யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன?

த்தகைய டெக்னிகல் வேலையாக இருந்தாலும், நிரந்தரத்தன்மை கொண்ட வேலையாக இருந்தாலும், ஆபத்தான வேலையாக இருந்தாலும் கையில காசு; வாயில தோசை என்பது போல இன்று வேலை; நாளை டெர்மினேஷன்… இத்தகைய உத்தரவாதமில்லாத வேலைமுறையை அமல்படுத்த முதலாளிக்கு கட்டற்ற சுதந்திரம். வரி ஏய்ப்பு முதல் காண்டிராக்ட் முறை வரை எதை வேண்டுமானாலும் செய்து தங்குதடையின்றி லாபம் ஈட்டுவதற்கு சுதந்திரம்.

இந்த பின்னணியில்தான் ஆசியாவின் டெட்ராய்டு என்று பீற்றிக்கொள்ளப்பட்ட திருப்பெரும்புதூர் ஒரகடம் தொழிற்பேட்டைப் பிராந்தியத்தில் யமஹா, ராயல் என்ஃபீல்ட் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகளில் போராட்டம் வெடித்தது. சுமார் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த போராட்டங்கள் சில தற்காலிக வெற்றிகளோடும், சமரசங்களோடும் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும், தினசரி விரிவடைந்தும், புதிய புதிய உற்பத்திகளைக் கையாண்டும், நவீனமாகியும் வருகின்ற மோட்டார் வாகனத்துறையில் நீடித்த தொழில் அமைதி ஒருபோதும் சாத்தியமில்லை. சமீபத்திய யமஹா, என்ஃபீல்ட் போராட்டங்களை முன்வைத்து இந்த கள உண்மையை பரிசீலிக்கலாம்.

முதலாவதாக, வாகன உற்பத்தித் துறை பற்றி முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது என்ன?

இந்தியாவின் வாகன துறை, நடப்பு நிதியாண்டில் 14.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில், பயணியர் வாகன உற்பத்தி 9.81 சதவீதம் வளர்ச்சியும், வணிக ரீதியிலான வாகன வளர்ச்சி 41.6 சதவீதமாகவும் உள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 44.27 சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சி 11.50%, வாகன ஏற்றுமதி 26.96% வளர்ச்சி அடைந்துள்ளது.

உலக அளவில் மோட்டார் வாகன விற்பனையில் இந்தியா நான்காவது மிகப் பெரிய சந்தையாக திகழ்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வாகனத் துறை 7.1 சதவீத பங்களிப்பு வழங்குகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மோட்டார் வாகனங்களில் 13% ஏற்றுமதியாகிறது. வாகன ஏற்றுமதியிலும் ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஹூண்டாய், நிசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் சப்ளை செய்வதைப் போல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்ற வகையில் இந்தியாவில் உற்பத்தியை செய்து வருகின்றன. உதாரணமாக 2008-ல் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த கார்களில் 2 இலட்சத்து நாற்பதாயிரம் கார்களையும், நிசான் நிறுவனம் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் கார்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் வாகன உற்பத்தி எண்ணிக்கை 1.37 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு, 1.19 கோடியாக இருந்தது.

சர்வதேச அளவில் உள்ள முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அதேபோல இந்தியாவைச் சேர்ந்த மோட்டார் வாகன நிறுவனங்கள் உலகம் முழுவதும் தங்களது தொழிலை விஸ்தரித்துள்ளனர். மத்திய அரசின் வாகன தொலைநோக்குத் திட்டம்-2026ன்படி, உலக அளவில் முதல் மூன்று இடங்களில் இந்தியாவை கொண்டு வருவது, உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீத பங்களிப்பு வழங்குவது, கூடுதலாக, 6.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவது ஆகியவை இத்துறைக்கான அரசின் தொலைநோக்கு பார்வை.

இவ்வளவு வளர்ச்சியும், லாபமும் முதலாளிகளும் அவர்களது குடும்பங்களும் வேலை செய்து வரவில்லை என்பது உலகத்துக்கே தெரியும். இனிமேலும் திட்டமிடப்படும் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் உழைப்புதான் ஆதாரம் என்பது முதலாளிகளுக்கும் தெரியும். இந்தியாவின் மோட்டார் வாகன தயாரிப்புத்துறை இந்த அளவுக்கு இலாபமீட்டுவதற்கும், வளர்ச்சியடைந்ததற்கும் அரசின் ஒத்துழைப்பும், மலிவான கூலிக்கு கிடைக்கும் தொழிலாளர் சந்தையும் முக்கிய காரணங்கள்.

ஆனால் வாகன உற்பத்தித் துறையில் முதலாளிகள் காட்டும் ஒளிமயமான சித்திரத்துக்கு மாறாக தொழிலாளர்களின் நிலைமை தலைகீழாக உள்ளது. சங்கம் அமைத்த ‘குற்றத்துக்காக’ 2 சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்தது, யமஹா நிர்வாகம். இதுதான் வேலைநிறுத்தம் வெடித்ததன் பின்னணி.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன என்று எடுத்துப் பார்த்தால்தான் யமஹா, மற்றும்  ராயல் என்ஃபீல்ட் நிர்வாகத்தின் கோரமுகம் வெளிப்படும்.

