சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (25-11-2018) “பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கமும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு துவக்க விழாவும் நடைபெற்றது. அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த நிலையில் பல்வேறு பெண் ஆளுமைகள் வரிசையாக உரை நிகழ்த்தினார்கள்.
உரையாற்றியவர்களில் நீதியரசர் சந்துரு மட்டுமே ஆண். இந்த நிகழ்ச்சிக்கு ஏன் நீதியரசர் சந்துருவை அழைத்திருக்கிறோம் என்ற காரணத்தையும் மேடையில் கூறினார்கள். அதற்கேற்பவே நீதியரசர் சந்துரு அவர்கள் பல்வேறு சட்ட பிரிவுகள், பல்வேறு நிகழ்வுகள் என்று உதாரணங்களுடன் பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆளுமைகள் ஆற்றிய உரையையும் இன்றைய எதார்த்தத்தையும் நாம் ஒப்பிட்டு புரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. பேசியவர்கள் அனைவரது உரையையும் வழங்க முடியாவிட்டாலும் தொகுப்பாக சில விவரங்களை பார்க்கலாம்.
தற்போது நடக்கும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், சாதிய ஆணவ படுகொலைகள் போன்றவற்றை பார்க்கும் படித்த நபர்கள் மத்தியில் இவற்றையெல்லாம் சரிசெய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வலுவான சட்டமியற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
நேற்றைய நிகழ்வில் கிடைத்த தகவல்கள் எவ்வாறு, யாருக்கு விழிப்புணர்வு ஊட்டுவது? சட்டம் இயற்றினால் மட்டும் போதுமா? என்று கேள்விகளை எழுப்பியுள்ளது.
விழிப்புணர்வு என்றால் என்ன?
நமது நாட்டில் பெரும்பாலான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் புகாரளிக்கலாம் என்ற புரிதலே கூட இல்லாமல் இருக்கிறார்கள். பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார்கள். அதைவிட அதிகமாக ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு இந்த விழிப்புணர்வு தேவையாக உள்ளது. குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டியவர்களே தவறு செய்யும்போது இதை எங்கிருந்து தூங்குவது என்று மேலும் சிக்கலாகிறது.
மற்றொருபக்கம் இயற்றப்பட்ட சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பத்து நபர்களுக்கு மேல் பணியாற்றும் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஐ.சி.சி (Internal Compliance Committee) என்ற கமிட்டி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. ஆனால் எத்தனை நிறுவனங்களில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்று கிரீன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சர்வே நடத்தியது. இதில் பெரும்பாலான நிறுவனங்களில் இந்த கமிட்டி இல்லை என்று தகவல் கிடைத்துள்ளது.
மேலும், சட்டமே எப்படி இயற்றப்படுகிறது?
- ஐ.சி.சி கமிட்டியில் சமூக ஆர்வலர் ஒருவர் இருக்கவேண்டும் என்ற பழைய முறையை நீக்கிவிட்டு துறை ரீதியான அனுபவம் வாய்ந்த நபர் இருக்கலாம் என்று எழுதியுள்ளார்கள். துறை ரீதியான நபர்கள் என்பதால் நிர்வாகமே அவரை நியமித்துக் கொள்ளும். இதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நாம் நினைக்கலாம். சமீபத்தில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் மீது பெண் உயர் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் தொடுக்கிறார். அதை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டவரோ மற்றொரு காவல்துறையில் ஓய்வுபெற்ற ஆண் உயர் அதிகாரி. இந்த அதிகாரி இந்த புகாரை எவ்வாறு கையாள்வார் என்பது நமக்கு புரியும்.
- புகாரை விசாரித்து உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதையும் மேல்முறையீடு செய்யலாம் என்று எழுதியுள்ளார்கள். மேல்முறையீடு என்றால் உதாரணமாக 1998 -ல் தொடுக்கப்பட்ட தொழிலாளர் வழக்கு இன்னமும் முற்று பெறாமலே உள்ளது. இப்படி செய்வதன் மூலம் நீதி கிடைப்பதற்கு மிகவும் தாமதமாகும் என்ற முறையில் பாதிக்கப்பட்டவரை அலைக்கழிக்கிறார்கள்.
- தாராளமாக புகார் தெரிவிக்கலாம் என்று கூறிவிட்டு புகார் தெரிவிப்ப வரை மிரட்டும் விதமாக ஒரு வழியும் ஏற்படுத்தியுள்ளார்கள். புகார் நிரூபிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை புகார் நிரூபிக்கப்படாவிட்டால் புகார் கொடுத்தவருக்கு தண்டனை. பார்ப்பதற்கு ஏதோ நியாயமானதாக தோன்றலாம். ஆனால் சட்டம் இயற்றுவது, சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள், அதை நடைமுறைப்படுத்துபவர்கள் என்று பல்வேறு முட்டுக்கட்டைகள் உடன் இருக்கும் இந்த சட்டத்தின்படி புகார் நிரூபிக்கப்படுவது அதன் உண்மைத்தன்மையை பொறுத்தா இருக்கிறது.
- ஐ.சி.சி போலவே எல்.சி.சி என்றொரு அமைப்பும் நிறுவப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதை நடைமுறைப்படுத்துவது மாவட்ட ஆட்சியரின் கடமையாகும். ஆனால் மாவட்ட ஆட்சியர்கள் இந்த கமிட்டிகளை அமைக்காமலும், அமைக்கப்பட்ட இடங்களிலும் மாவட்ட ஆட்சியரையே அதன் தலைமை பொறுப்புகளிலும் அமர்த்திக்கொண்டு செயல்படுத்தாமல் உள்ளனர்.
எனவே, சட்டம் இயற்றினால் மட்டும் போதாது, அதை அமல்படுத்துவதை உறுதி செய்ய இது போன்ற இயக்கங்கள் தேவை என்று நீதிபதி சந்துரு வலியுறுத்தினார்.
ஐ.டி துறையில் பணியாற்றும் நாம் இந்த நிகழ்வில் இருந்து புரிந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.
சட்டம் இயற்றுவது என்றால் என்ன? சட்டமியற்றும் இடத்தில் இருப்பவர்கள் பற்றிய புரிதல் என்ன? சட்டத்தை நடைமுறைப்படுத்த போவது யார்? இப்படிப்பட்ட கேள்விகளுடன் தான் நாம் ஒவ்வொரு பிரச்சனையும் அணுக வேண்டியுள்ளது.
எனவே வேறு எந்தத் துறையையும் விட பெண்கள் குவிந்து பணியாற்றும் ஐ.டி துறை பெண்கள் இதை அரசியல் புரிதலுடன் முன்னெடுக்கும் பட்சத்தில் சமூகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை உடனடியாக குறைக்கவும், நிரந்தரமாக தீர்க்கவும் வழிவகை செய்ய முடியும்.
படித்த ஓரளவிற்கு சுதந்திரமாக பணியாற்றும் நம்மால் செய்ய முடியாவிட்டால் வேறு யாரால் இங்கு இதை நிறைவேற்ற முடியும்?
– பிரவீன்
நமது ஃபேஸ்புக் தளத்தில் முதலில் வெளியிடப்பட்டது