யமஹா : முதலாளியின் சட்ட மீறல், துணை நிற்கும் அரசு, எதிர்த்து போராடும் தொழிலாளிகள்

போராடும் யமஹா தொழிலாளர்களை சந்திக்க தாம்பரம் வழியாக ஒரகடம் வரைக்கும் சென்று கொண்டிருந்தோம்.

எட்டு வழிச் சாலை யாருக்கு?

தாம்பரத்தில் பாலத்தில் மேல் ஏறி வலது பக்கமாக திரும்பி நேராக செல்லும் முடிச்சூர் ரோடில் வந்து கொண்டிருந்த வாகனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறுகிய சாலையாக இருந்தது. வழி நெடுக குண்டும் குழியுமாக, கண்ணை மண்ணுக்குள் புதைத்து வைத்த அளவுக்கு மண் கண்களில் அப்பிக்கொண்டது. தட்டுத்தடுமாறி வண்டியை ஓட்டினோம், இரு சக்கர வாகனத்துக்கே இப்படியென்றால், பிற வாகனங்களை இந்த சாலையில் ஓட்டுவது, அதுவும் அரசுப் பேருந்துகளை ஓட்டுவது நினைத்தே பார்க்க முடியவில்லை. சில கிலோ மீட்டர்கள் சென்றதும் மண்ணிவாக்கத்தில் இடது வலதாக ஒரு பெரிய சாலை தெரிந்தது. அதில் வலப்பக்கமாக சென்றால் படப்பை அதைத்தாண்டி ஒரகடம் வரும். அந்த சாலையில் வண்டியை திருப்பியதும் எதிரில் சில நூறு மீட்டருக்கு வாகனங்கள் செல்வது தெரிகிறது, அவ்வளவு பெரிய சாலை.

மக்களுக்காக நான்கு வழிச் சாலைகள், எட்டு வழிச் சாலைகள் என்று சொல்கிறார்கள், ஆனால் இதுவரை மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள் இருப்பதற்கும், தற்போது மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும் சாலைக்கும் ஒப்பிடுகையில் ஏதோ ஒன்று உறுத்தியது. இந்த சாலைகள் குண்டும் குழியுமாக இல்லை.

யமஹா ஆலை இருக்கும் இடம்

ஆங்கங்கே சிறியதும், பெரியதுமாக சில ஆலைகள் தென்பட்டன. நிறைய கன்டெய்னர் லாரிகளும், டிப்பர், சரக்கு லாரிகளும் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. பல்வேறு ஆலைகளின் பேருந்துகள் தொழிலாளிகளை நிரப்பிக்கொண்டு வந்தன. ஒரகடம் நெருங்குகையில் தூரமாக ஒரு பாலம், அந்த ஊரையே காங்கிரீட்டால் மேற்கூரை கட்டி மறைத்து வைத்திருப்பது போன்ற ஒரு பிரமிப்பை கொடுத்தது. ஜான்சன், அப்போலோ போன்ற ஆலைகளைப் பார்த்ததும் ஒரகடம் வந்துவிட்டோம்.

“யமஹா ஆலை எங்கு உள்ளது” என்று மேற்கூரைக்கு அடியில் நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்தோம், ஆலைகளிலிருந்து தொழிலாளிகளை அழைத்துச் செல்லும் பேருந்து ஓட்டுனர் போல இருந்தார்.

“வலது பக்கமாக ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர் சென்றால் வல்லக்கோட்டை என்று ஒரு பெயர் பலகை இருக்கும், அதிலிருந்து இடது பக்கமாக திரும்பி செல்ல வேண்டும்” என்றார். இன்னும் ஏழெட்டு கிலோ மீட்டரா என்று நினைத்துக்கொண்டே நன்றி கூறிவிட்டு வண்டியை செலுத்தத் துவங்கினோம்.

திரும்பும் இடத்தில் இருந்த மிகப்பெரிய லாட்ஜ் & ஓட்டலைப் பார்த்ததும் ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறார் என்ற காமடி நினைவுக்கு வந்தது. வலப்பக்கம் பெரிய மின் பகிர்மான நிலையம் இருந்தது, சாலைகளுக்கு மேலே ஊஞ்சலைக்கட்டி விட்டது போல மின்சார வயர்கள் சென்று கொண்டிருந்தன.

