மோடியைத் தாக்கும் யஷ்வந்த் சின்ஹா

மோடி-அமித்ஷா கும்பல் பா.ஜ.க-வின் தலைமைக்கு வந்த பிறகு கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஓரங்கட்டப்பட்டு ஒட்டு மொத்தக் கட்சியையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்தவர்கள் மோடி ஆட்சியை அவ்வப்போது வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். எந்த ஒரு விமர்சனத்திற்கும் இதுவரை மோடியோ பாஜக-வோ பதில் அளித்தது கிடையாது, அப்படியே பதில் சொன்னாலும் அவர்கள் பதவி கிடைக்காத அதிருப்தியில் குற்றம் சாட்டுவதாக கூறித் தப்பிக்கின்றனர்.  அது ஓரளவு உண்மையாகவே இருந்தாலும் அந்தக் குற்றச்சாட்டுகளில் இருக்கும் உண்மையை மக்கள் அனைவரும் அறிவர்.

இந்நிலையில் பாஜக-வின் முன்னாள் உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான, வாஜ்பாய் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த திரு.யஷ்வந்த் சின்ஹாவின் கட்டுரை சென்ற வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வெளியானது. இவரது மகன் ஜெயந்த் சின்ஹா தற்போது மோடியின் அமைச்சரவையில் இருக்கிறார்.

அவரது கட்டுரையில் மோடி அரசின் இந்த நான்கு வருட ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன், சுதந்திர இந்தியாவில் இதுவரை கட்டிகாக்கப்பட்ட நடுவண் அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. பிஜேபி – என்ற ஒரு தேசிய கட்சியின் தற்போதைய தலைமை  உட்கட்சி ஜனநாயகத்தையும் கெடுத்து, குறைந்தபட்ச சகிப்புத்தன்மையையும் இழந்து   மீள முடியாத தோல்வியை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார் அவர். அவரது கட்டுரையில் சொல்லி இருக்கும் முக்கிய கருத்துக்களில் சில தமிழில்…

  1. இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக வளர்கிறது என்ற மத்திய அரசின் கூற்று தவறானது. நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளது. வேகமாக வளரும் பொருளாதாரத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் இந்த அளவிற்கு 4 வருடங்களில் குவியாது.
  2. வேகமாக வளரும் பொருளாதாரத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கமாட்டார்கள், விவசாயிகள் இந்த அளவிற்கு துயரத்தில் இருக்கமாட்டார்கள், சிறு தொழில்கள் இந்த நாலு வருடத்தில் அழிந்தது போல அழிந்திருக்காது. சேமிப்பும் ,முதலீடும் இந்த 4 ஆண்டில் முற்றிலுமாக குறைந்திருக்காது.
  3. ஊழல் ஒரு மோசமான உயரத்தை அடைந்திருக்கிறதது. வங்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது. மோசடிப்பேர்வழிகள் எளிதாக நாட்டைவிட்டு தப்பி செல்ல முடிகிறது. அரசு வேடிக்கை பார்க்கிறது.
  4. முன்பு எப்போதும் இல்லாத அளவு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கற்பழிப்பு நடக்காத நாளே இல்லை என்பது வழக்கமாகிவிட்டது. கற்பழிப்பவனை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு ஆதரவாக ஆளும் தரப்பு பேசுகிறது.
  5. சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தபடுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும் இதுவரை இல்லாத அளவு வன்கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு  சமஉரிமைகள் மறுக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவு மறுக்கப்படுகிறது.
  6. வெளியுறவு கொள்கை என்பது வெளிநாட்டு சுற்றுலா செல்வது, கட்டிப்பிடிப்பது என்ற அளவில் சுருங்கி தோல்வியடைந்துவிட்டது. சீனா நமது உரிமைகளின் மீது  தாக்குதலை தொடுக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை இந்தியாவிற்குள் தொடர்ந்து அனுப்பி வருகிறது. நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். காஷ்மீர் பற்றி எரிகிறது.சாதாரண குடிமக்கள் இதுவரை இல்லாத அளவு துன்பத்தில் உள்ளனர்.
  7. பாஜக -ன் உள்கட்சி ஜனநாயகம் நசுக்கப்பட்டுவிட்டது. கட்சியின் பாராளுமன்ற கூட்டத்தில் கூட MP-க்கள் பேச அனுமதி இல்லை. கட்சிக்குள் தகவல் தொடர்பு ஒரு வழி தொடர்பு என்றாகிவிட்டது. அவர்கள் பேசுவார்கள். நீங்கள் கேட்கவேண்டும்.
  8. பிரதமர் யாரிடமும் பேசுவதில்லை. கட்சி தலைமை அலுவலகம் ஒரு நிறுவன அலுவலகம் போல ஆகி விட்டது. தலைமை செயல் அதிகாரியை பார்ப்பது என்பது முடியாத காரியம். ஜனநாயகம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பாராளுமன்றம் ஒரு தமாஷாகிவிட்டது. பிரதமர் ஒருநாள் கூட எதிர்கட்சியினருடன் கலந்து  ஆலோசித்தது இல்லை.
  9. வரலாற்றில் இல்லாத அளவு உச்சநீதிமன்ற நீதிபதிகளே பேட்டி கொடுக்கும் அளவிற்கு மத்திய அரசு நிர்வாகம் மோசமாக செயல்படுகிறது. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று தீர்ப்பில் சொல்லும் அளவிற்கு நிலமை கைமீறி போயிருக்கிறது.
  10. சென்ற பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி 31 சதவீத ஓட்டுகளைத்தான் பெற்றது. அடுத்த முறை அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்தால் பிஜேபி இருக்கும் இடம் தெரியாது. நான் பிஜேபி-யில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். அமைதி காத்தது போதும். பேசுங்கள் அத்வானிஜி ,ஜோஷிஜி, அரசில் இருப்பவர்களிடம் இருந்து கட்சியையும் நாட்டையும் மீட்டு நல்வழிப்படுத்துவது நம் கடமை.

பாஜக-வின் உட்கட்சி ஜனநாயகப் பிரச்சினையை விட்டுத் தள்ளுங்கள் அது நமக்குத் தேவையும் இல்லாதது. இதில் கூறியிருக்கும் மற்ற குற்றச்சாட்டுகளை பலரும் இதற்கு முன்பிருந்தே சொல்லிக் கொண்டிருந்தாலும், மோடி அரசு அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்திருப்பதை யஷ்வந்த் சின்ஹா ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்.

ஆனால் இவர் கூறியிருப்பது போல அத்வானியோ, ஜோஷியோ அல்லது அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரசோ நம்மைக் காப்பாற்றப் போவதில்லை. அனைத்து அதிகாரங்களையும் தன்னிடத்தில் குவித்து வைத்துக்கொண்டு கார்ப்பரேட் பாசிச ஆட்சியை நடத்தி வரும் மோடி-அமித்ஷாவை மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் மூலம் மட்டுமே வெல்ல முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/yashwant-sinha-slams-modi-govt-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பெரியார் வென்றெடுத்த பேச்சுரிமையை பயன்படுத்திய பார்ப்பனப் பெண்

ஒரு அமைப்பு நடத்தும் கூட்டத்தில் உள்ளே நுழைந்து கேள்வி கேட்டு கூச்சல் போடுவது நாகரீகமற்ற செயல். இருப்பினும் அவரை பேசச் சொல்லி பக்குவமாக செயல்பட்ட அந்த மாணவர்களை...

மே மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல் BPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம் விப்ரோ 2K - இனி செய்ய வேண்டியது என்ன? சங்க நடவடிக்கைகள்...

Close