தென் ஆப்பிரிக்காவில் சுரங்கத் தொழிற்சங்கத்தின் சார்பில் சுரங்க தொழில் நிறுவனங்களுக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டம்:
தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கமான , சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான ஒன்றியம் (AMCU), சுரங்க நிறுவனங்களான ஆம்ப்லேட்ஸ் மற்றும் சிபானி-ஸ்டில்வாட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த மூன்று மாத காலமாக சுரங்கத் தொழிலாளர்கள் இந்நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இத்தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பண வீக்கத்திற்கு ஏற்ப மருத்துவ உதவிக்கு அளிக்கப்படும் தொகைகளில் மாற்றம், தொழிலாளர்கள் மகப்பேறு விடுப்புக்காலம் நீட்டிப்பு,உயிர் இழந்த தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வீடு வழங்குதல்,, ஆட்குறைப்பின் போது வழங்கப்படக்கூடிய தொகையை அதிகப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளுக்காக மூன்று மாதம் பேச்சு வார்த்தை நடத்தி அது பலன் அளிக்காததால் போராடி வருகின்றனர்.
கொடூரமான முதலாளித்துவத்திற்கெதிராக, வேலைநிறுத்தத்தின் மூலமே எங்கள் கோரிக்கைகளைப் பெற முடியும் என்கின்றனர் அச்சுரங்கத் தொழிலாளர்கள்.
ஆட்குறைப்புக்கெதிராக பங்களாதேசில் நடைப்பெற்ற தொழிலாளர்களின் போராட்டம்:
எஸ்.எஃப். டெனிம் அப்பரல்ஸ் என்ற ஆயத்த ஆடை நிறுவனம் 700 தொழிலாளர்களை ஈத் விடுமுறையிலிருந்து பணிக்குத் திரும்பியபோது முன் தகவல் ஏதும் இன்றி, பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை, பங்களாதேசின் வரலாற்றில் மிகப் பெரிய பணிநீக்கங்களில் ஒன்றாகும், இது பரவலான கண்டனத்தைத் தூண்டியுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஏராளமான தொழிலாளர்கள் இப்போது ஆடைத் தொழிலாளர்கள் அமைப்பான சோமிலிட்டோ கார்மென்ட்ஸ் ஸ்ராமிக் கூட்டமைப்புடன் இணைந்து ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் முப்பது தொழிலாளர்கள், கர்ப்பிணியாக உள்ளனர் என்று தொழிற்சங்க நிர்வாகி தெரிவிக்கிறார். பணிநிக்கம் செய்யப்பட்டதால் இந்த முப்பது தொழிலாளர்கள் எந்த ஒரு பேறுகால வசதிகளையும் பெற முடியாத நிலை உள்ளது.
இந்த ஆயத்த ஆடை நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஏற்கனவே 100 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் 38 தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. எஸ்.எஃப். டெனிம் அப்பரல்ஸில் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தை அமைப்பதற்கு நிர்வாகம் தொடர்ந்து தடையாக இருப்பதாகக் கூறுகிறார்கள் அதன் தொழிலாளர்கள்.
தற்போது, பங்களாதேசில் சுமார் 4,500 ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்த போதிலும் பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 650 ஆகும், அவற்றில் 50 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. என்று சோசலிச தொழிலாளர் முன்னணி கூறுகிறது..
பங்களாதேசின் ஆடை மற்றும் ஜவுளித் தொழிலாளர்களில் பெரும்பாலோர் மாதத்திற்கு 95 அமெரிக்க டாலர்களை ஊதியமாக அடைவது கடினமாக இருக்கிறது.மொத்தமுள்ள. ஜவுளித் தொழிலாளர்களில் பெண்கள் கிட்டத்தட்ட 85% உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் மற்றும் மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகைகள் இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
பெருவில் தாமிர சுரங்கத்திற்கு எதிராக விவசாய, கல்வி, கட்டுமானத் தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்பு:
பெருவின் இஸ்லே மாகாணத்தில் அமைய இருக்கும் மெக்சிகோ நாட்டின் தாமிர சுரங்க நிர்மாணத்திற்கெதிராக அப் பிராந்தியத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் பெரிய வேலை நிறுத்தத்தை செப்டம்ர் 16ம் தேதி அன்று அறிவித்திருக்கிறது.
