தொழிலாளர் வேலை நிறுத்தம், வரப்போகும் தேர்தல் – ஐ.டி ஊழியர்கள் விவாதம்

 

26-01-2019 அன்று நடைபெற்ற பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு  சங்கக் கூட்டத்தில் இன்றை ய தொழிலாளர் இயக்கத்தின் நிலையை பற்றியும், ஜனவரி 8,9 தேதிகளில் நடந்த அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றியும், தற்போது தமிழ்நாட்டில் நடந்து வரும் ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

மேலும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்திய அரசியல் நிலைமை பற்றி விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இது தொடர்பான சங்க உறுப்பினர்களின் கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதாக திட்டமிட்டுள்ளோம். அடுத்து வரவிருக்கும் கட்டுரைகள் – “தொழிலாளி வர்க்க அரசியல் எது?”, “பத்மா விருதுகளா, பா.ஜ.க விருதுகளா?”, “ஜனநாயகம் – அடுத்து என்ன?”.

1. ஜனவரி 8,9 தேதிகளில் நடந்த அகில இந்திய வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம் எதற்காக?

1926-ல் காலனிய ஆட்சியாளர்களால் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான தொழிற்சங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் போராட்டங்களால் முதலாளிகளின் உற்பத்தி பாதிக்கப்படாமல் ஒழுங்குபடுத்துவதற்காக அந்த சட்டம் இயற்றப்பட்டது. காலனிய ஆட்சியின் கீழ் மற்ற இந்திய மக்களுக்கு எந்த ஜனநாயக உரிமையும் இல்லாத காலத்திலேயே தொழிலாளி வர்க்கத்துக்கு சங்கமாக அணிதிரளவும், முதலாளிகளை எதிர்த்து போராடவும் ஜனநாயக உரிமை கிடைத்தது. அதன் பிறகு 1947 சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் என்று தொழிலாளர் உரிமைகளுக்காக அடுத்தடுத்து 44 மைய சட்டங்கள் இயற்றப்பட்டன. அவை தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை சட்ட ரீதியாக அங்கீகரிக்கின்றன.

இந்தத் தொழிலாளர் சட்டங்கள் பல்வேறு போராட்டங்களின் ஊடாக 1960-70களில்தான் முறையாக அமலுக்கு வர ஆரம்பித்தன. ஆனால், 1990-களில் இருந்தே அவை நீர்க்க வைக்கப்படுவது தொடங்கி விட்டது.

இப்போது தொழிலாளர் உரிமைகளுக்கான 44 மத்திய சட்டங்களையும் இணைத்து 4 வழிகாட்டல் தொகுப்புகளாக மாற்றுவதற்கு மோடி அரசு முயற்சித்து வருகிறது. மேலும், சட்ட திருத்தங்களை நிறைவேற்றுகிறது. உதாரணமாக, தொழிற்சங்கம் தொடங்குவதற்கான குறைந்த பட்ச ஊழியர் எண்ணிக்கையை 7 பேர் என்று இருப்பதை மொத்த தொழிலாளர்களில் 10% அல்லது 100 பேர் இதில் எது அதிகமோ அதை கொண்டிருக்க வேண்டும் என்று மாற்ற உத்தேசிக்கிறது.

மோடி அரசின் இந்த நோக்கங்கள் நிறைவேறினால் இப்போது இருக்கும் சட்ட ரீதியான தொழிலாளர் உரிமைகள் வெறும் வழிகாட்டல்கள் என்று நீர்த்துப் போக வைக்கப்படும். இது 100 ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் அனுபவித்து வந்த சட்ட ரீதியான உரிமைகளை பறித்து விடுவதில் போய் முடியும். முதலாளிகள் எந்த பயமும் இல்லாமல் வெளிப்படையாக வேலை நேரத்தை அதிகரிப்பதும், சம்பளத்தை வெட்டுவதும், நினைத்த நேரத்தில் வேலையை விட்டு அனுப்புவதும் சட்ட ரீதியாக்கப்பட்டு விடும்.

பா.ஜ.க ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தில். 2014-ம் ஆண்டில் தொழில் தகராறு சட்டம், தொழிற்சாலை சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழில் பழகுனர் சட்டம் ஆகியவை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தப்பட்டு விட்டன. மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு  சட்ட திருத்தங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பினால் நாடாளுமன்றத்தில் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையின் தீவிரத்தன்மை தெரிந்தும் ஏன் அனைத்து தொழிற்சங்கங்களும் ஏன் எதிர்க்கவில்லை?