வல்லக்கோட்டை, இடது பக்கமாக திரும்பினால் அதே அளவுக்கு அகலமான சாலை சென்றது, ஆனால் ஆள் நடமாட்டமோ வாகன போக்குவரத்தோ இல்லாமல் இருந்தது என்னும் அளவுக்கு இருந்தது. திரும்பியதும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்தோம். “மூன்றாவது ரைட் எடுத்தா யமஹா வரும்” என்று ஆட்டோ ஓட்டுனர்களுக்கே உரிய துல்லியமான வழிகாட்டலைக் கொடுத்தார்.

தொழிலாளர்களின் உழைப்பு

தொழிற்சாலைகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக இருந்தன. ஆனால், ஒரு டீக்கடைகூட இருக்கவில்லை. பேருந்து நிறுத்தம் கூட இல்லை, நகர பேருந்துகள் ஓடினால்தானே பேருந்து நிறுத்தம். பல்வேறு புதிய ஆலைகளுக்கான கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கு தெரிந்த, முகங்களில் வடமாநிலத் தொழிலாளர்களது சாயல் இருந்தது.

தூரத்தில் ஒரு பந்தல் தெரிந்தது, அங்குதான் யமஹா தொழிலாளிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பந்தலுக்கு வெளியில் கட்டியிருந்த பேனரில் போராட்ட செய்தி எழுதப்பட்டிருந்தது. அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக யமஹா தொழிலாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த தோழர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரை ஒரு புகைப்படம் எடுத்தோம், புகைப்படம் எடுப்பதைப் பார்த்ததும் ஒரு தொழிலாளி “யார் நீங்கள்? என்ன வேண்டும்?” என்று விசாரித்தார். விசயத்தை சொன்னதும் “வீடியோ எடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றனர். தொழிலாளர்கள் ஒரேமாதிரியாக யுனிபார்ம் அணிந்திருந்தனர்.

யமஹா

“அனைத்து பொருட்களிலிருந்தும் தொழிலாளிகளது உழைப்பை தவிர்த்துவிட்டு பார்த்தால் அது ரா மெட்டீரியல் தான். அதற்கு மேலாக மதிப்பை படைப்பது தொழிலாளிகள் தான்”

பந்தலில் பேசிக்கொண்டிருப்பவரது உரையில் “அரசுக்கும் முதலாளிகளுக்கும் ஏதோ புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம், என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் எங்களை கைது செய்ய தனியார் நிறுவனங்களின் வாகனங்கள் போராட்டங்களை மறைத்து வந்து நிற்கின்றன. இதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தமா?
தொழிலாளிகள் என்ன அடிமைகளா? இங்குள்ள அனைத்து பொருட்களும் இந்த தொழிலாளிகளது உழைப்பால் தான் உருவாக்கப்படுகிறது. ”

நாங்கள் வந்த வாகனம், கடந்து வந்த சாலைகள், எதிரிலும், எங்களை கடந்தும் சென்ற வாகனங்கள், இரு பக்கமும் நின்றிருந்த ஆலைகள், ஊரையே மறைத்து நின்ற மேற்கூரை போன்ற பாலம், மின் நிலையம், ஊஞ்சல் போன்று சென்றுகொண்டிருந்த மின்சார வயர்கள், உயர் அழுத்த கோபுரங்கள், சாலைகள், ஆட்டோ, இவை அனைத்திலும் தொழிலாளிகளது உழைப்பை நீக்கிவிட்டால் என்ன மிஞ்சும்? என்று கேள்வி எழுந்தது.

தொழிலாளிகளிடம் தற்போது என்ன நிலவரம் என்று விசாரித்தோம். “சங்கம் துவக்கியதற்காக இரண்டு தொழிலாளிகளை வேலையை விட்டு நீக்கினார்கள், தொழிலாளர் நல அலுவலரிடம் முறையிட்டோம். நிர்வாகம் விசாரணைக்கு வரவில்லை. நிரந்தரத் தொழிலாளிகள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் இறங்கினோம். தொழிலாளர் நல அலுவலருடனான பேச்சுவார்த்தைக்கு வராத நிர்வாகம் நேராக நீதிமன்றம் சென்று ஆலைக்கு வெளியில் 200 மீட்டர் தாண்டி போராடும் படி ஒரு ஆணையைப் பெற்று வந்தது. நாங்களும் ஆலைக்கு வெளியில் 200 மீட்டர் தாண்டி வந்து இங்கு அமர்ந்தோம். அதன் பிறகு நடந்த விசாரணையில் தொழிலாளிகளை வேலையை விட்டு நீக்கியது தவறானது உடனடியாக வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தொழிலாளிகள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது, நீதிமன்ற உத்தரவை மதித்து மறுநாள் வேலைக்கு சென்றோம், ஆனால், வாசலிலேயே மறித்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டது தவறு, இனிமேல் வாழ்நாளில் இதுபோன்ற தவறில் ஈடுபடமாட்டேன், ஈடுபட்டால் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என்றெழுதிய ஓர் பேப்பரில் கையொப்பம் கேட்டது நிர்வாகம். அதனை ஏற்க மறுத்த தொழிலாளிகள் மீண்டும் இங்கு வந்து அமர்ந்து தொடர்ந்து போராடுகிறோம். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை” என்றார் அந்தத் தொழிலாளி.