பெருவின் இந்தப் பகுதியின் மக்கள் சில மாதங்களாக இந்த தாமிரச் சுரங்கம் தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று போராடி வருகின்றனர்.
செப்டமர் 7ம்தேதியன்று நடைப்பெற்ற சாலைமறியலின் போது இரண்டுப் போராளிகள் காவல் துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டனர். அதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
எல் போஹோ, என்ற பிராந்திய செய்தி ஊடகம், காவல்துறையினர் தினசரி அடிப்படையில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் பிரதான ஊடகங்கள் இந்த உண்மையை மறைக்கின்றன. மக்கள் தினமும் துப்பாக்கிகளால் காயமடைந்து கொண்டிருக்கும்போது, அவர்கள் காவல்துறையினரால் தடுக்கப்படுவார்கள் என்ற அச்சத்தால் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லமால் முடக்கியுள்ளனர். என்று தெரிவிக்கிறது.
சென்ற ஜூலை மாதம், ஜனாதிபதி மார்ட்டின் விஸ்காராவின் வலதுசாரி அரசாங்கம் போராட்டத்தை நிறுத்த பெரு தேசிய காவல்துறையைச் சேர்ந்த (பி.என்.பி) 400 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை இந்த பிராந்தியத்தில் நிறுத்தியது. ஆகஸ்ட் கடைசி வாரத்தில், மொலெண்டோவில் உள்ள ஹைட்ரோகார்பன் முனையத்தில் பி.என்.பி.க்கு ஆதரவாக இராணுவப் படைகளின் தலையீட்டையும் அரசாங்கம் அங்கீகரித்தது.
பெரு மக்களை துப்பாக்கிமுனையில் அடக்கி தாமிர சுரங்கத்தை நிறுவ முடியும் என்று நினைக்கும் வலது சாரி அரசாங்கத்தை திரும்ப தாக்க இதோ செப்டமர் 16ம் தேதி மறுபடியும் போராடுகின்றனர் பெரு நாட்டின் மக்கள்.
பெருவின் சுரங்கத்தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம்:
பெருவின் சுரங்கத்தொழிலாளர்களின் அந்நாட்டின் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
செப்டம்பர் 10 அன்று, பெருவியன் சுரங்கத் தொழில்துறை தொழிலாளர்கள் கூட்டு பேச்சுவார்த்தைக்கான உரிமை, சம்பள உயர்வு மற்றும் சிறந்த வேலை நிலைமைகளைக் கோரி காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் விரொதக் கொள்கையானது, தொழிலாளர் உரிமைகளைப் பறித்தல், ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பறித்தல் ,ஓய்வுதியப் பலனைக் குறைத்தல், இழப்பீடு இல்லாமல் பணீநிக்கம்,தற்காலிக பணியாளர்களை ஊக்குவித்தல் போன்றவைகளுக்கு வழிவகுத்து முதலாளிகளுக்கு சேவை செய்வதாக கூறி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தலைநகர் லிமாவில், நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிளாசா சான் மார்டினுக்கு அணிவகுத்துச் சென்றனர், இரண்டாம் நாளான செப்டம்பர் 11 அன்று, லிமாவில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர், அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, அவர்களின் பதாகைகளை பறிமுதல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்க நிறுவனங்கள் தங்கள் வருவாயை 50% வரை அதிகரித்துள்ளன என்றும் இலாபங்கள் ஆண்டுக்கு 160% மற்றும் மொத்தம் 29 பில்லியன் சோல்கள் (சுமார் 7 பில்லியன் டாலர்கள்) அதிகரித்துள்ளன என்றும் FNTMMSP இன் பொதுச் செயலாளர் ஜார்ஜ் ஜூரெஸ் தெரிவிக்கிறார். ஆனால், தொழிலாளர்கள் 2% வருடாந்திர ஊதிய உயர்வை மட்டுமே பெறுகிறார்கள்,என்று அவர் கூறுகிறார்.
சுரங்கத் துறை பெருவின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும். பெரு, செப்பு, வெள்ளி, துத்தநாகம் மற்றும் தகரம் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் ஏழாவது இடத்தில் உள்ளது.
