தர்ப்பங்களில், இந்த விநியோக சங்கிலிகளை இடமாற்றம் செய்யும் அளவுக்கு இந்த இடையூறுகள் இருக்கும். ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை விட ஐக்கிய அரசு நிறுவனங்களை இது அதிகம் பாதிக்கும், ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் பிரிட்டனைத் தவிர்த்து வேறு நாடுகளை எளிதில் தேர்ந்தெடுத்து விட முடியும். ஆனால் பிரிட்டிஷ் நிறுவனங்கள் தங்களுடைய தேவைகளை பிரிட்டனுக்கு உள்ளேயே பெறும்படி மாறுவது சிரமமான ஒன்றாக இருக்கும்.

நிதிக் கட்டமைவு ஆய்வுகளுக்கான கழகம் இதை இவ்வாறு சொல்கிறது.

பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் சார்பு நிலை குறைவானது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டன் தவிர்த்த உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உள்ளீடுகளில் 1.5%-ஐ மட்டுமே பிரிட்டனிலிருந்து பெறுகின்றன.

விநியோக சங்கிலிகளில் ஏற்படும் சீர்குலைவு பிரிட்டனை விட மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.

மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பார்வையில் பிரெக்ஸிட் (Brexit) உடன் தொடர்புடைய பெரும்பாலான பிரச்சினைகள் பிரிட்டன் சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் வெளியேறுவது தொடர்பானவை. ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒரு அளவிற்கு அதை குறைக்கலாம் ஆனால் அது விநியோக சங்கிலிகளின் சுமுகமான ஓட்டத்தை மீட்டெடுக்காது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை இயக்குநரான இயன் ராபர்ட்சன், “உலக வர்த்தக அமைப்பு விதிகளை விட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FTA) பெரிய அளவு மேம்பட்டது இல்லை. ஒருமுறை விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு விட்ட பிறகு, ஏற்படும் சேதத்தை சரிக்கட்டுவது எளிதல்ல” என்கிறார்.

இதை பிரிட்டிஷ் துறைமுக சங்கமும் ஒப்புக்கொள்கிறது. உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழ் இருப்பதை விட, ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை(FTA)யின் கீழும் துறைமுக நடைமுறைகள் பெரிய அளவு வேறுபடாது என்கிறது அது. அதன் தலைமை நிர்வாகி கூறும்போது:

பிரெக்ஸிட் (Brexit)-க்குப் பிந்தைய ஏதாவது ஒரு விதமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இத்துறையில் பலரும் வரவேற்பார்கள், ஆனால் அது எல்லை கட்டுப்பாடுகளை இல்லாமல் செய்து விடப் போவதில்லை. எல்லை கட்டுப்பாடுகளை பொறுத்தவரை சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் விலகுவதின் தாக்கம் துறைமுகங்களை பொறுத்தவரை ஒப்பந்தம் போட்டாலும், போடாமல் போனாலும் ஒரே விளைவுதான் என்று மாறியிருக்கிறது. உண்மையில் இது ஐக்கிய அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் புதிய எல்லை கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியாததாக மாற்றி விடும். துறைமுகங்களிலும் முக்கிய வர்த்தக நுழைவு புள்ளிகளிலும் ஏற்படவிருக்கும் தாமதங்கள் தவிர்க்க முடியாத சாத்தியம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய முதலாளிகள் இதை எப்படி பார்க்கிறார்கள்?

இதனால் தான் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி பேசுவதற்கு அவசரப்படவில்லை எனத் தோன்றுகிறது. ஐரோப்பிய ஒன்றிய விநியோக சங்கிலிகளுக்கான சேதத்தை மட்டுப்படுத்தி, சுங்க ஒன்றியத்தையும் ஒற்றைச் சந்தையையும் பிரிட்டன் இன்றி செயல்படும் வகையில் மாற்றி அமைப்பது அதன் முதன்மையான குறிக்கோள். பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் போடுவது வெறும் “இருந்தால் நல்லது” என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஒரு எறும்புப் புற்றை தொந்தரவு செய்தால் என்ன நடக்கும்? எறும்புகள் எவ்வளவு சீக்கிரம் உடைப்பை அடைக்க முடியும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்குகின்றன. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனமாக கட்டப்பட்ட அமைப்பை சிதைக்கும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதைத்தான் செய்கின்றன. எந்தவொரு துளையையும் விட்டு வைக்காத வகையில் உடைப்பை அடைக்க அது மீண்டும் முயற்சிக்கிறது. ஒரு இரண்டு ஆண்ட காலம் மாறிச் செல்லும் கட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குள் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தங்களுடைய விநியோக சங்கிலிகளை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், அதனால் பிரிட்டனின் இறுதி விலகல் அவற்றுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.

