ஆட்குறைப்புக்கு எதிராக NDLF-ல் அணிதிரண்ட விப்ரோ ஊழியர்கள் – தொழிலாளர் கூடம்

விப்ரோ நிர்வாகம் நெருக்கடி கொடுத்த போதும் வேலையை விட மறுப்பு! வேலைப் பறிப்புக்கு எதிராகப் போராட்டம்!

தொழில் தகராறு சட்டப் பிரிவு 2K-ன் அவர்கள் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்

கஸ்ட் 31, 2017 அன்று 20-க்கும் மேற்பட்ட விப்ரோ ஊழியர்கள் சென்னை பாரிமுனையின் குறளகத்தில் உள்ள தொழிலாளர் அலுவலரைச் சந்தித்தனர். முன்னதாக அவர்கள் தொழிலாளர் அலுவலரிடம் தொழில் தகராறு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

தங்கள் மீது சட்ட விரோத வேலைநீக்கம் திணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். திறன் குறைவானவர்கள் என்று சொல்லி அவர்களைப் பணியில் இருந்து விலகும்படி HR நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வந்திருக்கின்றனர். விலக மறுத்த ஊழியர்கள் தொழில் தகராறு எழுப்ப முடிவு செய்தனர்.

தனித் தொழிலாளி தாக்கல் செய்யும் 2A மனுவை அவர்கள் தாக்கல் செய்வதற்கு மாறாக, தொழில் தகராறு சட்டப் பிரிவு 2K-ன் அவர்கள் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (New Democratic Labour Front -NDLF)  – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் உறுப்பினர்கள் என்ற முறையில் கூட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

“தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நடப்பது முன்னமேயே பேசி வைக்கப்பட்ட, சட்ட விரோத ஆள் குறைப்பு” என்றும் “அதிருப்தியுற்ற சில ஊழியர்கள் எழுப்பும் தனித்த பிரச்சனை அல்ல” என்றும் “அதன் மீது அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்” என்பது அவர்களின் முயற்சியின் சாரமாகும்.

விப்ரோ (WIPRO) இந்தியாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம். ஏறக்குறைய 1,60,000 ஊழியர்கள் விப்ரோவில் பணி செய்கின்றனர். இந்தக் கம்பெனி உலகத்தின் பல இடங்களில் இயங்குகிறது. தனது நேர்மை பற்றியும் ஒவ்வொரு நபரையும் மரியாதையோடு நடத்துவது பற்றியும் பீற்றிக்கொள்ளும் நிறுவனம் விப்ரோ. இருந்தபோதும், சட்ட விரோத வேலைநீக்கத்தை எதிர்கொண்டவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊழியர்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வெளியேற்றுவதில் விப்ரோ ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் முதல் செய்த மதிப்பீடு நிகழ்வின்போது, 8 முதல் 12 ஆண்டு அனுபவம் உள்ள ஊழியர்களுக்குக் குறைவான மதிப்புக் குறியீட்டை (வழக்கமாக B3 மற்றும் C1 பிரிவுகள்) வழங்கியிருக்கிறது. இங்கே ‘பிரிவு‘ என்பது ஊழியரின் அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் ஊழியரின் தர வரிசை என்ன என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த மதிப்பீடு முறை முற்றிலும் ஒரு பக்க தன்மைகொண்டது. ஊழியர் ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தலாம். ஆனாலும், தர நிர்ணயம் செய்து முடிக்கப்படும் வரை ஊழியருக்கு தன் நிலை என்னவென்றே தெரியாது. முன்பெல்லாம், தங்களுக்கு வேறு வழியில்லை என்று ஊழியர்கள் முடிவு செய்து, வேலையை விட்டு விலகிக்கொள்வார்கள். பின்னர், NDLF, FITE போன்ற தொழிற்சங்கங்கள் உருவாக ஆரம்பித்தன. பல நிறுவனங்களில் ஊழியர்களை அமைப்பாக்கத் துவங்கின. இந்தத் திறன் மதிப்பீடு நடவடிக்கை மூலம் சட்ட விரோதமான முறையில் பெருமளவு ஆள் நீக்கம் செய்வது நடக்கிறது என்று குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.