தொழிற்சங்கத்தின் அரசியல் உணர்வும் நிலைப்பாடும்தான் இதைத் தீர்மானிக்கிறது. பல தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பார்த்து பயப்படுபவர்கள். போனஸ், சம்பள உயர்வு என்று சலுகைகள் வாங்கிக் கொடுப்பதை செய்வார்கள், ஆனால் முதலாளித்துவத்தை பாதுகாத்து நிற்பவர்கள். எனவே, தொழிலாளி வர்க்க ஒற்றுமையை ஆதரிக்க மாட்டார்கள்.

ஐ.டி ஊழியர்களாகிய நாம் இந்த 44 தொழிலாளர் சட்டங்களை படித்து, அவை பற்றி எழுதுவது, விளக்குவது என்று தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை பரப்ப பங்களிப்பு செய்ய வேண்டும்.  மேலும், தொழிலாளர் வர்க்க அரசியலை கற்றுக் கொண்டு பரப்ப வேண்டும்.

ஜனவரி 8,9 தேதிகளில் நடந்த அகில இந்திய வேலை நிறுத்தம் தமிழ்நாட்டில் பெருமளவு வெற்றியடையவில்லை. தமிழகத்தின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் 8, 9 தேதிகளில் விடுப்பு எடுக்கக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி அரசு ஊழியர்களை அச்சுறுத்தியிருக்கிறார்.

தமிழக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடுவதில் யாருக்கும் சளைத்ததில்லை. கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் யமஹா தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள் என பல்வேறு பிரிவினர் தமது கோரிக்கைகளுக்காக போராடினார்கள். இப்போது அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் போராடுகின்றனர்.

தொழிற்சங்க நிர்வாகிகளை வேலை நீக்கம் செய்தது தமது நலன்களோடு தொடர்புடையது என்று உணர்ந்து யமஹா தொழிலாளர்கள் 750 பேரும் களத்தில் இறங்கி போராடினார்கள். அது போல இந்தச் சட்டங்கள் திருத்தப்பட்டு விட்டால் நமது பணியிட உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டு விடும் என்பதை புரிந்து கொண்டு தொழிலாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி போராட வேண்டும்.

மேலும் நம் நாட்டில் கூலித் தொழிலாளர்கள் உழைக்கும் மக்களில் பாதி பேர்தான், அவர்களிலும் யூனியனாக திரண்டவர்கள் அதில் 5-ல் ஒரு பகுதி கூட இல்லை. இதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிற பிரிவு மக்களிடம் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சாரத்தை கொண்டு சேர்க்க வேண்டும், அவர்களது பிரச்சனைகளுக்கும் தொழிலாளர்கள் நிற்க வேண்டும் .

2. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி “நாம் அளிக்கும் வாக்குகளும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளும்! பன்றி தொழுவமும் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலும்”

வாக்குப் பதிவு எந்திர மோசடிகள் பற்றியும் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கு தேர்தல் ஆணையம் செய்யும் முயற்சிகள் பற்றியும் பேசப்பட்டது.

ஆனால், நியூஸ் 18 ரிலையன்ஸ், நியூஸ் 7 வைகுண்ட ராஜன் என்று ஊடகங்கள் கார்ப்பரேட் முதலாளிகள் கையில் உள்ளன. எனவே, தேர்தல் என்பதும் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் அரசியல் கட்சிகளுக்கிடையே நடக்கும் போட்டியாக மாறியிருக்கிறது.

நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருந்தாலும் அதிகாரிகளும், நீதிபதிகளும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர்கள் நிரந்தரமானவர்கள். மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்படாதவர்கள். அவர்கள் கையில்தான் உண்மையான அதிகாரம் உள்ளது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களித்து பிரச்சனைகளை தீர்த்து விட முடியுமா?

கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை எடுத்துக் கொள்ளலாம். தேர்தல் வாக்குறுதிகள் பல ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் திட்டங்களாக மாற்றப்படாமல் உள்ளது. இதற்குக் காரணம் அளிக்கப்படும் வாக்குறுதிகள் அறிவியல் பூர்வமாக செயல் வடிவமாக இல்லாமல், திரைக்கதை வசனம் போல உள்ளன. எப்படியாவது மக்களின் வாக்குகளைக் கவர்ந்து ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்ற கட்சிகளின் வியாபார நோக்கமே  இதில் முதன்மையாக உள்ளது. இதற்கு பல ஆயிரம் கோடிகளில் செலவு செய்து விளம்பர இயக்கம் நடத்துகின்றன காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகள். இது போக ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் பல கோடி செலவிடுகின்றனர்.
10#YEARSCHALLENGE போல் 2009 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன என்று நாம் கேள்வி எழுப்பினால் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் கட்சிகளின் முகத்திரையை கிழிக்கலாம். விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஊழல் ஒழிப்பு ஆகியவை ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளாலும் பேசப்படும் பிரச்சனைகள். அவை வரவிருக்கும் தேர்தலிலும் பேசப்படுவதற்காக இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றன.

இப்போதைய தேர்தல் ஜனநாயக முறையில் குறைகள் இருக்கலாம். ஆனால் இதை எதிர்த்தால் வேறு என்ன? மாற்று இல்லாமல் பேசக் கூடாது என்று கருத்து சொல்லப்பட்டது.

இருப்பதை எதிர்க்கக் கூடாது என்பது மனித குல முன்னேற்றத்துக்கே விரோதமானது. அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான அடிமை முறை, இந்தியாவில் ஆங்கிலேயர் காலனிய ஆட்சி முறை போன்றவற்றை எதிர்த்து பரந்து பட்ட மக்கள் போராடி மாற்றியது போல இப்போதைய அரசியல் முறையும் இதை விட சிறந்த முறையாக மாறும்.  ராஜராஜசோழன் போன்ற மன்னர்கள் இல்லாமல் ஒழிந்தது போல, கல்வி வள்ளல்களும், சாராய அதிபர்களும், ரியல் எஸ்டேட் முதலைகளும், கார்ப்பரேட் பணக்காரர்களும் இல்லாமல் மறைந்து போய் உண்மையான ஜனநாயகம் மலரும்.

எது மாற்று என்றால், நமது சங்கம் போன்ற நடைமுறையே ஒரு வகையில் மாற்றுதான். பிரதிநிதிகளை அனைத்து உறுப்பினர்களும் கூடி தேர்ந்தெடுப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே முடிவுகளை அமல்படுத்தும் நிர்வாகிகளாகவும் இருப்பது, உறுப்பினர்களுக்கு மாதாந்திரம் கேள்வி கேட்கும் உரிமை, பிரதிநிதிகளுக்கு பதில் சொல்லும் கடமை இருப்பது, ஒரு நிர்வாகி மீண்டும் மீண்டும் தவறுகள் செய்தால் அவரது பதவியை ரத்து செய்யும் உரிமை என்று வேர் மட்ட ஜனநாயகம் வேண்டும். இதை நாடு முழுவதும் கட்டி எழுப்புவதுதான் உண்மையான ஜனநாயகம்.

வரவிருக்கும் தேர்தல் நேரத்தில் 4-5 மாதங்கள் மக்கள் தேர்தலை பற்றியே பேசுவார்கள். ஊடகங்கள் இந்தத் தலைப்பில் செய்திகள் வெளியிடும், பல்வேறு கட்சிகளின் பிரச்சாரங்கள் நடக்கும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் நமது சங்கத்தின் கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். நமது கருத்து என்ன என்பதை விவாதித்து முடிவு செய்து விட்டு அதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

40 லட்சம் ஐ.டி ஊழியர்கள் தொழில்நுட்ப திறமை, இந்தியா முழுவதும் நெட்வொர்க், ஐரோப்பா, அமெரிக்காவுடன் உறவாடல் என்று தனிச்சிறப்பான பிரிவாக உள்ளனர். இந்தத் துறையினர் இணைந்தால் இந்தியாவின் தலைவிதியையே மாற்றி விடலாம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/workers-strike-forthcoming-elections-it-employees-discussion/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
காவிரி உரிமை – ஏப்ரல் 28ல் தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

“போர்க்காலத்தில் கூட, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு செல்லும் ஆற்று நீரைத் தடுக்கக்கூடாது” என்பது சர்வதேச நியதி. போரின்போது ஒரு பகை நாட்டு மக்களுக்கே இழைக்க முடியாத...

“8 மணி நேரம்தான் வேலை” – சி.டி.எஸ் பணிந்தது! பு.ஜ.தொ.மு போராட்டம் வெற்றி!

சட்டப்படி, "ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும்படி கோர நிறுவனத்துக்கு உரிமை இல்லை" என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அனைத்து ஐ.டி ஊழியர்களும்...

Close