சிலியின் வலதுசாரி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து சிலி மக்களின் போராட்டம்:
வலதுசாரி அரசான சிலியின் ஜனாதிபதி செபாஸ்டியன் பினெராவின் சமூக விரோதக் கொள்கையை கண்டித்து , செப்டம்பர் 5 ம் தேதி, நூற்றுக்கணக்கான மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகள், தேசிய எதிர்ப்பில் சேர்ந்து சிலி முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர், இந்த அணிதிரட்டலின் முழக்கம் “நாங்கள் சோர்வாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம். (We are tired, we are united)
மக்கள் தங்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, வேலைவாய்ப்பு மற்றும் சிறந்த ஓய்வூதியங்கள் போன்ற அடிப்படை உரிமைகளை கோருவதே இந்த தேசிய அணிதிரட்டலின் பின்னணியில் உள்ள ஒரு முக்கிய காரணமாகும் என்கின்றனர். ஜனாதிபதி. பினெராவின் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட மூன்று தொழிலாளர் எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க எதிர்ப்பு மசோதாக்கள், வேலை நாட்களின் நெகிழ்வுத்தன்மை, தொழிலாளர் இயக்குநரகத்தின் (டி.டி) நவீனமயமாக்கல் போன்றவற்றை எதிர்த்து மக்கள் அணிதிரண்டனர்.
இந்தப் போராட்டத்தை காவல்துறையானது, கண்ணீர்ப்புகை, நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தது.. அடக்குமுறையின் போது ஏராளமானோர் காயமடைந்தனர். தொழிலாளர் யுனைடெட் சென்டரின் (சி.யு.டி) தேசிய கவுன்சிலரான மார்கோஸ் கேனலேஸுக்கு முழங்கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
https://peoplesdispatch.org/2019/09/06/violent-police-repression-during-national-protest-in-chile/
https://peoplesdispatch.org/2019/08/27/chileans-protest-president-pineras-labor-reforms/
ஆந்திராவில் நடைப்பெற்ற சுகாதார ஊழியர்களின் போராட்டம்:
இந்தியாவின் -ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள லெனின் மையத்தில் ஆகஸ்ட் 26 ம் தேதி, ஆசாவின் சுகாதாரத் (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்) தொழிலாளர்கள் ஏராளமானோர் திறனின் அடிப்படையிலான ஊதியத்தை எதிர்த்தும், தங்களுக்கு வழங்கப்படக்கூடிய சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியான மாதம் ரூ 10000 சம்பளத்தை வழங்கவேண்டும் என்றும், திறனின் அடிப்படையில் உருவாக்கும் வேலையின் தர நிர்ணய முறையை(Grading system) எதிர்த்தும் போராடினர்.
ஏ,பி,சி என்று தரங்களாக தங்களை வேலையின் தர நிர்ணய முறை அடிப்படையில் பிரிப்பதாகவும் அதில் ஏ கிரேடுக்கு ரூ 10,000 ஊதியம் பி கிரேடுக்கு ரூ 5000 ஊதியம் சி கிரேடுக்கு ரூ 3000 ஊதியம் என்று தொழிலாளர்களை பிரிக்கும் முறைக்கு எதிராக அத்தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.இதில் ஏ கிரேடு பிரிவில் தேர்ச்சி பெறுவது என்பது கடின இலக்காக உள்ளது. நாங்கள் ஏ கிரேடு என்ற மதிப்பையும் அடைய முடியாது அதே சமயத்தில் பத்தாயிரம் ஊதியமும் பெற முடியாது என்ற போராடிய தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சங்க உரிமைக் கோரி மியான்மரில் தொழிலாளர்கள் போராட்டம்:
மியான்மரில் தொழிற்சங்கம் அமைக்க முனைந்த இரண்டு தலைவர்களை பணிநீக்கம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தியும், தொழிலாளர்களின் உரிமைகளான தொழிற்சங்கத்தை அமைக்கக் கோரியும், மியான்மரில் தொழிலாளர்கள் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி சுமார் 4600 தொழிலாளர்கள் போராடினர். நாங்கள் ,தொழிலாளர்கள் அமைச்சகம்,, நகர கமிட்டி, என்று எல்லா அரசு உறுப்புகளிடமும் முறையிட்டும் எங்கள் தொழிலாளர்கள் உரிமை மறுக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இந்த அரசு தொழிலாளர்கள் உரிமைக்கு செவி சாய்ப்பதில் செவிடன் போல் இருப்பதாக அப்போராட்டத்தில் பங்குப் பெற்ற தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
செய்தி ஆதாரங்கள்:
Peoples dispatch