விப்ரோ நிறுவனத்தின் தலைமை HR சவுரப் கோவில்

விப்ரோ நிறுவனத்தின் தலைமை HR சவுரப் கோவில்

விழிப்புணர்வு அதிகரிக்க ஆரம்பித்ததால், ஊழியர்கள் எதிர்த்து நிற்க ஆரம்பித்தனர். வேலையை விட்டு விலகுவதாகக் கடிதம் கொடுக்க மறுத்தனர்.

“எங்களைக் கெட்டவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவோம் என்று மிரட்டிய போதும், எங்களின் நடத்தைச் சான்றிதழ் பிரச்சனையாகிவிடும் என்று மிரட்டியபோதும், எங்களில் சிலர் வேலையை விட்டு விலக மறுத்துவிட்டோம். அதன் பின் எங்களை ‘காத்திருப்போர்‘ (benched) பட்டியலில் வைத்துக்கொண்டனர்“, என்று ஓர் ஊழியர் சொன்னார். தனது வாழ்வாதாரமே பறிக்கப்பட்டு விட்டது என்று கருதும் நிலையில் அந்த ஊழியர் இருந்தார்.

தொழிலாளர் கூடம் பல ஊழியர்களுடன் உரையாடியது. “தங்களுக்கு போனஸ், பாராட்டுக் கடிதம், திறன்பட செயல்பட்டமைக்கான விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது” என்று அவர்கள் சொன்னார்கள். இத்தனை பாராட்டுக்கள் அளித்திருந்தபோதும், மறுத்துப் பேசிய ஊழியர்களை நிர்வாகம் ‘காத்திருப்போர்‘ பட்டியலில் சேர்த்துவிடும். அத்துடன் அவரின் ‘புரோபைலை‘ (profile) மென்பொருள் கொண்டு பூட்டி வைத்துவிடும். இந்த மென்பொருள் வழியாகத்தான் ஆள் சேர்ப்பு, வேலை பிரித்தளிப்பு, புராஜெக்டுகள் அளிப்பது நடக்கும்.

இதன் பொருள் என்னவென்றால், வேலை காலியாக இருக்கும் எந்த புராஜெக்டுக்கும் ஊழியர் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி கோர முடியாது என்பதுதான். அதுபோல, ஊழியர் தேவைப்படுகின்ற ஒரு நிர்வாகி ஊழியலின் புரோபைலை அணுக முடியாது. HR நிர்வாகியை அணுகவும் என்ற பதில்தான் நிர்வாகிக்குக் கிடைக்கும்.

“அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார் என்பதுதான் இதன் பொருள். ஊழியர் மாதக் கணக்கில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பார். அதன்பின் கம்பெனியின் கொள்கைப்படி பிரிந்துபோகும் நடைமுறைக்கு ஊழியர் ‘தகுதி’ பெற்றுவிடுவார். உண்மை என்னவென்றால், ஓர் ஊழியர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் காலத்தைக் குறைப்பதற்கும் ஆள் குறைப்பை நியாயப்படுத்தவும் 2017 மே 10 அன்று  தனது கொள்கையில் அவரச அவசரமாக ஒரு திருத்தத்தை கம்பெனி மேற்கொண்டது“, என்கிறார் ஷியாம் சுந்தர். இவர் NDLF ஐ.டி  ஊழியர்கள் பிரிவின் தலைவர் ஆவார்.

விப்ரோ

தனது நேர்மை பற்றியும் ஒவ்வொரு நபரையும் மரியாதையோடு நடத்துவது பற்றியும் பீற்றிக்கொள்ளும் நிறுவனம் விப்ரோ.

நான்காவது பேச்சுவார்த்தை நடந்த ஆகஸ்ட் 31 அன்று, இறுதியாக  விப்ரோவின் சார்பாக அதன் HR- அலுவலர்களும், கம்பெனியின் சட்டத்துறையினரும் தொழிலாளர் அலுவலர் முன்பு , ஆஜர் ஆனார்கள். ஊழியர்கள் அளித்த குறைபாடுகள் குறித்த மகஜரைப் பெற்றுக்கொண்டனர். செப்டம்பர் 18-க்கு முன்பு பதில் அளிப்பதாகச் சொன்னார்கள். யூனியனைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நகரங்களில் உள்ள விப்ரோ ஊழியர்களின் பெயர் பட்டியலை அளித்தார்கள். முன்னமே பேசி முடிவு செய்யப்பட்ட, மனப்பூர்வமான நடவடிக்கைதான் இது என்று அரசுக்குப் புரிய வைப்பதற்காகத்தான் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டது.

