முதல் பழங்குடி இன மனிதன், தன்னிலும் வலியவர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டி கடவுளைப் படைத்தான். தனது வலிமையான நண்பன் ஒருவன் இந்த மலைகளுக்கு அப்பால் வாழ்கிறான் என தன்னிலும் வலிமை குறைந்தவர்களை நம்ப வைத்தான். தனது கால்களால் மிதித்து பெரும் மலைகளைத் தவிடு பொடியாக்க வல்ல அந்த நண்பனது கோபத்திற்கு பயந்து யாரும் அவனைத் தாக்காமல் பாதுகாத்துக்கொண்டான். அவனை எதிர்த்துப் பின் வருந்துவதை விட, அடிபணிந்து விடுவதே மேல் என மக்கள் முடிவு செய்தனர்.
தங்களை எதிர்க்கும் பிற பழங்குடி இன மக்களை வெல்லவும், கைப்பற்றவும் இந்தக் கூட்டணி உதவும் என தனது சமூகத்தை நம்ப வைப்பது எளிமையாக நடந்தேறியது. உண்மையில் தனது பாதுகாப்பு கேள்விக்குறி தான் என அறிந்த அந்த மனிதன், தனது இனக்குழுவின் தலைவனையும், தனது வலிமை மிக்க நண்பனைக் குறித்து நம்ப வைத்தான்.
வரலாற்றின் முன்னேற்றத்தில், இனக்குழு தலைவர்கள் அரசர்களானார்கள். கடவுளைப் படைத்த சாதுரிய மனிதர்கள் மத குருமார்களானார்கள். பரிணாம வளர்ச்சியில் மக்கள் மலைகளைக் கடக்க வல்லவர்களான போது, மலைக்குப் பின்னே ஏதுமில்லை என மக்கள் அறிந்து கொள்ளாத வகையில், நண்பனாகச் சித்தரிக்கப்பட்ட கடவுள், இடம் பெயர்ந்து வானத்துக்கும், கடலின் ஆழத்துக்கும், ஏறிக் கடக்க முடியாத மலைகளின் அப்புறத்துக்கும் போய்விட்டதாக, கதை மாற்றப்பட்டது.
மக்களை இணங்கச் செய்யவும், ஆட்டுவிக்கவும் மதம் ஒரு வலிமை மிக்க ஆயுதமானது. பல்வேறு கடவுளர்களும், நம்பிக்கைகளும், அதன் அடிப்படையிலான கலாச்சாரமும் நிலவினால், ஐரோப்பாவின் மீதான ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்வது கடினம் என ரோமானிய சாம்ராஜ்ஜியம் புரிந்து கொண்டது.
4ம் நூற்றாண்டில், கான்ஸ்டாண்டைன் அரசன், கிழக்குப் பகுதிகளில் வெற்றி கண்ட ஒரு குயுக்தி மூலம், அன்று நிலவி வந்த பல்வேறு கடவுளர்களைத் தூக்கி எறிந்துவிட்டு , சிக்கலான புராணக் கதைகளை எளிதாக்கி, யூதக் கலாச்சார அடிப்படையிலான, கடவுளின் மகனான தேவதூதனைப் படைத்து, ஒற்றைக் கடவுள் முறையை அமுல்படுத்தினான்.
மதகுருமார்கள் கடவுளின் மகனான தேவதூதனைப் பெற்றெடுக்க ஒரு தாய், தந்தையரைப் படைக்க அரசனால் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பிறந்த அந்த மகன் தான், யேசுநாதரானார். முழு முற்றாக ஒரு புதிய மதத்தை உருவாக்குவது அதிக காலம் எடுக்கும் என உணர்ந்த சபையினர், பழமையான யூத வேதங்களையும், புதிய தேவதூதக் கதையையும் கதம்பமாக்கி, ரோமாபுரியின் புதிய மதமான கிறித்துவத்தின் புனித நூலாக மாற்றினர்.
மிகக் குறுகிய காலத்தில் இது நடந்தேறியதாலும், ஒன்று சேர்க்கப்ப்பட்ட அனைத்து வேத நூல்களையும் முற்றிலுமாக சரி பார்க்க நேரம் இல்லாத காரணத்தாலும் பைபிளில் தவறுகள் இருந்திருக்கலாம். சொற்பொழிவுகள் லத்தீன் மொழியில் இருந்ததாலும், யாரும் முழுமையாக பைபிளைப் படிக்காததாலும், இனி ஆயிரம் ஆண்டுகள் போனாலும் தவறுகள் வெளிவராது.