வருடத்திற்கு 1000 ரூபாய் சம்பளம் உயர்வு கேட்டால் மிகப் பெரும் தவறு.3 வருடம் வேலை செய்து விட்டேன் பணிநிரந்தரம் செய்யுங்கள் என்றால் என்றால் அது மிகப் பெரும் தவறு. எனது வீட்டில் சாவு 16ஆம் நாள் காரியத்திற்கு லீவு கேட்டால் அது தவறு. ஏன் எங்களது சங்கத்தை அங்கீகரிக்க மாட்டார்களா என்று கேட்டால் அது மிகப் பெரும் துரோகம்.

போராட்டமே உரிமைகளைப் பெற்றுத்தரும் என்பதை, நிரூபித்த யமஹா தொழிலாளர்கள் போராட்டம்

முக்கியமாக அரசு இயந்திரமான தொழிலாளர் அலுவலகத்தை தொழிலாளர்கள் அணுகினால் அது மன்னிக்க முடியாத பெரும் குற்றம். எங்களுக்கு தேவையான மருத்துவ வசதி கழிப்பறை வசதி, ஓய்வு, விடுப்பு, போனஸ் இதெல்லாம் கேட்டால் துரோகிகள் என்று முத்திரை. அவசர தகவல் தொடர்புக்காக செல்போன் பயன்படுத்துவது மாபெரும் குற்றம்.

இங்கிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் உயிரை பணயம் வைத்துதான் ஆலைகளில் வேலை செய்கிறார்கள். செலவைக் குறைக்க சென்சார் கருவிகளை நீக்கிவிட்டு இயந்திரத்தின் வேகத்தை அதிகரிப்பது, தொழில்நுட்ப பணிகளில் வேலை செய்ய போதிய முன்அனுபவமும், பயிற்சியும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது போன்ற கிரிமினல் குற்றங்களை செய்கின்ற நிர்வாகமானது, விபத்து ஏற்பட்டால் அது, சம்பந்தப்பட்ட ஊழியரது குற்றமே என்று கை கழுவி விடுகிறது. இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற இலக்கோடு தொழிலாளர்கள் போராடியபோது, அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு யமஹா, ராயல் என்ஃபீல்ட் நிர்வாகங்கள் செய்த சதிகள் ஏராளம். நிரந்தரத் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டிய   நேரடி உற்பத்தியில் பயிற்சித் தொழிலாளர்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஈடுபடுத்தி, போராட்டத்தை ஒழித்துக்கட்ட எத்தனித்தது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

வருடம் 8,00,௦௦௦ வாகனங்கள் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்ட் போராட்டத்தால் 28,000 ராயல் என்ஃபீல்ட் வாகனங்கள் உற்பத்தி இழப்பு. வருடத்திற்கு 7.92 லட்சம் வாகனம் தயாரிக்கும் யமஹாவுக்கு, 55 நாட்கள் நடந்த போராட்டத்தால் சுமார் 40,000 வாகனம் உற்பத்தி இழப்பு என்று தோராயமாக கணக்கிடலாம். தொழிலாளி இல்லாமல் முதலாளி வர்க்கத்தால் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது என்ற பேருண்மை உறைக்கிறது.

யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்களின் வெற்றி மிகப் பெரியதா, இழப்புகள் எல்லாவற்றையும் ஈடுகட்டி விட்டார்களா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால் இத்தகைய கேள்விகளோ, அவற்றுக்கான விடைகளோ இரண்டாம்பட்சமானவையே. எமது உரிமைகள் எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும் அவற்றை நிலைநாட்டும் வகையில் தொழிற்சங்க அமைப்பு மூலம் நடத்தப்படும் கூட்டுப்பேரத்துக்கான உரிமையை நிலைநாட்டி விட்டோம் என்று’ யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாடலாம்.

யமஹாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் 2 பேருக்கும் பணி வழங்க யமஹா நிர்வாகம் சம்மதம். வழக்குகள் வாபஸ். ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. போராட்டம் வெற்றி.

மேற்படி செய்திகள் எல்லாம் அத்தகைய கொண்டாட்டத்துக்கான தகுதி வாய்ந்த செய்திகள் தான். இந்த வெற்றியோடு போராட்டம் முடிவதில்லை, முடியப்போவதில்லை. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை எதிரிகளே தீர்மானிக்கின்றனர். சட்டபூர்வ நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் எல்லாம் பலனளிக்காதபோது, வேலைநிறுத்தம் தவிர வேறெந்த நடவடிக்கையும் பலன் தராது என்று உணர்ந்தனர், யமஹா மற்றும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்கள். அரசுத்துறை, போலீசு, நீதிமன்றம் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகள் பக்கம் நின்றபோதும், ஊதியமின்மை, குடும்ப நெருக்கடி ஆகியவை இடையறாது துரத்தினாலும், அவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாக நின்ற, கடும் வெயில், குளிர் பாராமல் தங்களது உரிமைகளுக்காக போராடிய 3,000 ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கும் 750 யமஹா தொழிலாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். இந்த போராட்டத்தை ஆதரித்து களத்தில் துணைநின்ற தொழிலாளி ஒன்றிணைந்த பலம் இத்தகைய வெற்றிக்கு துணை நின்றது என்பதை உணர வேண்டிய தருணம் இது.

– காசிராஜன்

புதிய தொழிலாளி (நவம்பர்-டிசம்பர்’18)

Permanent link to this article: http://new-democrats.com/ta/yamaha-enfield-workers-struggles-what-to-learn/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா

இந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ பங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ வானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம் இத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு...

சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு -  உறுப்பினர் கூட்டம்  தேதி: 21-7-2018, சனிக்கிழமை. நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை இடம் :...

Close