NDLF-ன் மற்றொரு செயல்பாட்டாளர், “நாங்கள் ஊழியர்கள் பலரை அணுகுகிறோம், அவர்கள் மெதுவாகத்தான் என்றாலும் யூனியனின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறார்கள்“, என்று சொன்னார். மற்ற பலரும் முன்வராமைக்கு கெட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவோம் என்ற அச்சம்தான் காரணமாக இருக்கிறது. இருந்தபோதும், யூனியனுக்கான ஆதரவு தளர்வில்லாமல் வளர்ந்து வருகிறது.

  • காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களின் புரோபைல்களும் விடுவிக்கப்பட வேண்டும்
  • காத்திருப்போர் பட்டியலில் இருந்தபோது பிடித்தம் செய்யப்பட்ட படிகள் திரும்ப அளிக்கப்பட வேண்டும்
  • அவர்களின் மாறும் சம்பளம் (variable pay) பழையபடி அளிக்கப்பட வேண்டும்.
  • அதுபோல, நிர்ப்பந்தத்தின் கீழ் வேலையிலிருந்து விலகிய ஊழியர்களுக்கு மீண்டும் வேலை அளிக்கப்பட வேண்டும்.
  • தற்போதைய ஆள் குறைப்பு பிரச்சனையையும் தாண்டிச் சென்று யூனியனை அங்கீகரிக்க வேண்டும்
  • கொள்கை மாற்றம் குறித்து யூனியனிடம் அல்லது சம்பந்தப்பட்ட தனித்தனி ஊழியர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்

என்று NDLF – ஐ.டி ஊழியர்கள் பிரிவு கோரிக்கை வைத்துள்ளது.

ஆள் குறைப்பின் காரணமாக ஆயிரக் கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழப்பார்கள் என்பதற்கு மிக அதிகமான ஆதாரங்கள் இருக்கும் நிலையில் அரசாங்கம் தன் பாராமுகத்தைத் தொடர்கிறது.

ஐ.டி துறையில் மற்றவர்கள் செய்வது போல, 8 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள நடுநிலை ஊழியர்களைத்தான் விப்ரோவும் குறிவைக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மற்றொரு வேலை   தேடுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். தனது 40-களில் இருக்கும்   அதுபோன்ற ஒரு ஊழியர் கடந்த ஆண்டு நவம்பரில் வேலையிழந்தார். இதுவரை அவரால் வேறு வேலை தேடி சேர முடியவில்லை.

“அவர்கள் பிறந்த தேதி என்னவென்று பார்ப்பார்கள். 70-களில் பிறந்தவர் என்றால் உடனடியாக வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள்“, என்றார் அந்த ஊழியர்.

விப்ரோ நிறுவனத்தின் தலைமை HR பிசினஸ் ஸ்டேண்டர்டுக்கு அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்தார். ஒரு கேள்விக்குப் பதில் அளித்தபோது 10 முதல் 15 ஆண்டு அனுபவம் உள்ளார்கள் ‘தானாக முன்வந்து வெளியேறுதலை‘ ஏன் எதிர்கொள்கிறார்கள் என்று சவுரப் கோவில் சொன்னார்–

“அந்தக் கட்டம் வரும்போது வயதானவர்கள் ஆகிப் போகிறார்கள். மாற்றம் செய்துகொள்வதற்கான திறன் குறைந்துபோய்விடுகிறது. இளையவர்கள் மாற்றத்திற்கு ஏற்ப எளிதில் மாறிக்கொள்வார்கள். புதியவற்றை முயற்சித்துப் பார்ப்பார்கள். தாங்கள் கற்ற பழைய விஷயங்களை விட்டுவிட்டு விரைவாகப் புதியவற்றைக் கற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள். இவையெல்லாம் எளிதானவை அல்ல என்று நினைப்பவர்களும் இருப்பார்கள். அல்லது சிலர் மிக வேகமாகக் கற்றுக்கொள்வார்கள். தொழில் வளர்ந்து முன்செல்லும்போது, அவர்கள் கண்ணுக்குத் தெரியாத மேற்கூரையில் மோதிக்கொள்வார்கள் (அதாவது அதற்கு மேலும் வேலையில் முன்னேற முடியாது என்ற கண்ணுக்குத் தெரியாத தடையை எதிர்கொள்வார்கள்). அப்படி நடக்கும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.“