கடைசியாக இது எப்படி போய் முடியும்?

ஐரோப்பிய ஒன்றியம், பொருட்களுக்கான ஒற்றைச் சந்தையில் மட்டும் பிரிட்டனை அனுமதிக்கும் புதிய சுங்க ஒன்றியம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கான சாத்தியம் உள்ளது. சாம் லோ மற்றும் ஜான் ஸ்ப்ரிங்போர்ட் வாதிடுவதைப் போல, இது ஜெர்சி தற்போது ஏற்பாடு செய்வதை ஒத்திருக்கும். பிரிட்டன் அதன் குடியேற்றக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் இது உதவுகிறது. “ஜெர்சி முறை தேர்வு” பொருட்களின் மீதான பரிசோதனையின் தேவைகளை அகற்றும், இதன் மூலம் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும், இது அயர்லாந்துடன் எல்லைக் கோடு பற்றிய பிரச்சனையையும் தவிர்த்து விடும். இதுவரை, நான் பார்த்தவற்றில் இந்த ஒரு திட்டம்தான், பிரிட்டன் தான் மீற முடியாத நிலைப்பாடுகளை பராமரித்துக் கொள்ளும் அதே நேரம் அயர்லாந்து தொடர்பாக அதன் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதை சாத்தியமாக்கும். அதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஏற்றுக் கொள்ள வைக்கும்.

இது நடக்கவில்லை என்றால் 2021-ல் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் போடாமலேயே ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனை கழற்றி விடுவது நடக்கலாம். அதற்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது விநியோகச் சங்கிலிகளை மாற்றியமைத்து, நாடுகளின் துறைமுக உள்கட்டமைப்புகளை சீரமைத்துக் கொண்டிருக்கும். அந்த நிதி ஆண்டின் இறுதி வரைக்கான வரவு செலவு திட்டத்தில் பிரிட்டனின் பங்களிப்பையும் பெற்றுக் கொண்டிருக்கும். அவ்வாறு, அதன் தங்கு தடையில்லாத வர்த்தக அமைப்பை பாதுகாத்துக் கொண்ட பிறகு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் அதற்குள் அலங்கோலப் பட்டுப் போய் விட்ட அண்டை நாடான ஐக்கிய அரசுடன் வர்த்தக உடன்படிக்கை பற்றி பேச்சு வார்த்தை நடத்த முன்வரலாம்.

மூலக் கட்டுரை : Why is the EU in no hurry for a trade deal?

மொழிபெயர்ப்பு : செல்வம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/why-is-the-eu-in-no-hurry-for-a-trade-deal/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“ஜனநாயக அரசியல் இல்லாமல் சட்ட உரிமைகள் சாத்தியமா?” – ஐ.டி சங்கக் கூட்டம்

ஜனநாயக உரிமையான தொழிற்சங்க உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கே நாம் அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவாலுக்கும் ஆதரவு தெரிவித்து அவர்களது போராட்டங்களில் இணைந்து கொள்ள...

மீனவர்களை பாதுகாக்க வக்கில்லாத மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும் – மோடியின் பேச்சு

"டெல்லியில் உள்ள பலமில்லாத அரசின் காரணமாகத்தான் இந்த நாடுகளுக்கு இந்த தைரியம் வந்துள்ளது. கடற்கரையோரம் முழுவதும் வசிக்கும் நமது மீனவர்களை பாதுகாக்க, அவர்களது பிழைப்பை நடத்த வாய்ப்பு...

Close