குருதியில் தோய்ந்த இன அழிப்பு மூலம், கிறித்தவம், ரோம கத்தோலிக்க மதமாக ஐரோப்பா முழுவதும் பரப்பப்பட்டது. ஆதிக் காலம் முதலே, அரசர்களும், மத குருமார்களும் மக்களைத் தமது பிடியில் வைத்திருந்தனர். உயர்பதவி வகிக்கும் குருமார்கள், அரசனிடம் கூறியது இது : “நீங்கள் மக்களை எப்போதும் பராரிகளாக வைத்திருங்கள்; நாங்கள அவர்களை முட்டாள்களாக வைத்திருப்போம்” [இன்றளவும் இதுவே நிலை]
இது சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும், மக்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பாமல் இந்த அறியாமையும், வறுமையும் பார்த்துக்கொள்கிறது. எதிர்த்துக் கேள்வி கேட்காமல் அடிபணியும் இந்தக் கூட்டம், கடவுளின் பெயராலும், அரசனின் பெயராலும் பல போர்களை நடத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசர்களுக்கு எல்லையற்ற அதிகாரத்தை நிறுவக்கூடிய இந்தப் போர்கள் மூலம் கிடைக்கும் அதிகாரம் உண்மையில் மதகுருமார்களின் கைகளில் தான் சென்று சேர்கிறது. [ அரசியல் அதிகாரத்தை செயல்படுத்தும் பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ்ஐ ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் ].
அரசர்கள் மாறினாலும், இந்த மதங்களின் அதிகாரமும், செல்வாக்கும் பரந்து விரிந்து உலகம் முழுக்க கிளை பரப்பியது. இப்படி வரலாறு நெடுகிலும், மதம், இன அழிப்புக்கும், மனித இனத்தின் பேரழிவுக்குமான கூர்மையான ஆயுதமாக விளங்கியது. [ மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும், ஆர்எஸ்எஸ்ஸின் “இந்துத்துவ” அஜெண்டாவை விட்டு வெளியேற முடியாது. ]
மக்களை முட்டாள்களாக வைத்திருக்கும் முயற்சி கால/நாகரிக வளர்ச்சியில் சவாலுக்குள்ளானது. தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்று மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியதும், அரசனை எதிர்க்கத் தொடங்கினர். எனினும், மதத்தின் கட்டுப்பாட்டை மீறாமல், கடவுளின் பெயராலும், தேசத்தின் பெயராலும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். [ ராமர் கோயில் பஜனை, இராணுவத்தை வைத்து தேசபக்தி பஜனை செய்வது இதற்கு ஒப்பானதுதான்; பண மதிப்பிழப்பின் போது, நாட்டைக் காக்க சியாசின் பனி மலையில் இராணுவ வீரர்கள் நிற்கையில், உங்கள் பணத்தை மாற்ற வரிசையில் நிற்க உங்களுக்கு என்ன கேடு என்று மக்களைப் பார்த்துக் கேட்டதை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை ]
20ம் நூற்றாண்டில் நடந்த நவீனமயமாக்கலால், கல்வியறிவு பெற்ற மக்கள் தாங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறோம் என்று புரிந்து கொண்டு திருச்சபையை விட்டு வெளியேறத் தொடங்கினர். மதத்தின் பிடி தளர்ந்தது. குறிப்பாகத் தென் ஐரோப்பாவில், திருச்சபை போதித்த கடவுள் என்ற ஒன்று இல்லை என முழங்கும் ஒரு மக்கள் கூட்டம் உருவாகத் தொடங்கியது. [ அனைத்து மக்களுக்கும் ஆலய நுழைவு உரிமை பெற்றுத் தந்த கடவுள் மறுப்பாளர்களையும், மக்கள் விரோத அரசியல் கொள்கைகளைக் கேள்வி கேட்போரை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் சித்தரிக்கும் கேலிக்கூத்து இந்தப் புள்ளியில் தான் தொடங்குகிறது. உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப கல்வி பரவலாக்கப்படும் போது, அது மதத்தை அச்சுறுத்துகிறது ]