ஆனால், “சவுரப் கோவிலும் கூட இளைஞர் போல தெரியவில்லை” என்கின்றனர் விப்ரோ ஊழியர்கள். “வயது பற்றிய கருத்தாக்கம் ஊழியர்களுக்கு மட்டும் பொருந்துகிறது, நிர்வாகத்திற்குப் பொருந்துவதில்லையே, ஏன்?” என்று கேட்கின்றனர். இதனை ஒரு ‘சமூகப் பிரச்சனை‘ என்று சொல்லும் நிர்வாகம் “என்ன விலை கொடுத்தேனும் லாபம் சம்பாதிப்பது என்ற தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் தொழிலில் முதலாளிகள் கொடுக்கும் நெருக்கடி அதிகரித்துவர, புதிய புதிய வழிகளைக் கண்டுபிடித்து, ஆள் குறைப்பு செய்வதற்கான காரணம் லாபத்தை அதிகப்படுத்தி கொள்வதுதான் என்று நிரூபிக்கிறார்கள்.

கண்ணை மூடிக்கொள்ளும் அரசு

ஆள் குறைப்பின் காரணமாக ஆயிரக் கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்கிறார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கும் நிலையில் அரசாங்கம் தன் பாராமுகத்தைத் தொடர்கிறது. தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் யூனியன்கன் விடுத்த கோரிக்கையை ஏற்றுத் தொழிலாளர் துறை இணை ஆணையர் நிர்வாகங்களின் பிரதிநிதிகளுடன் ஆகஸ்ட் 28 அன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார் என்று NDLF செயல்பாட்டாளர்கள் சொன்னார்கள்.

இருந்தபோதும், நிர்வாகப் பிரதிநிதிகள் சிலர் JCL ஐச் சந்தித்து தொழிற்சங்கம் எதனுடனும், இடதுசாரிகளுடனும் தாங்கள் பேச விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் யூனியன் தலைவர்களைச் சந்தித்த JCL, இரு தரப்பிடமிருந்தும் தனித்தனியாக அறிக்கைகளைப் பெற்று தான் கண்டுணர்ந்த விஷயங்களை அரசுக்கு அறிக்கையாக அனுப்பப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.

இதற்கு யூனியன்கள் ஆட்சேபனை செய்திருக்கிறார்கள். “என்ன நடக்கிறது என்று அரசுக்கு நன்கு தெரியும்– மே மாதத்திலேயே விரிவான அறிக்கை ஒன்றைத் தொழிலாளர் செயலாளரிடம் NDLF கொடுத்திருக்கிறது.’

பத்திரிகையாளர்கள் இப்பிரச்சனை பற்றி எழுதுவதற்காக அங்கு வந்துவிட்டதால் எரிச்சலடைந்த JCL தான் எதனையும் பேச விரும்பவில்லை என்று கூட்டத்தை முடித்துவிட்டார்.

நிர்வாகங்களுக்குச் சுதந்திரமான அதிகாரத்தை அரசு வழங்குவதால், யூனியன்கள் நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற நடைமுறையைப் பின்பற்றும் பிற கம்பெனி நிர்வாகங்களுக்கு எதிராகத் தொழில் தகராறு எழுப்புவது பற்றி NDLF பரிசீலித்து வருகிறது.

நன்றி : தொழிலாளர் கூடம்

(ஒரு சில வாக்கிய அமைப்புகள் மாற்றப்பட்டன, வடிவமைப்பு சீர் திருத்தி பொருத்தமான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.)

 

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/wipro-employees-fight-layoffs-as-ndlf-members/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
லாப இலக்குக்காக அனுபவசாலி ஊழியர்களை தூக்கி எறியும் ஐ.டி நிறுவனங்கள் – வீடியோ

அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டு, குறைந்த சம்பளத்தில் புதியவர்களை அமர்த்தி லாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பங்குகளை வாங்கிய நிதிமூலதன நிறுவனம் லாபத்தை அதிகரிக்கும்படி...

“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எதிரானது இந்து மதம்” – டாக்டர் அம்பேத்கர்

“ஹிந்து ராஷ்டிரம் உருவாக்கப்பட்டால் அது இந்த நாட்டின் மீதான மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்துக்கள் என்ன சொன்னாலும் இதில் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை. ஹிந்து...

Close