ஆண்களின் அடிமைகளா பெண்கள் – ஒரு ஐ.டி ஊழியரின் குமுறல்!

மெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் ஐ.டி துறையில் பல ஆண்டுகளாக பணி புரிந்து வரும் இந்த நண்பர் தற்போது சூடாக பேசப்படும் சபரிமலைக்கு பெண்கள் போக அனுமதிக்கப்படுவது பற்றிய தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெண்கள் ராக்கெட்டில் விண்வெளிக்கு செல்லும் காலத்தில், விஞ்ஞானிகளாக கொடி கட்டிப் பறக்கும் காலத்தில், ஐ.டி நிறுவனங்களில் லட்சக் கணக்கில் வேலை செய்யும் காலத்தில், தொழிற்சாலைகளிலும், கட்டிடத் தொழிலிலும் கோடிக்கணக்கில் உழைக்கும் காலத்தில் சபரி மலைக்கு பெண்கள் போகக் கூடாது என்பதை எப்படி பார்க்க வேண்டும் என்று  இது விளக்குகிறது.

பெண் தெய்வங்களை போற்றிப்புகழும் சமூகத்தில் பெண் அடிமை போல் நடத்தப்படுகிறாள். பெண் என்பவள் ஆணின் தனிச் சொத்து போல் சித்தரிக்கப்படுகிறாள்.

மாதவிடாய் உதிரப் போக்கு

தாய்மையின் வெளிப்பாடாக இயற்கையில் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு போக்கு தீட்டு என்று பழிக்கப்படுகிறது.

தாய்மையின் வெளிப்பாடாக இயற்கையில் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு போக்கு தீட்டு என்று பழிக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னும் தடுப்பது, தீர்ப்புக்குப் பின்னும் கோயிலுக்கு வரும் பெண்களின் வயதை கேட்டு தடுப்பது, அனுமதிக்க மறுப்பது எதன் வெளிப்பாடு. அதன் மூலம், கோயிலுக்குச் செல்ல நினைக்கும் பெண்களையும் அச்சுறுத்த முயற்சிப்பதை எதில் சேர்ப்பது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நிகழ்வு எனக்கு என் கல்லூரி நாட்களை நினைவுபடுத்துகிறது. தென்தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த நான் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் சக கல்லூரி நண்பன் கவியரசன் அவனது கிராமத்தை பற்றி கூறியது எனக்கு ஞாபகம் வந்தது.

ஒரே சமூகத்தைச் [சாதியைச்] சேர்ந்த 200 குடும்பங்கள் வாழும் அந்த ஊரில் உள்ள ஒரு விசித்திரமான வழக்கம் கேட்டு நான் வருந்திய காலம் அது. அந்த கிராமத்தில் வயது வந்த பெண்கள் எல்லோரும் மாதவிடாய் காலங்களில் ஊருக்கு வெளியே ஒரு பொது இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். மாதவிடாய் காலங்களில் அவர்களை யாரும் தொட்டு பேசினால் தீட்டு. இதனால் உணவும் நீரும் பெற அவர்களை தனியாக மண்பாண்டங்களை வைத்துக் கொள்கிறார்கள். மாதவிடாய் காலங்களில் தாய்மார்கள் குழந்தைகளுடன் இருப்பதும் தவிர்க்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் தெய்வ நிந்தனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆண் குழந்தை பாக்கியம் இருக்காது என்றும் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் இப்படிப்பட்ட கிராமங்களும் வழக்கங்களும் இருக்கவே செய்கின்றன. இந்த வழக்கம் இன்னும் அந்த கிராமத்தில் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்குக் காரணம் அவர்களது படிப்பறிவின்மை அறியாமை மூட நம்பிக்கை என்று நான் நினைத்த காலம் உண்டு.

இந்த வளர்ச்சி அடைந்த சமூகத்தில் பெரும்பாலான மக்கள் கல்வியறிவு பெற்றிருக்கும் இந்தக் காலத்தில் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் கல்வியறிவு உடையவர்களாகவும் பெரிய பதவிகளில் இருப்பவர்களாகவும் சமூகத்தில் பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் இருந்தும் கூட இன்னும் பிற்போக்கான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் அதற்கு சாஸ்திர சம்பிரதாயம் என்று பேசுவதும் வருத்தமளிக்கிறது.

இயற்கையாக தாய்மை பேறு உடைய பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு இயல்பானது. இதனால் இறைவனின் புனிதம் கெடும், மனித குலத்தைப் பாதிக்கும் என்று பேசும் இவர்கள் என்னதான் கல்வியறிவு பெற்று இருந்தாலும் முட்டாள்களே!

இவர்கள் கற்ற கல்வியால் இவர்கள் பெற்ற பதவிகளால் இந்த சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை. 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இன்னும் பாலினத்தின் பெயரால் இயற்கை உபாதைகள் பெயரால் பெண்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் பறிக்க நினைப்பது நம்மை வரலாற்றில் முன்னோக்கி அல்ல பின்னோக்கித் தள்ளும்.

நண்பர்களே நாம் வரலாற்றில் முன்னோக்கி செல்ல ஆசைப்படுவோம். மதச் சாயம் பூசாதீர்கள், அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். ஆண்களுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன உரிமைகள் இருக்கின்றதோ அதை உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கின்றன…

நன்றி

– நான் தமிழ்

Permanent link to this article: http://new-democrats.com/ta/women-not-slaves-of-men-an-it-employee/

Leave a Reply to Shanmugam Cancel reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்

சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பகுதிகளில் ஏற்படும் சமீபத்திய போக்குவரத்து நெரிசலும் அதனால் பல இன்னல்களையும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.

B1 விசா முறைகேடு – உஷார்!

இந்த விசாவை பயன்படுத்தி மேற்சொன்னபடி ஆண்டுக்கு மூன்று மாதம், ஐந்து மாதம் என்று ஊழியர்கள் வேலை செய்யலாம். ஆனால் அவர்கள் மற்றவகை விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது இது கண்டுபிடிக்கப்படும்....

Close