இதனால் மதம் தனது அதிகாரத்தை இழந்து விட்டதென தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது. முன் எப்போதையும் விட கடந்த 50 ஆண்டுகளில் தான் இஸ்லாம் அதிக வலிமை பெற்றது. தனது “எதிரிகளுக்கு” எதிராக மக்களை பயமுறுத்திப் பணிய வைக்க மதத்தின் இரு தூண்களான, ஏழ்மையும்/அறியாமையும் சிறந்த ஆயுதமாகப் பயன்படுகிறது. [ ஹிந்து கத்ரே மே ஹேன் (இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்) என்று சங்கிகள் கலவரத்தைத் தூண்டுவதை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் ]. இதில் கிறித்தவம் பெரிய பாதிப்புக்கு உள்ளாகவில்லை. [ ஒப்பீட்டளவில் கிறித்தவம் அதன் தன்மையிலேயே Liberated ஆன மதம் என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் ]
இது தான் அமெரிக்காவிலும் நடந்தது. அங்கே ஆளும் வர்க்கம் அரசர்களாக இருக்கவில்லை. அதனால் மதம் தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள, தங்கள் பண பலத்தால் அரசியலைக் கட்டுப்படுத்தக் கூடிய பணக்காரர்கள் பக்கம் நின்றது. மேலும் மேலும் மக்கள் கல்வியறிவு பெற்று மதத்தை விட்டு விலகத் தொடங்கியதும், மத அதிகாரத்தின் பிடி ஆட்டம் கண்டது. [ இந்நிலையில் தான் வேதத்தில் அனைத்துமே சொல்லப்பட்டுவிட்டது, புஷ்பக விமானம், மாட்டு மூத்திரம், ப்ளாஸ்டிக் சர்ஜரி போன்ற மூடத்தனங்கள் தலையெடுக்கின்றன ]
மதத்தைத் தாங்கும் இரு தூண்களில் ஒன்றான அறியாமை விலகத் தொடங்கியது. கடந்த சில பத்தாண்டுகளில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி, ஏழைகளை மேலும் ஏழ்மையில் தள்ளினர். எனினும், மதம் ஒற்றைக் காலில் நின்று தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்வது பெரும் சவாலானது. மக்களை ஆட்கொண்ட அறிவொளி பூதத்தை இல்லாமல் செய்வது அத்தனை சுலபமல்ல என்று உணர்ந்த அந்த சாதுரியமான மனிதர்கள், ஒட்டு மொத்த கல்வியையும் மதத்திற்கு சேவை செய்ய ஏதுவாக மாற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்வித்துறையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த நபர்களை முக்கிய பதவிகளில் அமர்த்துவது இதை நிரூபிக்கிறது. [ மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை , vedic mathematics எல்லாம் இவ்வகையே; இந்திய நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். கல்வித்துறையில் சங்கிகள் செய்யும் அட்டகாசங்கள் இதை மெய்ப்பிக்கின்றன ].
கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்ட அதிக எண்ணிக்கையிலான மக்களே மதம் என்னும் ஆயுதம் நிலைத்து நிற்க ஆதாரம். சர்வாதிகாரத்தை ஆட்சியில் அமர்த்தி, ஏழ்மையையும், அறியாமையையும் மீண்டும் அமுல்படுத்துகிறது. அரசியல் அதிகாரத்தை நிர்ணயம் செய்யும் பணக்காரர்களே இப்போது மன்னர்களின் இடத்தில் இருப்பவர்கள். தங்களுக்கு ஏதுவாக அரசாங்கத்தின் அனைத்து உறுப்புகளையும் இயங்கச் செய்ய இவர்களால் முடியும். ஆனால், இன்றளவும், ஏழை விவசாயிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாது சர்ச்சுக்கு போவதும், திருச்சபையைச் சேர்ந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து போதுமான மூளைச் சலவைக்கு ஏற்பாடு செய்கின்றனர். இந்த கொலைக்கருவிகளை செயலிழக்கச் செய்து, இந்தக் கிறுக்குத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே சரியான தருணம்.
மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
மொழிபெயர்ப்பு: பிரியா