அதே நேரம் யமஹா என்று பெயரிட்ட பேருந்துகள் தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருப்பதைக் காட்டி கேட்டபொழுது, “ஒப்பந்தத் தொழிலாளிகளை வைத்து வாகன உற்பத்தியை நடத்துகிறார்கள். இந்த வாகனங்கள் எல்லாம் சாலைகளில் ஓடப்போகின்றன, அதை நினைத்தால்தான் கொஞ்சம் தயக்கமாக உள்ளது. இவற்றின் உற்பத்தி தரம் எப்படியிருக்கும்” என்பது கேள்விக்குறிதான் என்று வருத்தத்துடன் சொன்னார்.

சட்டத்தை மீறும் முதலாளியும், அதற்கு துணை நிற்கும் அரசும்

பந்தலுக்கு எதிர்புறம் சில காவலர்கள் அமர்ந்திருந்தனர். அந்தப் பக்கமாக ஒரு நாற்பது போலீசார் இருப்பதாகக் கூறினார். அவர்கள் தான் நிர்வாகத்துக்கும், தொழிலாளிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறினார்.

“போலீசார் எதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர் அலுவலர்கள் தானே பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்” என்று கேட்டோம்.

“அட நீங்கவேற இங்க எல்லாம் சட்டப்படியா நடக்குது, நீதிமன்றம் சொன்னதையே கேட்காமல் நிர்வாகம் தமது விருப்பத்திற்கு தானே நடக்கிறது. காவல்துறைதான் அவர்களுக்கு எல்லாமும். காவல்துறையினருக்கான உணவு, டீ காபி பிஸ்கட் எல்லாமும் நிர்வாகம் தான் செய்து கொடுக்கிறது. காவல்துறை ஜப்பான் நிறுவனத்திற்காகத்தானே வேலை செய்கிறது” என்றார்.

“உள்ளே 50-60 ஜப்பான் ஆட்கள் உள்ளார்கள், பிற உயர் அதிகாரிகள் உள்ளார்கள்” என்றனர்.

அந்த பெரிய ஹோட்டல் நினைவுக்கு வந்தது, தொழிலாளி வாங்குற சம்பளத்துக்கு அந்த ஹோட்டலெல்லாம் நினைச்சுகூட பார்க்க முடியாது. அது ஜப்பானிய ஆண்டைகளுக்கும், அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கு ஓடி வரும் அதிகார வர்க்கத்துக்கும் பயன்படுகிறது என்று தெரிந்தது.

“சட்டப்படி நடந்துகொள்ளுங்கள் என்று சொல்ல ஒரு தொழிற்சங்கம் தேவைப்படுகிறது, அதை மீறும்போது வழக்காகிறது, அதில் வழங்கப்படும் தீர்ப்புகளை மதிக்காமல் மீண்டும் தொழிலாளிகளை ஒடுக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளிகளை அடிக்கிறார்கள், அப்படியானால் இந்த சட்டமும், சர்க்காரும் யாருக்காக உள்ளன என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

தொழிலாளர்களில் பலவகை

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் நெடுக பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளிகள் நடந்தே சென்றுகொண்டிருந்தனர். P.D.BALAN என்ற டி சர்ட் அணிந்த பல தொழிலாளிகள் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பீகாரிலிருந்து வந்திருப்பதாக சொன்னார்கள், “யமஹா தொழிலாளிகள் போராட்டம் பற்றி தெரியுமா” என்று விசாரித்தோம்.

“தெரியும், நாங்கள் சப்ளை செய்யும் நிறுவனம்தான். அங்கு நடக்கும் போராட்டத்தால் எங்களுக்கு வேலை குறைந்துவிட்டது. அதனால் சம்பளமும் குறந்துவிட்டது. நாங்களே ஊர் விட்டு பிழைக்க வந்துள்ளோம், நாங்கள் என்ன செய்ய முடியும். வந்த எடத்திலும் வேலை போய்விட்டது என்றால் என்ன செய்வது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
கிராம பாதைகள் ஆட்டோ செல்லும் அளவிற்குதான் பாதைகள் இருந்தன.

