விப்ரோ நிறுவனத்தில் முறைகேடாக குறை மதிப்பீடு (low rating) கொடுக்கப்பட்டு, புராஜக்ட் கொடுக்கப்படாமல் பெஞ்ச்-ல் வைக்கப்பட்டு, ராஜினாமா செய்து விட்டு போகும்படி மிரட்டப்பட்ட ஊழியர்கள் சார்பாக நமது சங்கம் வைத்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் சென்னை குறளகத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் தொழிற்தாவா தாக்கல் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு ஒரு முறை அல்லது கூடுதல் இடைவெளியில் இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பல சுற்று பேச்சுவார்த்தைகளில் நமது சங்கத்தின் சார்பில் ஊழியர்களின் முறையீடுகள் கடிதமாக கொடுக்கப்பட்டன. விப்ரோ சார்பில் அவை அனைத்தையும் மறுத்து, ”விப்ரோ நிறுவன வரலாற்றிலேயே எந்த ஊழியரும் ராஜினாமா செய்து விட்டு போகும் படி கட்டாயப்படுத்தப்பட்டதில்லை” என்றும், ”தொழிற்தாவா மனுவில் இணைந்துள்ள ஊழியர்களுக்கு புராஜக்ட் வழங்கப்படாமல் பெஞ்ச்-ல் இருப்பது வழக்கமான நடைமுறை” என்றும் பதில் கடிதங்கள் கொடுத்தது. தொழிற்தாவா தொடர்பான நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் விப்ரோ நிர்வாகம் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டது.
இந்த அமர்வுகளின் தொடர்ச்சியாக பிப்ரவரி 28-ம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்திய அமர்வு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
நிர்வாகத் தரப்பில் தொடர்ந்து, ”யாரையும் ராஜினாமா செய்யும்படி மிரட்டியதில்லை” என்று பேச ஆரம்பித்தனர். அதை மறுத்து சங்க நிர்வாகிகளும் விப்ரோ ஊழியர்களும் தமது சொந்த அனுபவத்தை சொல்ல ஆரம்பித்ததும் “எல்லாரும் பேசக்கூடாது, ஊழியர்கள் அனைவரும் கூட்டத்துக்கு வரக் கூடாது” என்று நிர்வாகத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ”நிர்வாகிகள் மட்டும்தான் பேசுகிறார்கள், தேவைப்படும் போது தொடர்புடைய ஊழியர்கள் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். யார் பேச வேண்டும், யார் கூட்டத்தில் இருக்கலாம் என்பதை சமரச பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிதான் முடிவு செய்ய வேண்டும்” என்பதை சுட்டிக் காட்டி சங்கத்தின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
“இந்த தொழிற்தாவா நடப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை ஏனென்றால் ஒருசிலருக்கு ப்ராஜெக்ட் கொடுத்திருக்கோம் அதுபோல எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்போம்” என்று நிர்வாகம் மழுப்பியது.
“கடந்த 8 மாதங்களாக இதையேதான் சொல்கிறீர்கள். ஆனால் எப்போது புராஜக்ட் வழங்கப்படும் என்று சொல்ல மறுக்கிறீர்கள். மேலும், தொழிற்தாவாவில் இணைந்துள்ள ஊழியர் ஒருவருக்கு 2k வழக்கில் நீங்கள் உள்ளதால் உங்கள் புராஜக்ட் ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கிறோம் என்று நிர்வாகத் தரப்பு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது” என்பதை குறிப்பிட்டு, ஆதாரமாக அந்த மின்னஞ்சல் செய்தியின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது. அப்பட்டமாக எழுதப்பட்ட அந்த மின்னஞ்சல் செய்தியை “தவறாக பொருள் புரிந்து கொள்கிறீர்கள். இது பற்றி கேட்டு சொல்கிறோம்” என்று மழுப்பியது நிர்வாகத் தரப்பு.
முக்கியமாக மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன
- பெஞ்ச்-ல் வலுக்கட்டாயமாக அமர்த்தப்பட்டு, அதன் காரணமாக ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட உற்பத்தி திறனுடன் இணைந்த காலாண்டிற்கான இழப்பீட்டுத் தொகை (QPLC-Quarterly Performance Linked Compensation) வழங்கப்பட வேண்டும்
- இந்த வழக்கில் உள்ள அனைவருக்கும் ப்ராஜெக்ட் உடனடியாக கொடுக்க வேண்டும்.
- சட்ட விரோதமாக சம்பளத்தை குறைப்பது, வேலையை விட்டு வெளியேற்றும்படி மிரட்டுவது ஆகியவற்றுக்கு கருவியாக பயன்படுத்தப்படும் அப்ரைசல் முறையை ரத்து செய்ய வேண்டும்.
“ஒவ்வொரு அமர்வுக்கு வரும்போதும், ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகளின் பட்டியலையும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறோம். ஆனால், நிர்வாகத் தரப்பில் அதற்கான பதில்களை தராமல் ஆணவமாக பதில் சொல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினோம்.
“தொழிலாளர்கள் எழுப்பிய QPLC தொடர்பான புகார் தொடர்பாக, நிறுவனம் எந்தமாதிரியான சம்பள முறையை பின்பற்றுகிறார்கள் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்” என்று சமரச அலுவலர் வலியுறுத்தினார். மேலும், ”பின்னர் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கும் விதமாக நிர்வாகத் தரப்பில் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கடிதங்களையும் தமிழில் மொழிபெயர்த்து தர வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
ஆனால், நிர்வாகத் தரப்பு தொலைபேசியில் பேசிவிட்டு அவ்வாறு எங்களால் கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து விட்டனர். மேலும், கூட்ட குறிப்புகளிலும் கையெழுத்திட மறுத்து விட்டனர்.
இந்த தொழிற்தாவா தொடர்பான தனது கடிதங்களை தமிழில் தர வேண்டும் என்று விப்ரோ நிர்வாகத் தரப்பிடம் ஆரம்பம் முதலே தொழிலாளர் துறையால் வலியுறுத்தப்பட்டு வந்தது. 1.7 லட்சம் ஊழியர்களை பணிக்கு வைத்திருக்கும், ஆண்டுக்கு $848 கோடி விற்பனை வருமானம் ஈட்டும் விப்ரோ நிர்வாகம், தான் செயல்படும் அலுவல் மொழியில் கடிதத்தை கொடுப்பதற்கு மறுத்து வருகிறது. இது தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டு தமிழ் மொழியை மதிக்காத போக்கு ஆகும்.
“இப்போது பெஞ்ச்-ல் வைக்கப்பட்டிருக்கும் ஊழியர்களிடம் இந்த வேலையை கொடுத்தால் கூட செய்து தந்திருப்பார்கள்” என்று ஒரு ஊழியர் கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கில் விப்ரோ நிர்வாகத் தரப்பு ஆரம்பத்திலிருந்தே ஊழியர்களின் முறையீடுகளை கண்மூடித்தனமாக நிராகரிப்பது, ஆதாரங்களை புறந்தள்ளுவது, சட்ட நடைமுறைகளை அலட்சியப்படுத்துவது என்று நடந்து கொள்கின்றனர்.
இதை எதிர்த்து உறுதியாக போராடி ஊழியர்களின் உரிமையை நிலைநாட்டுவது விப்ரோ ஊழியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
– தொகுப்பு : சுகேந்திரன்
2 pings