“ஸ்ரீபெரும்புதூர் எப்படி செல்வது” என்று எதிரில் இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவரிடம் விசாரித்தோம், “இந்த பக்கமாக செல்லுங்கள்” என்று வழி காட்டினார். அவர் யமஹா தொழிற்சாலைக்கு அருகில் தானே இருக்கிறார், போராட்டம் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டோம்.

“இந்த கார்ப்பரேட் கம்பேனிக்காரனுக எல்லாமே படு மோசமானவனுகளா இருக்கானுக சார். சரியா சம்பளம் கொடுப்பது இல்லை, ஏமாற்றி விடுகிறானுக,” என்று அவர் வேலை செய்த தொழிற்சாலையின் அனுபவத்தை சொன்னார். “தொழிலாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் உங்கள் பஞ்சாயத்து போர்டுக்கு வரி கட்டமாட்டோம், நேரடியாக அரசாங்கத்துக்கு செலுத்திவிடுவோம்” என்று யமஹா நிர்வாகம் ஊர் மக்களை மிரட்டுவதாக தெரிவித்தார்.

முதலாளிகள் இல்லையென்றால் நமக்கு யார் வேலை கொடுப்பார்கள் என்று பலர் கேட்கிறார்கள்.

ஆனால் முதலாளிகளுக்கு சாலைகள், பாலங்கள், அமைத்துக் கொடுத்து முதலாளிகளுக்கு  கடனும் கொடுப்பது நமது தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பிலிருந்துதான். அதன் பிறகு ஆலைகளில் முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் உழைத்துக் கொடுப்பதும் தொழிலாளிகள் தான்.

ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு தொழிலாளிகள் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதும் தொழிலாளிதான்.

“போராட்டம் சரிதான், ஆனால் நாங்களே கான்டிராக்டில் வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ளோம், என்ன செய்ய முடியும்” என்று சொல்வதும் தொழிலாளிதான்,

“உள்ளூருக்கு வரி கட்டமாட்டேன் என்று மிரட்டுகிறார்கள்” என்று சொல்வதும் தொழிலாளிதான்.

தற்சமயம் இதனை வாசித்துக்கொண்டிருப்பவரும் தொழிலாளிதான்.

ஆனாலும் என்ன, நம்மை நிரந்தரத் தொழிலாளி, கான்டிராக்ட், வேற தொழிற்சாலை என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்.

நான் நிரந்தரத் தொழிலாளி, நீ ஒப்பந்தத் தொழிலாளி என்று இருக்காமல், நான் பெரிய ஆலையில் வேலை செய்கிறேன் நீ சின்ன ஆலையில் வேலை செய்கிறாய், நீ விவசாய கூலியாக இருக்கிறாய், நான் பேண்ட் சட்டை போட்ட தொழிலாளியாக இருக்கிறேன் என்று இல்லாமல் ஒன்றாக நிற்கும் நாள் தான் நம் அனைவருக்கும் விடுதலை.

இதை வேறு எவ்வாறு சொல்வது என்று தெரியவில்லை, தெரிந்தால் நீங்களே சொல்லுங்கள். ஆனால், கொஞ்சம் வேகமாகச் சொல்லுங்கள். நமது நாட்டின் இயற்கை வளங்களையும் நம் மக்களுக்குச் சேர வேண்டிய உழைப்பின் பயனையும் சில முதலாளிகள் அள்ளிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதை பயன்படுத்தி நம்மை மேலும் ஒடுக்குகிறார்கள். இவர்களை இப்பொழுதே தடுக்காவிட்டால் நம்து ரத்தத்தையும் சதையையும் கூட விட்டுவைக்க மாட்டார்கள்.

– பிரவீன்

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தலைவர் சியாம் சுந்தர் எழுதிய இந்தப் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/yamaha-workers-struggle-a-report/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
எச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா?

கில்லி படத்தில் விஜய் சொன்னது போல தம்மாத்தூண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள். நிறுவனம் relieving letter தரவில்லை என்றால் சந்தோஷமாக நீங்கள்...

IT நிறுவனத்தின் அஞ்சல் அறையில் ஊழல் – மின்னஞ்சல்

NASSCOM-ம் அரசும் இந்த விஷயத்திலும் (மனிதவளத் துறையில் நடக்கும் ஆட்சேர்ப்பு மோசடி உட்பட தனியார் துறையிலுள்ள பிற ஊழல் பிரச்சினைகளிலும்) என்ன செய்யப் போகின்றன?

Close